Wednesday 29 June 2016

பெருஞ்சுழி 12


பாலை கடந்ததன் தடங்கள் தென்படத் தொடங்கின. மேற்கிலிருந்து  பறவைகள் கலைந்தெழும் ஒலி கேட்கத் தொடங்கியது. சுனதன்  தன் மனதில்  ஒரு இதம் பரவுவதை உணர்ந்தான். அதற்கென  தன்னை நொந்து கொண்டான். பாலையும்  சோலையும் வேறுபடுவதை ஆழ்மனம்  இன்னும்  உணர்கிறது என்ற எண்ணம்  அவனை துணுக்குறச் செய்தது.
பசும் பரப்புகளைக் கண்டதும் நிரத்துவன்  துள்ளத் தொடங்கியது. மதீமம் என்றொரு ஆறு பாலையைக் கடந்ததும்  தொடங்குமென மாசறியான்  சொல்லியிருந்தார். அவ்வாற்றுக்கு கரையெடுக்கும் பணிகள்  நடந்து கொண்டிருப்பதை  சாலைகள்  காட்டின. அடர் கருப்பு நிறத்தில்  திட்டுகளாய்  ஒட்டியிருந்தது  மாட்டு வண்டிகளில்  கொண்டு செல்லப்பட்டது கரை மண். பொழுதடைந்திருந்ததால் சாலை வெறிச்சிட்டுக் கிடந்தது.  ஒரு காத தூரம்  பயணித்த பின் நிரத்துவன்  இடப்பக்கம்  தலை திருப்பினான். நினைவுகளில்  ஆழ்ந்திருந்த சுனதன்  இடப்பக்கம்  நோக்கினான். கொதிக்கும் மீன் வாசம் எழுந்தது. சாலையில்  இருந்து  பிரிந்த ஒற்றையடிப் பாதையின்  மீது நிரத்துவன்  நடந்தது. சற்று மறைவிடம்  நோக்கி நிரத்துவனை  ஒதுக்கி  அங்கிருந்த ஈச்ச ஓலைக் குடிசைகளை கவனித்தான்  சுனதன.
இரண்டு பெரும் அடுப்புகள்  எரிந்து கொண்டிருந்தன. கரிய பெண்கள்  சிலர் அடுப்பை சுற்றியமர்ந்து ஊதுகுழல்களால் மூட்டிக் கொண்டிருந்தனர். சிறு குழந்தைகளை தூக்கி எறிந்து சற்றே பெரிய குழந்தைகள்  விளையாடிக் கொண்டிருந்தன. "யேய் ய்யேய்" என கத்திக் கொண்டே விண்ணில்  பறந்தன குழவிகள். பனங்கள் பானைகளில் இருந்து அள்ளிக் குடித்து இளிவரல்  பேசிக் களித்திருந்தனர் இளையோர். நிரத்துவன்  அவர்களை நெருங்கியது.
சுனதனைக் கண்டதும்  உடலில்  இயல்பின்மை  பரவ பெண்கள்  எழுந்து உடல் ஒடுக்கினர். வாயைத் துடைத்துக்  கொண்டு கள் அருந்தியவர்கள் எழுந்து குறுகி நின்றனர். சுனதன்  ஒரு நொடி  தளர்ந்தான்.
"இல்லை  நான் காவலன் அல்ல. வழிப்போக்கன். அஞ்ச வேண்டாம்" என நிரத்துவனை  விட்டிறங்கினான்.
"வழிப்போக்கனா?"என்று கேட்டவாறே  ஒரு இளைஞன்  அவனைத் தொட்டான். பின் மோவாயில் கை வைத்து "ஏய் மவிந்தா இவர் தான்  சுனத மகானாக இருப்பாரோ?".
"ஆனால்  அவர் பல்லாயிரம்  வருட வயதுடையவர் என்கின்றனர். இவர் இன்னும்  இளமை மாறவில்லை. "
"மகான்கள்  அப்படித்தான்  இருப்பார்கள். நாள் முழுவதும்  அவர்களால்  புணர முடியும். பின் உலகைப் படைப்பதானால் புல்லில் இருந்து புலிகள்  வரைப் புணர்ந்தாக வேண்டாமா? உன்னைப் போல் ஒன்றிரண்டுக்கே தளர்ந்தால் உலகை எப்படிப் படைப்பது. அவர்கள்  மூப்படைவதே இல்லை. சரிதானே வழிப்போக்கரே?" என்று சுனதன்  முகத்துக்கு  நேரே கை நீட்டினான்.
"சரிதான்" என முறுவலித்தான் சுனதன்.
"அவர் பிறந்த கதை சொல்லட்டுமா உமக்கு?" என்றான்  உற்சாகம்  ஏறியவனாய்.
சுனதனும்  கதை கேட்க அமர்ந்தான்.
"சுமதனி  எட்டு வயது முதலே கனவில்  நாகங்களைக் காண்பவள். உதிர வாயில்  திறந்து ஒரு மண்டலம்  கூட காத்திராமல் அவள் தந்தை அவளை மாசறியானுக்கு மணமுடித்துக் கொடுத்தான். அவள்  கொதித்துப் போய் காத்திருக்க அவன் மக்கள்  வருந்துவதாகவும் தன்னால்  ஒன்றும்  இயற்ற முடியவில்லை  என்றும்  அழுதான். 'சரி ஆற்ற வேண்டியது  ஆற்றலாமே' என அவன் கரம் பற்றினாள்  சுமதனி. அவனும்  அவள் கரம் பற்றி ஒரு விரிவுரை நிகழ்த்தத் தொடங்கினான். சுமதனி  பாதியிலேயே தூங்கிவிட்டாள். அதை கவனிக்காமல்  'என்ன சரிதானே?' என்றான்  மாசறியான். என்ன கேட்டான்  எனப் புரியாமல்  'சரி சரி ' எனச் சொல்லி  கச்சையை அவிழ்க்கப் போனாள் சுமதனி. அப்போதுதான் நாடு கடந்து காடு செல்வோம்  எனக் கேட்டிருக்கிறான் என அவளுக்குப் புரிந்தது.
மாசறியானை விட விரைவாக  சுமதனி  நடந்தாள். செல்கிற வழியில்  மாவலியன்  என்றொரு  வீரனைப் பற்றிக் கேட்டாள். கனவிலும்  அவன் பெயர்  உளறினாள். பொறாமை தாளாமல்  அவளைப் புணர்ந்தான் மாசறியான். அவள் மாவலியனையே நினைத்திருந்தாள். அவளின்  கனவையும்  அவன் பொறாமையையும் ஒருங்கே நிகர்க்கும்  விதமாய் இறைவனே வந்து பிறந்தான். இறைவனுக்கே குழப்பம்  எழுகிறது  தான் பிறந்தது  மாவலியனுக்கா மாசறியானுக்கா என. தெளிவடையும் போது சுனதர் மாவலியனையோ மாசறியானையோ வதம் புரிவார். அது வரை கள்ளுண்டு களித்திருப்போம். கண் மூடி பொறுத்திரு...." என சொல்லிக் கொண்டிருக்கும் போதே கதை சொல்லி சரிந்தான்.
சுனதன்  சிரித்துக்  கொண்டிருந்தான். ஒவ்வொருவராக உடல் தளர்ந்து  உறங்கினர். விளக்கொளியில்  சுனதன்  முகம்  மின்னியது.
"மைந்தா" என்றவாறே அருகில் வந்தாள்  பேருடல் கொண்ட ஒரு அன்னை.
"அம்மா" என்றான்  சுனதன்.
"முதன்முறை  தாயைப் பிரிந்திருக்கிறாய் அல்லவா?" என்றாள் அன்னை.
சுனதன்  திடுக்கிட்டான். "எப்படி  அறிவீர்கள்? " என்றான்.
"மைந்தர்கள்  அனைவருக்கும்  முகம்  ஒன்றுதான். உறங்கு" என அவன் தலை கோதிச் சென்றாள் அன்னை. சுனதன்  ஆழ்ந்து உறங்கினான். மறுநாள்  புத்துணர்வுடன்  அவர்களிடம்  விடைபெற்று பயணத்தைத் தொடர்ந்தான்.
சுனதன்  கடற்கரை  பாதையை  தேர்ந்தெடுத்தான். சதுப்புக் காடுகளின்  வழியே  சோர்வுற்று  நிகழ்ந்தது  அவன் தனிப்  பயணம்.  மலைக்காடு அகன்றதுமே  அவனுள்  எப்போதும்  குடியிருக்கும்  குதூகலம்  மறையத் தொடங்கியது. குலம்  நீங்கியதாலோ அறியாதது  நோக்கிச்  செல்வதாலோ தோன்றும்  பயமல்ல அது. இருப்பினை  தக்கவைத்துக்  கொள்ள  நினைக்கும்  வலிமையற்றவர்களை  சந்தித்ததால்  எழுந்த  சோர்வு  பெறுகி மனம் நிறைந்திருந்த  குதூகலத்தை  முற்றாக  அழித்தது. அவன்  குதிரை  நிரத்துவன்  மட்டுமே  சுனதனுக்கு நிம்மதி  அளிப்பதாய் இருந்தது. ஒரு  வருடம்  அவன்  பயணித்த  பின்பு  மாவலியம்  தொடங்கும் பிரதான  நிலப்பகுதியை  அடைந்தான். 
“உன் மனைவியை  புரவிச்சேனன்  வீட்டிற்கு  அனுப்பினானா? இல்லை  இன்றும் அவனுடன்  தங்குகிறாளா?” என்று  சுனதனின்  கடிவாளம்  இழுத்து  நிறுத்தி  ஒருவன்  கேட்டான்.
அடிமை ஊழியம்  தவிர வாழ்வில்  ஒரு நொடி கூட  தனக்கென  இல்லாதவன் என்பதை  அவன்  விழி  காட்டியது.
“மூத்தவரே என் பெயர்  சுனதன்  என்பதாம். நீங்கள்  சொல்கிறபடி எனக்கு  மனைவி  யாருமில்லை.” என்றபடி  குதிரையை  விட்டிறங்கினான்.
“ஓ அப்படியா  அழகிய  செம்புரவியை பெற பலர்  மனைவியை  சேனன் மனைக்கு  அனுப்புவார்கள். நீயும்  முகத்தில்  முடி  மண்டி வெற்றுடலுடன் நிற்கிறாயா அதனால்  கேட்டேன்” என்றான்.
“மாவலியம்  நோக்கிச்  செல்கிறேன். இளைப்பாறு மண்டபம்  ஏதேனும்  இவ்விடம்  உண்டா?” என்று  சுற்றி  நோட்டமிட்டவாறே  கேட்டான்  சுனதன்.
ஏளனமாக  நகைத்தவாறே “நீ  வடக்கில்  இருந்துதானே  வருகிறாய்? மூடா!மாவலியம் நாற்பது காத தூரத்திற்கு  முன்னே  தொடங்கிவிட்டது.  போ!நீ பார்க்கவும்  வலுவானவனாகவே தெரிகிறாய். இன்னும்  சற்று தூரம்  முன் சென்றால்  வலுப்போர் களம்  தயாராக  இருக்கும்.  அங்கு  நிச்சயம்  உன்னை  விடமாட்டார்கள்.” என்று  அவன்  நகைத்தான்.
“வலுப்போர் களமா?” என்றான்  சுனதன்.
“ஆம்  நீ அங்கு  கட்டாயப்  போரில் ஈடுபட  வேண்டும். உடல்வலு கொண்ட  ஒவ்வொருவனும்  தனக்கே  படைக்கப்பட்டதாக மாவலியர் அருளியுள்ளார்.  அவர்  இறைச்சேனைக்கான வீரர்களை  தேர்ந்தெடுக்கும்  அரும்பணியே வலுப்போர். வென்றால்  மாவலியரின் சேனையில்  உயிர் பிரியும்  வரை  போரிடவேண்டும்.  தோற்றால் உயிர்  போகும்  வரை  மாவலியத்தில் தொண்டூழியம்  புரிய  வேண்டும். உன்  போன்ற  உடல்  கொண்டவர்களுக்கு மாவலியத்தில் இறப்பு  ஒன்றே மீட்சி.” என்றான்  சிரிப்புடன்.
“நான்  மறுத்தால்” என்றான்  சுனதன்.
“மறுப்பிற்கான அசைவு  எழுந்தால்  அடுத்த  அறுபது  நாழிகைகளில்  உன் உயிர் போகும். ஆனால்  அந்த  நாழிகைகளில்  நீ அனுபவிப்பதை  பார்ப்பவன்  அவன்  வாழ்நாளில்  மறுப்பு  என்பதை சிந்திக்கமாட்டான். முப்பது  நாழிகை  முடிகையில்  அரை நாழிகை  இடைவெளி  விடுவார்கள். பெரும்பாலும்  அந்நேரத்தில்  தண்டனை  பெற்றவன் நிச்சயம்  தற்கொலை செய்து  கொள்வான்.” என்று  கூறியவன்  குரலில்  நடுக்கம்  தெரிந்தது.
சுனதன்  நிரத்துவனை  நீங்கினான்.  அவன்  மனவோட்டம்  புரிந்தவனாய் நிரத்துவன்  மறைவிடம்  நோக்கிச்  சென்றான்.
களிற்று  மத்தகங்களோடும்  சிம்ம  உகிர்களோடும்  போரிட்டிருந்த  சுனதன்  ஒரு  மனிதனையும்  வெல்லும்  நோக்கத்தோடு  தீண்டியது  கிடையாது.  இடைசுற்றியிருந்த  ஒரு  துணியை  மார்பில்  மூடி  சடைமுடியும்  நீள்தாடியும்  புரள  வலுநடை வைத்து  வலுப்போர்  நடைபெறும்  கொட்டடி நோக்கிச் சென்றான்.

No comments:

Post a Comment