Tuesday, 17 April 2018

நதிக்கரை நிகழ்வு ஒன்று - கதிரேசன்

நதிக்கரை இலக்கிய வட்டத்தின் முதல் கூட்டம்   கடந்த ஞாயிறன்று இனிதே நடந்து முடிந்திருக்கிறது .உண்மையில் எதிர்பார்த்ததற்கு மேல் இரு மடங்க்காக ஆட்கள் வந்திருந்தனர் (எதிர்பார்ப்பு இரண்டு,நான் ,சுரேஷ் பிரதீப்,வருகை_நான்கு ). ஒருவருக்கொருவர் அறிமுகம் முடிந்ததும் முதலில் தீவிர இலக்கியத்திற்குள் எவ்வாறு வந்தோம்( மாட்டிக்கொண்டோம்) என்பதைகுறித்து பேச்சு துவங்கப்பட்டது .எளிய தலைப்பாதலால் அனைவாரலும் தயக்கம் இல்லாமல் பேச முடிந்தது  .

 
நான் ஒன்றாம் வகுப்பில் பாபு சார் சொன்ன பைபிள் கதைகளில் ஆரம்பித்து பழைய மள்ளிகை கடைகளின் இடுக்களில் கிடந்த சிறுவர் மலர்,தங்க மலர், துப்பறியும் நாவல்களான,ராஜேஸ்குமார் ,சுபா, பின்னர் கல்கி ஜெயகாந்தன் .பின் ஜெயமோகன் என்று என் வாசிப்பு கடந்து வந்த பாதையைப்பற்றிப்பேசினேன்.

அடுத்த நிகழ்வில் நாவல் வாசிப்பு அதில் உள்ள சவால்கள்,ரசனை,நாவலின் வகைமைகள் குறித்து பேசப்பட்டது

நாவலின்(படைப்புகள்) வகைமைகளைக் கண்டு கொள்ளல் குறித்த சுரேஷ் பிரதீப் விளக்கம் :

அடிப்படையில் நாவல் என்பது சமூகம் மேல் வைக்கப்படும் ஒரு விமர்சனம்.

இயல்புவாத படைப்புகள்;

நாவலாசிரியனை படைப்புக்குள் பார்க்க இயலாது.நாம் வாழும் வாழ்வின் இருத்தலை எடுத்துக்காட்டுவது

உதராணம்; ஆரோக்ய நிகேதனம்,

 எதர்த்தவாத படைப்புகள்:

ஆசிரியர் படைப்புக்குள் ஒரு பாத்திரமாக வருவதை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஊகித்து அறிவதற்கான வாய்ப்புகள் இருக்கும்

உதாரணம்.,ஆதிரை

 மீபுனைவு

ஒரு படைபுக்குள் மற்றொரு படைப்பு அல்லது ஒரு புனைவிற்குள் புனைவை பற்றி  விவரிக்கும், எழுதும் படைப்பு

உதாரணம்;விஷ்ணுபுரம்,ஒளிர்நிழல்

 அடுத்த நிகழ்வில் சிறுகதைக்கான வடிவம் பற்றி விவாதிக்கப்பட்டதுக்கப்பட்டது

விவதத்திற்கு எடுத்து கொண்ட சிறுகதைகள்,பொன்னகரம்-புதுமைப்பித்தன் ,விமோசனம்_அசோகமித்ரன் ,நகரம்-சுஜாதா

 பொன்னகரம் சார்ந்த விவாதம்

படைப்பு வெளிவந்த காலத்தை ஒப்பிடுகையில் அது பேச எடுத்துக்கொண்ட கரு முக்கியமானது,வேறு எவ்வகையில் எழுதிருயிந்தாலும்  வடிவம் இந்த அளவிற்கு சரியாக பொருந்தியிருக்காது,

 விமோசனம்

ஆண் பெண் மீது செலுத்தும் அதிகாரம் என்பது ஒரு பாவனை,ஆண் பெண் உறவுகளில் இந்த பாவனை உடையும்போது குடும்ப அமைப்பு சிதைகிறதா?,சமூக அடுக்களில் அதிகாரத்தின் எல்லை ,அது உடையும் தருணம் குறித்து விவாதிக்கப்பட்டது

 
நகரம்

முழுக்கவும் சிறுகதை வடிவத்திற்கு பொருத்தமான கதை, காலச்சூழலை ஏற்றுக்கொள்ள முடியாத தாய் தன் மகளை இழந்த தருணம்

 இவ்விவாததில் கடவுளும் கந்தசாமி பிள்ளையும்-புதுமைப்பித்தன்,மாடன் மோட்சம் –ஜெயமோகன் கதைகள் குறித்த  ஒப்பீடு  விவாதிக்கப்பட்டது

 அடுத்த விவாதம்.

வரலாற்றை எழுதுவது  வாசிப்பது;

புராணங்கள் ,தொன்மங்கள் ,நாட்டரியல் கூறுகள், இவை அனைத்தையும் அடிப்படையாகாக்கொண்டே வரலாறு எழுதப்படவும் படிக்கப்படவும் வேண்டும்.இந்திய வராற்றை ஆராய்ந்த மார்க்சிய ஆய்வுகளின் நிறை,குறைகள் பற்றி பேசப்பட்டது

இறுதியாக

குறுநாவல் அறிமுகம்

தாஸ்தாய்வொஸ்கியின் அழையா விருந்தாளி.

இந்நாவலின் சுருக்கத்தை சொல்லிவிட்டு.நாவல் எனக்குள் எழுப்பிய கேள்வியைப்பற்றிப்பேசினேன்

 இரண்டு வகையான மனம்

நாம் வளர்ந்து வந்த மரபின் மனம்

அனுபவங்கள் இலக்கியங்கள்  சார்ந்த மனம்

 முதல் மனத்தை வென்று இரண்டாம் மனம் மேழேழும்பி வரவேண்டிள்ளது,அது சறுக்கும் ,இடங்கள் தன்னை முற்போக்காக காட்டிக்கொள்ள விழைபவன் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் முதலியன குறித்து விவாதிக்கப்பட்டது.

 நூலகத்தில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் நடுவே அமர்ந்து அவற்றைபற்றி உரையாடுதல் என்பது உன்மையில் பேரானந்தமாகவே இருந்தது

 சீரான நீர்த்துப்போகத விவாதம். அடுத்த வாரத்திற்கான நதிக்கரை சந்திப்பிற்காக இப்போதே மனம் நீச்சல் அடிக்கத்துவங்கிவிட்டது!      

Sunday, 15 April 2018

நதிக்கரை இலக்கிய வட்டம் நிகழ்வு ஒன்று

2016-ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா தான் நான் கலந்து கொண்ட முதல் பெரும் இலக்கிய நிகழ்வு. அங்கு பல நண்பர்கள் அறிமுகமாயினர். சம்பிரதாய அறிமுகங்களைத் தாண்டி இன்றும் நெருக்கமாகத் தொடரக்கூடிய பல நண்பர்களை அந்நிகழ்வின் வழியாகப் பெற்றேன். ஒளிர்நிழல் வெளியான பிறகு முகநூல் வெளியிலும் பலர் நண்பர்களாயினர். ஆச்சரியம் கொள்ளும் வகையில் இலங்கை மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்தெல்லாம் முகநூலில் நட்பழைப்புகள் வந்தன. பலர் நண்பர்களாகத் தொடரவும் செய்கின்றனர். அவ்வகையில் இலக்கிய உலகம் குறித்த புரிதல் எனக்கு உருவாகத் தொடங்கிய காலகட்டமாக சென்ற வருடத்தைச் சொல்வேன். அதில் நிகழ்ந்த ஒரு பிழை புரிதல் எனக்கு நண்பர்களாக இருக்கிற இலக்கிய வாசகர்கள் நவீன தமிழ் இலக்கிய வாசகப் பரப்பின் "சிறு பகுதி" என்ற கற்பனை. ஆனால் நாட்கள் செல்லச் செல்லவே இலக்கிய வாசகர்கள் என்பதே ஒட்டுமொத்த தமிழ் மொழிச்சூழலில் "சிறு பகுதி" என்பதை புரிந்து கொண்டேன். எனக்கு நண்பராக இருக்கும் ஒரு நண்பர் ஏறக்குறைய நவீன தமிழ் இலக்கியத்தின் அத்தனை முன்னோடிகளையும் அறிந்திருப்பார். அந்த நண்பரை இலக்கியம் வாசிக்கும் எல்லா நண்பர்களும் அறிந்து வைத்திருப்பார்கள். குறைந்த எண்ணிக்கையிலான மக்களைக் கொண்ட ஒரு "இனக்குழு" போலத்தான் தமிழ் இலக்கிய வாசகப் பரப்பு இன்றுவரை செயல்பட்டு வருகிறது. இங்கு நிகழும் உக்கிரமான பூசல்கள் குழுச்சண்டைகள் அணி பிரிதல்கள் என இவற்றுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் இவற்றால் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல் தமிழ்ச் சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த குறுகிய வாசகப் பரப்பிலும் இலக்கிய வாசிப்பு ஓரளவு பொருளாதார தன்னிறைவு அடைந்த தமிழகப் பெருநகரங்களிலேயே ஓரளவாவது நிகழ்கிறது. காவிரி டெல்டா மாவட்டங்கள் காவிரித் தண்ணீரை நம்பி நடைபெறும் விவசாயத்தில் நம்பிக்கை இழக்கத் தொடங்கிய பிறகு இப்பகுதி இளைஞர்கள் வேலை தேடி அரபு நாடுகளுக்குச் செல்வதும் கோவை திருப்பூர் போன்ற தொழில் நகரங்களைத் தேடிச்செல்வதும் பெருகத் தொடங்கியது. இன்று டெல்டா பகுதியின் பெரும்பான்மையான உட்கிராமங்களில் முதியவர்களையும் குழந்தைகளையும் பெண்களையும் தான் அதிகம் காண முடியும். ஆகவே நவீன கல்வி கற்றவர்களுக்கு இப்பகுதி உகந்ததாகத் தென்படுவதில்லை. அமைதியான முதுமைக் காலத்தை கழிப்பதற்கு ஏற்ற ஒன்றாகவே டெல்டா பகுதி எண்ணப்படுகிறது. இத்தகைய சூழ்நிலை நிலவும் ஒரு பகுதியில் இலக்கிய வாசிப்பு தமிழகத்தின் மற்ற எந்த மண்டலத்தையும் விட குறைவாக நடைபெறுவது புரிந்து கொள்ளத்தக்கதே.

தஞ்சையில் எழுத்தாளர் கே.ஜே.அசோக்குமார் தஞ்சைக்கூடல் என்ற இலக்கிய கூடல் நிகழ்வை ஒருங்கிணைக்கிறார். ஒவ்வொரு மாதமும் இலக்கிய இதழ்களில் வெளியாகும் சிறுகதைகளை தேர்ந்தெடுத்து விவாதிக்கும் ஒரு களமாக இந்த கூடுகை செயல்பட்டு வருகிறது. எழுத்தாளர் எஸ்.செந்தில்குமார் பேசும் புதிய சக்தி என்ற மாதாந்திர இதழை திருவாரூரில் இருந்து நடத்தி வருகிறார். இவற்றைக் கடந்து வேறெந்த இலக்கியம் சார்ந்த முன்னெடுப்படுகளும் சந்திப்புகளும் டெல்டா பகுதியில் நடைபெறுவதாத எனக்குத் தெரியவில்லை. ஆகவே திருவாரூரில் குறிப்பிட்ட இடமொன்றில் இலக்கியச் சந்திப்புகளை ஒருக்கும் எண்ணம் சில மாதங்களாக இருந்து வந்தது. திருவாரூர் மாவட்ட மையத்தின் நூலகர் ஆசைத்தம்பி அவர்களிடம் நூலகத்தில் கூடுகை நிகழ்த்த இடம் தர முடியுமா என்று கேட்டதுமே அவர் சம்மதித்தார். திருவாரூர் மைய நூலகம் மிக நேர்த்தியாக பராமரிக்கப்படும் நூலகங்களுள் ஒன்று. ஆசைத்தம்பி ஆண்டாள் போன்ற ஆர்வம்மிக்க நூலகர்களால் தொடர்ச்சியாக "செயல்பட்டுக்" கொண்டிருக்கும் ஒரு அரசு நிறுவனம் திருவாரூர் நூலகம். நூலகத்திற்கே உரிய சலிப்பான தோற்றத்துடன் இருப்பவர்களை திருவாரூர் மைய நூலகத்தில் காண முடியாது.

உண்மையில் கூடுகைக்கு இடம் கேட்டு உறுதி செய்து கொண்ட பிறகே இலக்கிய வட்டம் தொடங்கும் முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினேன்.

ஜெயமோகனின் வாசகரான விஜய்கிருஷ்ணன் அவரது நண்பரும் திருவாரூரில் வசிக்கிறவருமான சம்பத் அவர்களிடம் நதிக்கரை இலக்கிய வட்டம் குறித்த தகவல்களை பகிர்ந்திருக்கிறார். இன்று காலை பத்து மணிக்கு முதல் கூடுகை திட்டமிடப்பட்டிருந்தது. எனக்கு முன்னரே சம்பத் வந்துவிட்டிருந்தார். மாநில அரசுத் துறையில் பணிபுரிகிறவர். ஒன்பதே முக்காலுக்கு நான் மைய நூலகம் வந்தேன். என் நண்பரான கதிரேசனும் அவருடைய நண்பரும் தமிழாசிரியருமான ரமேஷும் நாகையில் இருந்து வந்திருந்தனர்.

நூலகத்தின் முதல் தளத்தில் ஒரு அறையை எங்களுக்கு ஒதுக்கித் தந்திருந்தனர். சம்பிரதாய அறிமுகங்களுக்குப் பிறகு இலக்கிய வட்டம் தொடங்கியதற்கான நோக்கம் குறித்துச் சொன்னேன். மற்ற இடங்களில் அதிக கூச்ச சுபாவம் உடையவனாக உணரும் என்னிடம் இலக்கியம் சார்ந்த சந்திப்புகளில் என்னிடம் தயக்கங்கள் இருப்பதில்லை என்பதை உணர்கிறேன். அந்த தயக்கமின்மை பிறரையும் இயல்பாக உரையாட வைத்தது.

மூவருமே தங்களுடைய வாசிப்பு இலக்கிய வாசிப்பு நோக்கி நகர்ந்ததன் பரிணாமத்தைக் கூறினர். சம்பத் வாசிப்பு சார்ந்து விவாதிப்பது குறித்த தன் ஐயங்களை முன் வைத்தார். ஒரு படைப்பு ஏன் விவாதிக்கப்பட வேண்டும் என்பது குறித்து பேசினோம். கதிரேசன் தரமான நாவல்களிலேயே சில மனதுக்கு அணுக்கமாக இருப்பதற்கும் சில அவ்வளவு ஈர்க்காமல் போவதற்கும் காரணம் என்ன என்று கேட்ட கேள்வியின் வழியாக விவாதம் நாவல்களின் வகைமைகளுக்குள் சென்றது. பொதுவாக யதார்த்தவாத படைப்புகள் வாசிப்புத்தன்மை மிக்கவையாக இருக்கும் என்று சொன்னேன். இயல்புவாதப் படைப்புகளுக்குள் அவற்றின் மொழி செயல்படும் விதத்தை உணர்ந்து உள் நுழைய வேண்டியதன் அவசியத்தைப் பற்றிச் சொன்னேன். மேலும் பின் தொடரும் நிழலின் குரல் நாவல் ஒரு சாதாரண வாசகனுக்கு அளிக்க கூடிய அயர்வையும் சோவியத் ரஷ்யாவின் உடைவு என்ற பின்னணியில் பொருத்தி வாசிக்கும் போது அந்த நாவல் அளிக்கக்கூடிய திறப்புகளையும் பற்றி சொன்னேன். அதுபோல தனிமையின் நூறாண்டுகள் நாவலில் வரும் மகோந்தாவை ஸ்பெயினின் அரசியல் சூழலோடு பொருத்தி வாசிக்கும் போது அந்த நாவலை மேலும் அணுகி அறிய முடிவதையும் ஜார்ஜ் ஆர்வெல்லின் விலங்குப் பண்ணை கம்யூனிஸ்ட் புரட்சியின் மீதான விமர்சனமாக அமைவதையும் கதிரேசன் சொன்னார்.

நாவலின் வகைமைகள் பற்றிய பேச்சு நீண்டபோது இயல்பாகவே மீபுனைவு பற்றிய பேச்சு எழுந்தது. புனைவுக்குள் மற்றொரு புனைவினை கொண்டுள்ள வடிவத்தை மீபுனைவு என்கிறோம். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் ஒரு மீபுனைவு. அந்த நாவலுக்குள் வரும் சங்கர்ஷணன் என்ற கதாப்பாத்திரத்தால் "விஷ்ணுபுரம்" என்ற காவியம் நாவலுக்குள்ளேயே எழுதப்படுகிறது. அவ்வகையில் மகாபாரமும் ஒரு மீபுனைவு தானே என்று ரமேஷ் கேட்டார். மகாபாரதத்தை எழுதிய வியாசர் மகாபாரத்திலேயே ஒரு பாத்திரம் என்ற வகையில் அதுவும் ஒரு மீபுனைவே.

நான் விமோசனம்,அறம் மற்றும் வணங்கான் ஆகிய மூன்று சிறுகதைகள் குறித்து பேசலாம் என எண்ணியிருந்தேன். மணி அப்போது பன்னிரெண்டைத் தாண்டியிருந்தது. ஆகவே விமோசனம் குறித்து மட்டும் பேசலாம் என முடிவு செய்து கொண்டேன். சிறுகதை என்ற வடிவம் குறித்த ஒரு பொதுப்புரிதலை வழங்குவதற்காக சுஜாதா எழுதிய ஒரு "மர்மக்கதையை" சொன்னேன். அதன் முடிவு அவர்களின் ஊகத்துக்கு எதிரானதாக இருந்தது. சுஜாதா அது போன்ற கச்சிதமான முடிவைக் கொண்ட பல சிறுகதைகளை எழுதியிருந்தாலும் நகரம்,குதிரை போன்ற ஒரு சில படைப்புகளே "இலக்கியத்தகுதியை" பெறுகின்றன என்று சொன்னபோது மாற்றுக்கருத்து வரும் என எதிர்பார்த்தேன். ஆனால் மூவருமே சுஜாதாவை வாசித்திருந்ததால் அதை ஆமோதிக்கவே செய்தனர்.

அசோகமித்திரனின் விமோசனம் கதையை சொன்னேன். (சொல்லும் போதே அடுத்தமுறை இப்படி "கதை சொல்வது" கூடாது என முடிவு செய்து கொண்டேன்). அக்கதையில் அசோகமித்திரன் விமோசனம் என்று குறிப்பிடுவது எதை என்பது குறித்து ஒரு சிறு விவாதம் நிகழ்ந்தது. ஒரு கணவன் மனைவியின் உறவில் ஏற்படும் முறிவை மிகத்துல்லியமாக சித்தரிக்கக்கூடிய கதை அது. அப்படியே அந்தப்பேச்சு எல்லா உறவுகளிலும் இருக்கக்கூடிய அதிகார-அடிபணிவு பாவனையின் அவசியம் குறித்ததாக மாறியது. அலுவலகத்தில் குடும்பத்தில் நட்பில் என எல்லா தளத்திலும் இந்த பாவனை செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது என்பதையொட்டி கதிரேசன் தஸ்தாவெய்ஸ்கியின் அழையா விருந்தாளி என்ற குறுநாவல் குறித்துச் சொன்னார். தனக்கு கீழே வேலை செய்யும் ஒரு ஊழியனின் திருமணத்திற்கு தன்னுடைய "கருணையை" நிறுவுவதற்காக செல்லும் ஒரு முதலாளியைப் பற்றிய கதை அது. அழையா விருந்தாளியான அவரால் அந்த திருமணத்தில் நிகழக்கூடிய குழப்பங்களையும் அந்த நாளினைத் தொடர்ந்து முதலாளிக்கும் ஊழியனுக்குமான உறவில் நிகழ்ந்திருக்கும் மாற்றத்தையும் கதிரேசன் சொன்னார்.  அக்குறுநாவலை வாசிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டேன்.

முதல் நிகழ்வு என்பதால் எந்த "திட்டமிடலும்" இன்றி நிகழ்ந்தது. எனினும் நண்பர்களாக சிலர் சந்தித்துக் கொள்ள முடிந்தது நிறைவளித்தது. அடுத்த நிகழ்வில் குறிப்பிட்ட படைப்பினைப் பற்றிய உரையோ அல்லது கட்டுரையோ தயார் செய்து கொண்டு உரையாடலாம் என்ற திட்டமுள்ளது. அடுத்த வாரம் வரவிருக்கும் நண்பர்களைப் பொறுத்து அதை முடிவு செய்யலாம் என எண்ணுகிறேன்.

ரமேஷ் நாஞ்சில் நாடனின் தீவிர வாசகர் என்று அறிந்தேன். அதுபோல சம்பத் ஜெயமோகனின் வாசகர். மின் நூல்களை விட தனக்கு புத்தகத்தில் படிப்பதே எளிமையானதாக இருப்பதாக சம்பத் சொன்னார். ஒரு மணிக்கு நிகழ்வினை முடித்துக் கொண்டு நூலகத்தில் இருந்து கிளம்பினோம். கதிரேசன் திருவாரூர் நூலகத்தில் உறுப்பினராவதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டார்.  திருவாரூர் ரயில் நிலையத்துக்கு வெளியே உள்ள ஒரு கடையில் தேநீர் அருந்திவிட்டு ஒன்றரை மணிக்கு புறப்பட்டோம்.

இன்றைய நிகழ்வு இலக்கிய கூடுகையை தொடர்ச்சியாக நடத்திவிட முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. அடுத்தடுத்த வார நிகழ்வுகள் குறித்த பதிவுகள் மேலும் துல்லியமானவையாக இருக்கும் என்பதை இப்போது உணர முடிகிறது.

Friday, 13 April 2018

446 A - கடிதங்கள்

446 A - சிறுகதை

திரு சுரேஷ் அவர்களுக்கு வணக்கங்கள் 

446 A - வாசித்தேன் ,  பதின் பருவம் உச்சம் பெரும்  வயதில் ஒரு இளைஞன் மனதில் துளிர்விடும்  , பெண் சார்ந்த இச்சைகளும் , அவள் உடல் சார்ந்து அவனுக்கு ஏற்படும் பருவக் கவர்ச்சியும் , அதன் கொண்டு அவன் சிந்தையில்  ஏற்படும் பதற்றமும் , என மிக நுட்பமாக பயணிக்கிறது இந்த 446 A ,

ஆனால் இக்கதையின் நுட்பம்  மொழி நடையில் மட்டுமே வெளிப்படுகிறதே ஒழிய , கதையின் வேரில் , அதன் பரிணாமத்தில் , அது விதைக்கவேண்டிய சிந்தனைசெறிவில் மிகவும் பின்தங்கிவிடுகிறது , 

பதின் வயதில் ஒரு பெண் சார்ந்து , ஆண் அறிய விளைவது எல்லாம் காமம் சார்ந்ததே , அவ்வயதில் , பெண் அவனுக்கு ஒரு ஈர்ப்பு, ஒரு கனவு , ஒரு போகம் , சுகம் தரும் நினைப்பு , அச்சூழ்நிலையில் அவன் , ஒரு பெண் மனதின் தரிசனத்தை அறிய முற்படுவதே இல்லை , அப்படி அறிய முற்படும் சூழலில் அவன் ஒரு சமநிலை அடைகிறான் அல்லது 

இயல்பு நிலை உணர்கிறான் , பருவ வயதில் ஆணுக்கு ,ஒரு பெண்ணை முழுவதும் உணரக்கூடிய தருணம் அமைவதில்லை , பொதுவாக திருமணத்திற்கு பின்பே அதற்கான சூழல் அமைகிறது ,

இதன் பின்புலத்தை வைத்ததே இக்கதையை அணுகவேண்டி உள்ளது , பெண்ணை காமத்தின் மூலமாகவே அறிய வாய்ப்புள்ள வயதில் , அப்பெண்ணின் வேறொரு சித்திரத்தை , அவன் அறியாத ஒரு உருவ பரிமாணத்தை எதிர்கொள்ளையில் , ஒரு இளைஞன் மனதளவில் கடந்துசெல்லும் சிறு  அதிர்வே  446 - A  .

ஈரத்தின் மணத்தால்  ஈர்க்கப்பட்டவன் , மனத்தின் ஈரத்தால் உலுக்கப்படுகிறான் 

இக்கதையில் வாசகனுக்குரிய  வாழ்வனுபவம்  மிகவும் சிறுது , சிந்தனைக்கான களம் அரிது , வெறும் ஒற்றைப்படை பருவ தூண்டலின் எளிய பதிவாகவே நான் உணர்கிறேன் .

தங்களின் அடுத்த படைப்பிற்காக காத்திருக்கிறேன் ..

வே  .அழகுமணிகண்டன்   

அன்புள்ள சுரேஷ் அவர்களுக்கு 

வணக்கம்

பாலினக் கவர்ச்சி மட்டுமே பெண்களை பார்க்கத்தூண்டுவதில்லை. நாம் ஏதாவது பேச விழைவதை பெண்ணிடமே அந்த வயதில் கூற விழைகிறோம். பேச நினைத்து மனதில் பேசிய வார்த்தைகள்தான் அதிகம். இது உங்களுடைய கதைகளில் வரும் ஒரு அம்சமாக இருக்கிறது. அது எனக்கு சற்று வியப்பாகவும் இருக்கிறது. 

அவன் குற்ற உணர்ச்சி அடைவதாக கொள்ள முடியவில்லை. ஆனால் அந்த சமநிலையின்மை இருக்கிறது. எல்லாப் பெண்களும் சலனபடுத்துகிரார்கள். அவர்கள் இருக்கும் குறிப்பிட்ட இடத்திருக்கு போகும்போது மட்டும் அவன் நினைவுகளில் வருகிறார்கள். எதிர்பாராத மரணம் அந்த எண்ணங்களை ஒன்ருமில்லாதாக்கி விடுவிக்கிறது.

நன்றி 

Dr. M. Dhandapani, PhD,
Asst. Professor (PB&G),

வணக்கம்

நலமா? 446A வாசித்தேன். ஒரு இளம் மாணவனின் அக உணர்வுகளின் கொந்தளிப்பை வெகு அழகாக சித்தரித்து இருக்கிறீர்கள்.

அன்புடன்

அனிதா

446 A - கடிதம்

446 A - சிறுகதை

அன்பின் சுரேஷ்

நலமாக இருக்கிறீர்களா தம்பி ? நேற்றுடன்  கல்லூரி முடிந்து இன்று தேர்வுகள் துவங்கின. காலை மதியம் என எனக்கு இரட்டை  ட்யூட்டி இருந்தது.   காலையில் தேர்வு அறையில் மாணவர்கள் குறித்த நேரத்திற்கு  50 நிமிடங்கள் முன்னரே எழுதி முடித்துவிட்டார்கள்.

உடன் தரைத்தளத்திற்கு இறங்கி விடைத்தாள்களைக்கொடுக்க அவசரப்படாமல்,காலியாயிருந்த, அந்த தேர்வறையாக மாறியிருந்த வகுப்பறையில் ஒரு கடைசி பென்ச்சில் அமர்ந்து ஜெ அவர்களின் தளத்தை திறந்தேன்

3 சிறுகதைகளைக்குறித்த பதிவில்  காயத்திரியைக்கடக்கும் முன்பே கனிமொழியைப்பார்த்தது போல முதல்கதையின் சுருக்கத்தைத்தாண்டி இரண்டாவதில் உங்கள் பெயரைபார்த்ததும், அதைச்சொடுக்கி உள் நுழைந்தேன்.

முழுதும் வாசித்தபின்னர் முதலில் தோன்றியது, உங்களின் கதைகளில் ஒரே மாதிரியான தன்மை இல்லவே இல்லை என்பதுதான். இதுவரை 3 வாசித்திருக்கிறேன், எஞ்சும் சொற்களிலும் இதிலும் கதை சொல்லியின் பார்வையிலேயே கதை நகர்கிறது என்பதைத்தவிர மற்ற எதையும் ஒப்பிட முடியவில்லை

பரிசில் உரையாடல் இருந்தது அதிகம்.

ஒவ்வொரு கதையும் மிகத்தனித்துவமாகவே இருக்கின்றது. எஞ்சும் சொற்களில்  ஒவ்வொரு பத்தியிலும் இருந்த வீச்சு இதில் இல்லாமல் நெகிழ்ச்சியாய் கொண்டுபோயிருக்கிறீர்கள்.

பதின்பருவத்து பையன்களின் உணர்வெழுச்சிகளை அழகாக பதிவு செய்கின்றது கதை.

பேருந்து எண்ணும், அது கடக்கும் இடங்களின் பெயர்களும் சொல்லியிருப்பது கதையின் நம்பகத்தன்மையை அதிகமாக்கி கதையுடன் வாசிப்பவர்களை ஒன்றச்செய்கிறது.

அந்த வயதில்  பையன்களுக்கு எதிர்பாலினரின் உடல் மாற்றங்கள் ஏற்படுத்தும் உணர்வெழுச்சிகளையும் குழப்பங்களையும் அழகாக சொல்கிறீர்கள்.

அந்த கவிதா டீச்சர், மயக்கும் விழிகளும் செழிப்பான கன்னங்களுமாய்,  இதை வாசிக்கையில் அழியாத கோலங்கள்  நினைவில் எழுந்தது, பதின் பருவத்தில் டீச்சர் மீது மையல் கொள்ளூவதும் ஒரு அழகிய நினைவுதான், இந்தபருவத்தை தாண்டி வந்த பலருக்கும் புன்னகையை வரவழைத்திருக்கும் வாசிப்பு.

எனக்கு ஷோபாவை நினைவு படுத்தியது வாசிப்பு

கல்லூரியில் புதிதாக பணியில் சேர்ந்திருக்கும் ஒரு பெண்ணை எப்போதும் புடவையில் பார்ப்பேன் சதாரணமான பெணாகவே தோற்றம் அளிப்பாள்.

ஒருமுறை அவளின் மகனை வெறிநாய் கடித்துவிட்டதால் அவள் விட்டிற்கு சென்ற போது ஜீன்ஸும் குர்தாவும் அணிந்து அடர்ந்து நெளியும்கூந்தல் முதுகில் காடு போல பரத்தியிருக்க ஒரு ஸ்கூட்டரில் வீட்டுக்கு வழிகாட்டியபடி வந்த அவளைப் பார்த்ததும் எனக்கு ஷோபாவின் நினைவு வந்தது.

ஷோபாவைபோலவே சாதாரணமாகதெரியும் ஆனால்அற்புத அழகினை எதோ ஒரு கோணத்தில் எப்படியோ காண்பிக்கும் அழகி அவளும் என் எண்ணிக்கொண்டேன்.

கவிதாடீச்சரை நான் ஷோபா போல கற்பனை செய்து கொண்டேன்.

அம்மாத்தனமான அன்பில் இவனுக்கு ஏற்படும் குற்றவுணர்ச்சியையும் நுண்மையாக புரிந்துகொள்ள முடிந்தது. ஒருசில வரிகளில் ஒரு பெரும் சித்திரத்தை மறைமுகமாக கொண்டு வந்து சேர்த்துவிடுகிறீர்கள்.

முந்தய ஒரு கதையில் கணவனின் சவத்துடன் வண்டியில் ஏறும் பெண்ணொருத்தி  யாருடனோ அலைபேசியில் பேசும் ஒருசில சொற்றொடரில் அவளின் முழுவாழ்வையும் புரிந்துகொள்ள முடிந்ததைப் போல.

பென்சீனின் அறுகோணம் அவனுக்கு சுடிதாரையும் ஸாண்டல் சோப்பின் நறுமணத்தையும் நினைவுபடுத்துவதை மிக ரசித்தேன் நானும் இப்படி நிறைய combinations  வைத்திருக்கிறேன்.

இன்று கூட தேர்வறையில் ஒரு பெண் பலாச்சுளைகள் போல பெரிய பெரிய  இதழ்களுடன்  இருந்த  மஞ்சள் ஷெண்பகப்பூக்களை தலையில் வைத்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு நேர்மேலே மின்விசிறி இருந்ததால் அறையெஙுகும் நிரம்பியிருந்தது ஷெண்பக மணம்.

அனைவரும் போனபின்பு நான் மட்டும் 446 வாசிக்கையிலும் என்னால் அந்த மெல்லிய மணத்தை அறையில் உணர முடிந்தது இனி சுரேஷ் பிரதீப்பின் 446 நினைவுக்கு வருகையில் ஷெண்பக மணமும், … and .vice versa

Je   சார் ஒருமுறை சொல்லியிருந்தார் ரயில் பயணமும் சினிமாப்பாட்டுக்களும் குறித்த ஒரு பதிவில், ஒரு வகையான ஃபைல் ஒன்றை நினைக்கையில் ஒரு குறிப்பிட்ட பாட்டு நினைவுக்கு வரும் என்று.
 

துருவேறிய தூசு நிறைந்த  பேருந்துதான் எனினும் அவனின் இந்த பருவமும் அதில்நிகழ்பனவும், மிக மிக அழகானதால் கதையும் அத்தனை அழகாக போகின்றது

// எரிபொருள் தீராத ஓட்டுநர்தேவையற்றதாக இப்பேருந்து சென்றுகொண்டே இருக்கும். நறுமணம் மிக்கவியர்வை உடையவளாக லாவண்யாஇப்பேருந்தில் அமர்ந்திருப்பாள். நான்அவளெதிரே காலங்களற்றுஅமர்ந்திருப்பேன். முதலில் இந்தசாலையும் பின்பு இப்பேருந்தின்சக்கரங்களும் மறையும். தொடர்ந்துபேருந்தின் இருக்கைகளும் அதன்உடலும் மறையும். அடுத்ததாக நானும்பேருந்தெனும் ஓட்டமும் மறையும். பின்னர் அவளும் மறைவாள். பின்னர்அந்த நறுமணம் மட்டும் காற்றில்என்றுமே இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தபோது தாக்குண்டவனைப்போல அந்த நறுமணத்தை நாசியில்உணர்ந்தான். //

இந்த வரிகளில் சுரேஷ் பிரதீப்பை எப்படியோ என்னால் அடையாளம் காண முடிந்தது, ஒரு கதையில் எழுத்தாளரின் signature  வரிகள் என்று சில இருக்கும் இந்தக்கதையில் இவையே அவை என்னைப்பொருத்தவரையில்

முடிவில் வருத்தமென்றாலும் நரேனின் வளரும் மனதின் எழுச்சிகளும் அவை புனைந்துகொண்ட பலவும் அன்றைய துயரத்தில் எப்படியோ கலைந்து போவதை  உணர முடிந்தது

கல்லூரி முடிந்துவிட்டதால் அமர்ந்திருந்த அறையில் கரும்பலகையில் நிறைய பெயர்களும்  ஒரு கோணலாக வரையபட்ட வில்லும் அதன் எதிர்முனையில் அம்பிகா என்னும் பெயருக்கு அடியில் சீறிசென்று நின்றிருந்த அம்புமாய்  இருந்தது. கலவையான பல உணர்வுகள் நிரம்பியிருந்திருக்கும் அப்படியான ஒரு வகுப்பறையில் இந்தகதையை வாசித்தது வித்தியாசமாகவும் பொருத்தமாகவும் தோன்றியது எனக்கு

மரபென்ச்சில் எல்லாம் இதய வடிவங்களும் அதற்குள் பெயர்களும் அவற்றைத்துளைத்துச்சென்ற அம்புமாய் இருந்தது

காதல் துவங்கும் இடம் கல்விக்ககூடங்கள்  அள்லவா?

காதல் முடிந்தும் விடுகின்றது பலருக்கும் அங்கேயே

வீடு வந்து சரணிடம் இரவுணவின் போது இக்கதையை சொல்லிக்கொண்டிருந்தேன்

அவனால் இறுதியில் நரேனின் கனவுகளும்  கற்பனைகளும் சட்டனெ கலைவதை மட்டும் புரிந்துகொள முடியவல்லை  என்றான்

அவன் வாசிக்கையில் வேறுமாதிரி உணர்வானாயிருக்கும்

அழகிய  கதை சுரேஷ்

உங்களின்கதைகளுக்கு நான் ரசிகை ஆகிவிட்டிருக்கிறேன்

வாழ்த்துக்கள் தம்பி

அன்புடன்

லோகமாதேவி