Friday 1 July 2016

பெருஞ்சுழி 14

நிரத்துவனை  பின்  தொடர முடியாத  குதிரைகள் சோர்ந்து மண்  விழுந்தன. காற்றின்  திசையறிந்து விரைந்தது  நிரத்துவன்.  தன் மீதிருப்பவர்களை அது  சுமையெனக் கொண்டதாகத் தெரியவில்லை. சவுக்கு  மரங்களும்  பாக்கு  மரங்களும்  அடர்ந்து  வளர்ந்திருந்த  ஒரு கடற்கரை  சதுப்புக்  காட்டினுள்  நுழைந்தது  நிரத்துவன். கரும்பாறை குன்றுகளாக நிறைந்திருந்த  அவ்விடத்தில்  சுனதன்  கண்ணயர்ந்தான்.
தெரிதன்  கண் விழித்தான். என்ன  நடந்திருக்கும்  என்று  அவனால்  ஊகிக்க  முடிந்தது. நீள் தாடி  வளர்ந்திருந்தும் தூங்கும்  போது  ஒரு  குழந்தையைப்  போல்  தூக்கம் துடைத்தெறிய  வேண்டிய  எந்தக்  கவலையும்  இன்றி  நாசிக்காற்று அடிவயிறு  தொடும்  நீள் மூச்சுடன்  கிடந்தான் சுனதன்.   தெரிதனின் தந்தை  முமனகத்தை சேர்ந்தவர். மாவலியர் முமனகத்தை கைப்பற்றிய போது தெரிதன்  சிறுவன்.  பிறந்தது முதல்  உழைப்பதும்  உண்பதுமன்றி ஏதும்  அறியாதவனாகவே தெரிதன்  வளர்ந்தான். உணவுக்கான  நேரத்தை எண்ணியபடியே உழைப்பான். எந்நேரமும்  அவன் கனவினை அன்னமே நிறைத்திருந்தது. கிடைத்தற்கரிய  அரும் பொருளாகவே உணவை எண்ணினான். ஒரு பருக்கையைக் கூட வீணாக்க விரும்பாதவன். அன்னத்தாலும் உழைப்பாலும்  அவன் உடல் வலுவேறியது. அன்னை இறந்த பின் இறுதி உறவும் அற்றுப் போனான். அவள் இறந்ததற்காக தெரிதன்  வருந்தவில்லை.
சோர்வின்றி உழைப்பவன்  என்பதால்  எல்லா இடங்களிலும்  விரும்பப்பட்டான். அவன் நன்றி செலுத்தவோ அவனை உரிமை கொள்ளவோ யாரும்  இல்லை. கசையடி  பெற்றிருக்கிறான். நுகத்தடியில் பூட்டி  உழுதிருக்கிறார்கள். இருந்தும்  அவன்  எப்புகாரும் சொன்னதில்லை. வலுப்போர்  களத்திற்கும்  போர் வீரனாய்  நிறைய உணவு பெறலாம் என நினைத்தே சென்றிருந்தான்.
ஆனால்  சுனதன்  முன் முதன் முறையாக  நெளியும்  புழுவென  தன்னுள்  ஒரு சிறுமை படர்வதை உணர்ந்தான். அவ்வுணர்வை எதிர்கொள்ள பயந்தான். அஞ்சி விலகினான். தலையை ஆட்டி  உதற முயன்றான். முடியவில்லை. குளிர் பாறையென அச்சிறுமை அங்கேயே  இருந்தது. குழந்தையென சுருண்டு உறங்கும்  உடலை வெறுத்தான்.  எவ்வுணர்வும்  வெளிப்படாத முகத்தை  வெறுத்தான்.  குமிழ் உதடுகளை கருங்குழலை வலுத்த மார்பை இறுகிய தொடைகளை நரம்போடிய கால்களை காய்ச்சிய பாதங்களை புடைத்த கரங்களை ஒடுங்கிய வயிற்றினை வெறுத்தான்.  கொடுநஞ்சென உடலேறும் அவ்வெறுப்பின்  ஊற்றுக் கண்ணை  தொட்டெறிந்தது அவன் அகம்.  அவன்  உயிர்  சுனதனின்  கருணையாலும்  விரைவினாலும் காப்பற்றப்பட்டது என்ற  எண்ணம்  எழுந்த போது   அவன்  தேகம்  கூசியது. அவனை அணைத்த  கணம்  முதல்  நிகழ்ந்தவை  பனிக்கற்கள் நெஞ்சை  அறைவது போல்  உள்ளுக்குள்  அலையடித்தன . பெருங்கருணையின்  இரக்கமின்மை  முன்  முழுதாக  தோற்று நின்றான்  தெரிதன். சுனதன்  உறக்கம்  கலைந்து  எழுந்த  பிறகு  தன் வாழ்க்கை  மாறிவிடும்  எனத்  தோன்றியது  தெரிதனுக்கு. சுனதன்  தன்னை  அடிமையாகக் கொண்டால் வாழ்வு  முழுதும்  தன்னை  வதைத்தால் இக்கருணையெனும்  பெரும்  இழிவிலிருந்து தான்  மீள  முடியும்  என உணர்ந்தான். ஆனால்  அவன்  அப்படிச்  செய்யப்போவதில்லை. எழுந்ததுமே அந்த  ஒன்றுமற்ற விழிகளால் சில கணம் அவன்  தன்னை  நோக்கிவிட்டு கடந்து  சென்று விடுவானென தெரிதன்  நினைத்தான்.  ஆனால்  அக்கணத்திற்கு பின் தன் வாழ்வில்  பொருளென கொள்ளக் கூடிய  ஏதும்  இருக்காது  என்பதை  உணர்ந்த  தெரிதனின்  கண் முன்  நின்றது  இரு  வாய்ப்புகளே.  ஒன்று  தான் இறப்பது. இல்லை  சுனதன்  இறப்பது. பின்னதை நோக்கி  இயல்பாகவே  அவன்  உள்ளம்  நகர்ந்தது. ஒரு  விசை. ஒரு  கல்.  தன்னை  காத்த  பெருங்கருணை இவ்வுலகிலிருந்து தடமின்றித் தொலையும். அழியட்டும்  ஆதி தொடங்கி எது நம்மை வைத்து விளையாடுகிறதோ எத்தனை ஆணவம் கொண்டு  தருக்கினாலும் எதன் முன் தளர்ந்து விழுகிறோமோ எதனால்  பிறக்கிறோமோ எதனால்  இறக்கிறமோ எதனால்  இருக்கிறோமோ அதன் துளியாய்  அதன் குழவியாய் அதன் பேருருவாய் என் கண் முன் கிடந்து உறங்குபவனே இறந்து விடு. இல்லாமல்  ஆகி விடு. சில நாட்கள்  சொல்லில் இருப்பாய். பின் சொல்லப்படாமல் மறைவாய்.

ஒரு பெருங்கல்லினை சுனதனின்  தலை  நோக்கி  தெரிதன் உயர்த்தியபோது நிரத்துவன்  அவனை  பின்னிருந்து முட்டி  நிலையழியச் செய்தது. விழிகசக்காமல்  எழுந்தமர்ந்தான்  சுனதன். அவன்  முகத்தில்  மெல்லிய  சோகம் படர்ந்தது. 
“தெரிதரே நீர்  என்னை  நோக்கி  ஓடிவந்த  போது  என்னை மன்னித்து  விடுங்கள் என்றேனே அது  இக்கணத்தை கடக்கவே. கொலை  தவிர்க்கும்  என் சுயநலம்  காக்க  இழிவெனும்  மீளாத்துயரில் உம்மை  தள்ளிவிட்டேன். என் பலம்  அனைத்தும்  நீர்  அறியும்  ஒரு நாள்  வரும்.  அன்றென்னை  வென்று   உங்கள் உள்ளம்  நிறையும்  இழிவை  துடைத்துக்  கொள்ளுங்கள்” என்றான்.
"அறிந்தியற்றிய பிழை தெரிதரே. என்னைக் கொன்றால் உங்கள்  ஆணவம்  நிறைவுறாது.வென்றால்  மட்டுமே நிறையும். என்னோடிருந்து என்னை அறிந்து என்னை கொன்று வீசுங்கள்  தெரிதரே. இதை அறைகூவலாக ஏற்றாலும் உங்கள்  இளந்தமையனின் அன்பு மொழி என ஏற்றாலும்  எனக்கு சம்மதமே" அவன் குரல்  நடுங்கவோ எழவோ இல்லை.
வெறித்து  நோக்கி  நின்ற  தெரிதன்  உணர்வெழுச்சி கொள்வது அவன்  ஒவ்வொரு  நரம்பிலும் தெரிந்தது. தீப்பற்றுவது போல அடிவயிற்றிலிருந்து  ஒரு பேருணர்ச்சி எழுந்தது. மொத்த உடலும் அதிர “என் தேவனே” என்று  கதறியவாறே மண்  விழுந்து சுனதனின்  பாதங்களில்  தலையை முட்டிக் கொண்டு கதறினான்  தெரிதன். அவனை  இழுத்து  தூக்கிய  சுனதன்  “மூத்தவரே  நான்  மன்னிப்பு  கோரும் முதல்  மானுடர் நீர். உங்கள்  வாழ்வின்  வஞ்சமும் என் மீதே  கட்டப்பட்டுள்ளது. என் அணுக்கர் நீங்கள்” என் நடுங்கி நழுவிக் கொண்டிருந்த தெரிதனின்  உடலை இறுக்கி அணைத்தான். தன் முன் நிற்பவனை  தெரிதனால் விளங்கிக்  கொள்ள  முடியவில்லை.  ஆனால்  அன்னை  முலையோடு அணைந்துறங்கும் குழவியின்  நிறைவை  உணர்ந்தான்.  அந்நிறைவில் அவள்  மடியை உதறி  மேலேறும் வஞ்சமும்  ஒட்டியிருந்தது. “ஆம்  வஞ்சம்  கலக்காத  நிறைவென ஏதும்  இருக்கிறதா  இவ்வுலகில்?” என மோதமதி  தன்  கதையை  நிறுத்தினாள்.  அந்நேரம்  அரிமாதரனின்  விழிகளில்  மின்னியதை மோதமதியால் உணர  முடியவில்லை.

No comments:

Post a Comment