Sunday 3 July 2016

பெருஞ்சுழி 16

சுனதனைத் தேடும்  பணி ரகசியமாக்கப்பட்டது. வலுப்போர் களத்தில் நடந்த சம்பவங்கள் அனைத்து குறிப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டன. அச்சம்பவத்தை கண்ட கண்டிருக்க வாய்ப்பிருந்த அனைவரும் அமைதியாக்கப்பட்டனர். தடமின்றி நடப்பவனை பின் தொடருதல் நடவாது. சுனதன்  தன்னை  எதுவாகவும் யாராகவும் கற்பனிக்கவில்லை. அதிகாரம்  அவசியமில்லாத லாபமற்ற நிலங்களை நோக்கி அவன் நடந்தான். அங்கு  அவனைத் தேடி  வர சமர்வரின் ஒற்றர்களுக்கு முதலில்  தோன்றவில்லை. மாவலியரே  " வறண்ட நிலங்களிலும் நம் ஒற்றர்கள்  நகரட்டும்  சமர்வரே" என்றார்.
ஒவ்வொரு  கணமும்  ஒட்டிப் பிணையும் நாகங்களென ஒருவர் மூச்சட்டோத்தை மற்றவர் உணர்ந்தனர் மாவலியரும் சுனதனும். அவர் விரைவு  அவனிலும் அவன் நிதானம் அவரிலும் தொற்றியது. பெண்களை காமுற்றும் காதலித்தும் மாவலியர்  புணர்ந்ததில்லை. அந்நிறைவை அவனை எண்ணும்  போது அடைந்தார். அன்பென்பதே கொன்று  விழுங்கும்  பெருவெறிதானோ என்றெண்ணி தனக்குள் புன்னகைத்தார்.
சுனதன்  தன்னை  மிக நெருக்கமாக  பின் தொடரும்  ஒரு இருப்பினை  உணர்ந்தான். தெரிதன்  சில நேரம்  அவனுடன் பேசும்  போது யாரிவன் என்பது போல் அவனை வெறித்து  நோக்கினான். மாவலியர் மனதிற்குள்  விடுத்த அத்தனை  அறைகூவலையும் அவன் செவி ஏற்றுது. "இதல்ல இதல்ல" என தனக்குள் ஒன்று அரற்றுவதை சுனதன்  கேட்டான். "இது தான்  இதுவே தான்" என  ஊக்கியது மற்றொன்று.  தன் தவிப்பினை தான்  மட்டும்  உணர்ந்து  நிறைந்தான்.
அவன்  செயல்களின்  நுண்மை தெரிதனை அச்சம்  கொள்ளச்  செய்தது. விதைப்பதற்கு எடுக்கும்  நேரமே ஆனது இன்னொரு  மனதை அசைக்க  அவனுக்கு. அவனை இழிந்துரைத்தனர் முகத்தில்  உமிழ்ந்தனர் சுடு சொல் கூறி விரட்ட நினைத்தனர் நிதானித்தனர் செவி கொடுத்தனர் அதிர்ந்தனர் சிலைத்தனர் அரற்றினர் அவன் அடி பற்றினர். அவனுள் எம்மாற்றமும் இல்லை. கணம் கணம்  என தன்னை பின் தொடரும்  மாவலியரின் குரலுக்கன்றி சுனதன்  எதற்கும்  செவி கொடுத்ததாய் தெரியவில்லை.
"அடுக்கினில் உயரும்  போது அழுகை குறைகிறது. அடுக்கில் தன்னை உயர்த்திக் கொள்வதொன்றே அறிவுடையோர் செயல். நாம் இதுவரை  கண்ட மாவலியத்தை இப்படி  வகுத்து விட முடியும்  சுனதரே" என்றான்  தெரிதன். சுனதன்  புன்னகைத்தான்.
"அடுக்குகள் உருவாகாத இடம் நோக்கிச்  செல்வோம்  தெரிதரே" என்றான்  மென் நகையுடன்.
சிம்மம்  நிறைந்த புல்வெளிகள் நீள் கரு நாகங்கள் நெளியும் சிறு பாலைகள் குளிர் மழை கொட்டும்  கானகங்கள் கடந்து சுனதன்  நடந்து கொண்டே இருந்தான். அவனை தொடர முடியாமல்  வலு தவறும் போது தெரிதர் திரும்பி நடந்து விட நினைப்பார். வெகு தூரம்  திரும்பி நடந்த பின் மீண்டு இச்சை தீர சுனதனைக் கொன்று மீளும்  மனம். ஆனால்  கால்கள்  அனிச்சையாய்  அவனைப் பின் தொடரும். மூன்றாண்டுகள் கடந்து விட்டன. அவனுக்கு  நோக்கம் என ஏதேனும்  இருப்பதாக  தெரிதனால்  இப்போது  நம்ப முடியவில்லை.
"ஊரும் புழுவிற்கு மட்டுமே  உண்டு வாழ்வதொன்றே நோக்கமென இருக்கும். காலத்திலும் தூரத்திலும் புழுவினும் பல மடங்கு தொலைவில் இருக்கும்  நாம் இப்படி  நடந்து மட்டுமே  கொண்டிருக்கப் போகிறோமா?" என வெறுப்பும்  தவிப்பும்  தொனிக்கும் குரலில்  கேட்டான் தெரிதன்.
"பறவைகளின் காடுகள் பாத்திகளில் முளைப்பதில்லை தெரிதரே. பறவைகள்  பாத்திகள் கட்டுவதில்லை. விதைத்தல் நம் பணி. முளைத்தல் மண்ணின்  கருணை. முளைப்பதைப் பார்க்கத் தாமதித்தால்  விதைப்பது சுருங்கும். மாவலியரின்  வாள் தீண்டிய இடத்தில்  மருந்தென நின்றது நம் சொல். அவ்வாள் தீண்டாத ஓரிடம்  நோக்கியே செல்கிறோம்" என தென் திசை நோக்கி கை நீட்டினான்  சுனதன்.
அத்திசையில் "மிதாட்றியோ மிலாட்றியோ மிதட்றிய்யொயொயொயொ" என ஊளையிட்டு  ஓடிவரும்  மஞ்சள்  களிம்புகளை உடல் முழுக்க பூசியிருந்த பெருங்கூட்டத்தை கண்டான்  தெரிதன். சுனதன்  வெறுமனே  நோக்கி நின்றான். தெரிதன்  விழிகளில்  உயிர் மீதான  பயம் ஒளியென ஏறியது. உடைவாளையோ தோளில்  தொங்கிய வில்லையோ கை தொடும்  எண்ணம்  எழும் போதே அவன் தொடையில்  ஒரு அம்பு தைத்தது. தெரிதன்  அலறவில்லை. சுனதன்  தெரிதனின்  தோள் பற்றினான். வாள் முனையில்  இருவரையும்  தங்கள்  குடி மன்றுக்கு அழைத்துச் சென்றனர் திட உடல் கொண்ட களிம்பு பூசியவர்கள்.
மைய நிலத்தின்  மொழியை திக்கிப் பேசிய ஒருவர் சுனதனிடம் சில கேள்விகள்  கேட்டார். அவன் சொன்ன பதிலை  தன் மொழியில் மக்களிடம்  சொன்னார்.  அவர்கள் பேரோலமென சிரித்தனர். தெரிதன்  அவர்களில் ஒருவராவதை சுனதன்  நோக்கி  நின்றான். அம்பு பிடுங்கப்பட்ட இடத்தில்  இன்னமும்  குருதி வழிந்து கொண்டிருந்தது. இளம் பெண்ணொருத்தி களிமண்  குவியலில் இருந்து வாயில்  மண் அள்ளினாள். எச்சிலுடன் அதனை கலந்து தெரிதனின்  கீழாடையை கிழித்தெறிந்து ஆழ்ந்த அந்த தொடைப்புண்ணில் துப்பினாள். கூட்டம் மீண்டும்  சிரித்தது.
தெரிதனிடம் நெருங்கிய  சுனதன்  " மாவலியர் தீண்டாத ஒரு சில மலைக்குடிகளில் இதுவும் ஒன்று. மஞ்சாளர் என்பது இவர்களின் பொதுப் பெயர்.நாம் ஆபத்தற்றவர்கள் என அவர்கள்  முடிவு  செய்து விட்டனர். இன்றிரவு அவர்களின்  முதற் தெய்வமான மஞ்சாளினிக்ககு பூசைகள்  நடைபெற உள்ளன. நம்மை இருக்கும்  படி வேண்டுகின்றனர்" என்றான்.
தெரிதன்  தலையசைத்தான். சத்தமாக  சீறும்  ஒலியிலேயே பேசினர் மஞ்சாளர்கள். காட்டுப் பன்றியும் மிளாவும் கருங்குரங்கும் அவர்களின்  முக்கிய உணவுகள். வேட்டையாடுதல் மட்டுமே  தொழிலும் பொழுதுபோக்கும். மாலை நெருங்கிய போது வடதிசையில்  இருந்த ஒற்றையடிப் பாதையின்  வழியாக  மலையுச்சி நோக்கி நடந்தனர் மஞ்சாளர்கள். தெரிதனின்  தொடைப்புண் மாலைக்குள்  வெகுவாக குணமடைந்திருந்தது. நாற்பதடி உயரமும் பதினைந்தடி அகலமும்  கொண்ட பெரும் பாறை  ஒன்றில் ஏதோ வேலை நடந்து கொண்டிருப்பதை சுனதன்  கண்டான். இரு கைகளிலும்  இருந்த வாள் தன் விலாக்களை குத்தியிருக்க இடப் பக்கம்   தலை சரித்து இள மைந்தனை முத்தமிட்டுக்  கொண்டிருந்தாள் மஞ்சாளினி. சுனதனும்  தெரிதனும் நெருப்புக்கு முன் அமர விழவு தொடங்கியது.

No comments:

Post a Comment