Friday 15 July 2016

பெருஞ்சுழி 28

   களிறு  சுகத்யையை  உள் காட்டினுள்  கொண்டு  சென்றது. அக்களிற்றின் பிளிறல்  கேட்டு  ஒரு பிடி அங்கு  ஓடி  வந்தது.  வலியும்  கோபமும்  தெறிக்க  சுகத்யை  உறுமினாள்.  “என்னை  வலி உணரச்  செய்து  விட்டான்  அந்த  சுனதன்.  இவ்வுலகின்  மிகப்  பெரிய அறிவிலி  என்னைப்  புணர்வதற்கா  நான் உடல்  மலர்ந்தேன்? எங்கிருக்கிறாயடா? உன்னை  ஒரு முறை  உண்டதன் பலனாய்  உன்னிலும் நான் உயர்ந்தவள் என உணர்ந்தேன்.  ஈற்று  வலியே  அறியாத  மூடன்  எங்கிருந்து  அழியும் இம்மக்கள்  கூட்டத்திற்கு  வழிகாண…” என்று அவள் வலியில்  உளற  மார்புக்  குருதி  மூளையை  அடைய  மயக்கம்  அடைந்து  மண்ணில்  விழப்போனாள். அவளை பிடியானை தன் துதிக்கையால்  பற்றி  மெல்லக்  கீழிறக்கியது. மண்  சூடு  உணர்ந்ததும் உடல்  முழுவது‌ம்  வியர்வையில்  நனைந்திருந்ததால் விழித்துக்  கொண்டாள். “மூடனே! சுனதா!என்  இச்சை  தீர்த்தவனே! எங்கேயடா சென்றாய்?” என விழிப்படைந்ததும்  மீண்டும்  அரற்றத் தொடங்கினாள்.  அதே  கோபத்தில் அவளை  தூக்கி  வந்த  களிற்றின்  துதிக்கையை அறைந்தாள். பிடியானையை நோக்கி  “ நீ ஏனடி  வெறித்து  நிற்கிறாய்? என் மேல் வயிற்றை  உந்து. என் உடலில்  ஒட்டிய  அவன் உதிரத்தை  பிதுக்கி எறிய  வேண்டாமா?” என பிடியானையின்  துதிக்கையை அறைந்தாள்.
சுனதன்  அந்நேரம்  மாவலியத்தின்  மக்கள்  நிரை  பரவியிருந்த  இடங்களை  ஆய்ந்து  கொண்டிருந்தான். “தெரிதரே  என் மகள் மண்ணடையும்  நாளிது. அவள் மண் நுழையும்  இந்நாளில்  நான் ஒன்றை  உணர்கிறேன்.  நான் கீழானவன். எக்காலத்துக்குமான  நன்மையை  என்னால் செய்து விட  முடியாது. ஆனால்  நம் மக்களுக்கு  நிலையான  ஆட்சிப்  பரப்பை  உற்பத்தி  நிலங்களை  உருவாக்க  வழிகாட்ட  முடியும்.  என் மகளை நான் காணும் போது  ஒரு நற்காரியமாவது  நான் செய்திருக்க  வேண்டும்.” என்றான்  சுனதன்.  தெரிதர்  லேசாக  புருவம் சுருக்கினார்.
“தெரிதரே  நம் பயண  நோக்கம் சுனத  வனத்தில்  இருப்பவர்களை  சமவெளிப்  பிரதேசம்  நோக்கி  அழைத்து  வருவதாகவே  இருந்தது. ஆனால்  மாவலியத்தின்  ஆட்சிப்  பரப்பை  கடந்தும் சிறந்த  நிலங்கள் உள்ளன.  அவற்றை  அடையாளம்  கண்டு  எல்லை  வகுப்போம்  தெரிதரே.  நம்  மக்கள் இன்னும்  விரிந்த  நிலம்  நோக்கி  பயணிக்க  உதவுவதாக  நம் பயணம்  விரியட்டும்” என்று உணர்ச்சி பொங்கச் சொன்னான்  சுனதன். உச்சத்தை  தவிர  வேறேதும்  சிந்திக்கத்  தெரியாதவன்  என எண்ணிக்  கொண்டு  தெரிதர்  அவனுடன்  பயணிக்க  தலையசைத்தார்.  மலைகள்  கடல்கள் சமவெளிகள் அடர் கானகங்கள்  என ஒவ்வொன்றாக பகுத்தாய்ந்தனர் .
"நிறைவுற்றதாய் உணர்கிறேன்  சுனதரே" என்றார்  தெரிதர்.
"ஏன்" என்பதைப் போல் விழி தூக்கினான் சுனதன்.
"தலைமுறைகள் பின்பற்றப் போகும்  உங்கள்  தேடலில்  உடனிருப்பதால் அல்ல அந்நிறைவு. புதிதாய்  முளைத்து மேலேழும் ஒரு நிலத்தினை காணும்  பேறு பெற்றதால்" என்றார்  குரலில்  மெல்லிய  ஏளனத்துடன்.
பிடியானை  உந்த  வெறி கொண்டு  மூச்சிழுத்து அப்பெண் மகவினை உதிரம்  சொட்ட பிறப்பித்தாள் சுகத்யை.  படுத்துக் கொண்டே கையில் சிக்கிய பனங்கருக்கினை பிடுங்கி  உயிர்  கொடி அறுத்தாள். வீரிட்டழுத குழந்தையை கண் முன்னே  தூக்கி  நோக்கி  “ஆதிரை” என்றாள் சுகத்யை  கண்களில்  நீர்  வழிய.  களிறு  தாயை  மகவுடன்  தூக்கி  பிடியானையின் முதுகில்  ஏற்றியது.
சுனதன்  முகத்தில்  கண்ணீர்  வழிய நடந்தான்.
"அன்னையை ஈன்றவரின் பெயர் சுகத்யையா மூதன்னையே" என்றான்  அரிமாதரன்.
மோதமதி  புன்னகைத்தவாறே "இல்லையடா தங்கம். அது நம் பேரன்னை ஆதிரை. அவள் நினைவாகவே உன் அன்னைக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது" என்றார்.
ஆதிரை  உள் நுழைந்தாள்.
"மூதன்னை என்ன கதை சொன்னார்கள்?" என அவளை நோக்கி ஓடி வந்த அரிமாதரனை அள்ளித் தூக்கி கேட்டாள்.
புரியாதவனாய் ஆதிரையை கழுத்து  வளைத்துப் பார்த்தான்.
"என்னடா?" என அவன் மூக்கை கிள்ளினாள் ஆதிரை.
உதடுகளை உள் குவித்து வலக்கை ஆட்காட்டி  விரலால் உதட்டை தட்டியவாறே யோசித்தான்  அரிமாதரன். பின் நினைவு மீண்டவனாய் "சுனதன்  தாத்தாவைப் பற்றி சொன்னார்கள்" என்றான். குழந்தைகளால் உறவாக்கிக் கொள்ளாமல்  யார் குறித்தும்  சிந்திக்க முடியாது போலும்  என எண்ணிக் கொண்டாள் ஆதிரை.
"சுனதன்  தாத்தா  மாசறியான்  தாத்தாவிற்கும் சுமதனி  பாட்டிக்கும்  பிறந்தார் சுனத வனம்  செல்லும்  வழியில்" என்றான்  உற்சாகமாக.
"பிறக்கும்  போதே சுனதன்  தாத்தா என்கிறாயா?" என்றாள்  ஆதிரை மெல்லிய  குறும்புடன்.
"ஆம் சிலர்  தாத்தாவாகவே பிறக்கின்றனர். தாத்தாக்களை போலவே சிந்திக்கின்றனர். அதனால்  தாத்தா ஆகாமலேயே இறக்கின்றனர்" என்றான்  படித்து ஒப்பிப்பது போல.
"இதையெல்லாம்  உனக்கு யார் சொல்கிறார்கள்?" என பீடத்தில் அவனை  அமர வைத்தாள்  ஆதிரை.
"என் களப் பயிற்சி தோழன்  சொன்னான். அவன் குடியிலும் அப்படி ஒரு தாத்தா இருந்தாராம். ஆட்டுகுட்டிகளுடன் விளையாடுவாராம். ஆடு போலவே அவருக்கும்  தாடி இருக்குமாம். ரொம்ப நல்ல மனிதராம். இருபது  வயதிலேயே தாத்தாக்களை போல உபதேசம்  செய்யத் தொடங்கி விட்டாராம். அன்பு செய்ய சொன்னாராம். அதை எப்படி  செய்வதெனத் தெரியாததால் அவர் குடியினர் அனைவரும்  சேர்ந்து அவரை கொன்று விட்டனராம். அது தவறு என்று அவரைப் பின்பற்றிய  இன்னொரு தாத்தா  சொன்னதால் எல்லோரும் சேர்ந்து ஒப்பாரி  வைத்து  அவர் உயிர் பிழைத்து வருவார்  என இன்றுவரை நம்பிக் கொண்டிருக்கிறார்களாம்" என்றான்  மிகத் தீவிரமாக.
"ம் வேறு வேறு என்ன சொன்னான்  அவன்?" என்றாள்  ஆதிரை  சிரிப்பை அடக்கியவாறே.
"அவன் அவ்வளவு  தான்  சொன்னான். இன்னொருவன் வேறு மாதிரி  ஒரு கதை சொன்னான் அம்மா" என ஆர்வத்துடன்  ஆதிரையின்  மடியில்  அமர்ந்து கொண்டான்.
"பிறக்கும்  போது மட்டுமல்ல. சிலருக்கு  பாதி வயது கடந்த பிறகும்  தாத்தா  ஆகு‌ம்  ஆசை வந்து விடுமாம். அப்படித்தான்  அவனுடைய  குடித் தலைவர் மனைவியையும்  மகனையும்  விட்டுவிட்டு முப்பது  வயதில்  தாத்தா ஆகு‌ம்  ஆசையில்  வீட்டை விட்டு ஓடிவிட்டாராம். பின் நிறைய உபதேசங்களை மனப்பாடம் செய்து கொண்டு மனைவியிடம் மன்னிப்பு கேட்க  வீட்டுக்கு  வந்தாராம். அவர் மனைவி இரும்பு கம்பியை பழுக்கக் காய்ச்சி சூடு போட்டு விட்டாராம். அதன் பின் சூட்டிற்கு பயந்து அவருடைய சீடர்கள்  யாரும்  திருமணமே செய்து கொள்வதில்லையாம்" என்றான்  அதே தீவிரத்துடன். மோதமதி  முகம்  மலர்ந்து அமர்ந்திருந்தாள்.
சேடியின் ஓசை கேட்டுத் திரும்பினாள் ஆதிரை. விழி தூக்கி  "என்ன" என்றாள்.
"சேனாதிபதி  கணபாரர்" என்றாள் சேடி.
"வாருங்கள்  கணரே" என எதிரே இருந்த  பீடத்தை கை காட்டினாள்  ஆதிரை. கணபாரரின்  முகம்  இறுகியிருந்தது.
"மாரதிரனின்  மூத்த மகன்  இன்று அகச்சிறை விட்டு தப்ப முயன்றிருக்கிறார். முக்கிய  கைதி என்பதால்  தண்டனையை அரசி தான்  அறிவிக்க வேண்டும்" என்றார்.
மோதமதியின் மலர்ந்த முகம் கூம்புவதை ஓர விழியால் ஆதிரை கண்டாள்.
"நீங்கள்  அரிமாதரனுக்கு  கதையை தொடர்ந்து  சொல்லலாம்  அரசியாரே. உங்கள்  மகனை தண்டிப்பதற்கும் தண்டிக்காமல்  இருப்பதற்கும்  முழு உரிமை எனக்குண்டு. நான் தண்டிக்காமல்  இருப்பதை தேர்வு  செய்கிறேன். அவையில்  சந்திப்போம்  கணரே" என எழுந்தாள் ஆதிரை.
மகனிடம்  பேசிய குழைவு நீங்கி ஒரு நொடியில்  மீண்டும்  அவள் அரசியாகிவிட்டதை வியந்து நின்றாள்  மோதமதி. மோதமதியின்  விழிகளில்  தெரிந்த நன்றியை ஆதிரை  கவனிக்கவில்லை.
"கதை சொல்லுங்கள் கதை சொல்லுங்கள்" என மோதமதியின்  கரத்தினை இழுத்தான் அரிமாதரன்.

No comments:

Post a Comment