Wednesday 3 August 2016

பெருஞ்சுழி 47

முதல் நாள் அந்தியில் போர் முரசம் முழங்கியபோது முக்கூட்டு  நாடுகளின் மையப்படை  சவில்யம் நோக்கி முன்னேறி இருந்தது.
இரண்டாம்  நாள்  வன்தோளனை மேலும்  முன்னேற விடாமல்  தடுத்து வைக்க மட்டுமே சவில்யத்தின்  படையினரால்  முடிந்தது. மூன்றாம்  நாள்  போர் தொடங்கியதும் வன்தோளன்  தன் அத்தனை  தளைகளையும் அறுத்தெறிந்தவனாக போரிட்டான். சுனதபாங்கத்தின் காவல் படைகளில்  இருந்தும்  கிராமங்களில்  இருந்தும்  புதிதாக  வீரர்கள்  வந்தவண்ணமே இருந்தனர். மூன்றாம்  நாள்  போரில்  வன்தோளன்  சவில்யத்தின்  எல்லைக் கோட்டையை தகர்த்தான்.
"வணிக மன்றுகள்  அனைத்திற்கும்  தீ வையுங்கள். சவில்யம் இனி இறந்தவர்களின்  நாடாகவே எஞ்ச வேண்டும்" என ஆணையிட்டான் வன்தோளன்.  வெறி கொண்டு சூறையாடினர் சுனதபாங்கத்தின்  வீரர்கள் . ஆதிரை  புகிந்தத்தை கை விட்டு பின் நோக்கி  நகர்ந்தாள். கணபாரர்  வன்தோளனை  மேலு‌ம்  முன்னேற  விடாமல்  தடுத்துக் கொண்டிருந்தார்.
ஆநிலவாயிலின் தளபதி  அமதிரன்  "நாம் ஏன் இன்னமும்  இந்நகரில்  காத்திருக்க வேண்டும்  வன்தோளரே. முன்னேறிச் சென்று அவள் படைகளை சிதறடிக்க  நம் படைகளால்  முடியாதா என்ன?" என்று கேட்டான். வெற்றியில்  சமநிலை இழக்கும்  எளியவன் என்பதற்கு மேல் வன்தோளன்  அவனுக்கு  எந்த முக்கியத்துவமும் அளித்ததில்லை என்றாலும் "சவில்யம் ஆழியால்  வளைக்கப்பட்ட தேசம்  அமதிரா. நாவாய்கள்  கட்டுவதில்  சவில்யர்கள் வல்லவர்கள். நாம் முன்னேறினால் நாவாய்களில் ஏறி தப்பித்து விடுவார்கள். நம்முடைய  ஆட்சி அமைந்த பின் கடல் வழியாகவே  மீண்டும்  மீண்டும்  நம்மை தாக்கிக் கொண்டிருப்பார்கள். வென்றும் நிலையான  ஆட்சி  அமைக்க முடியாமல்  போகும். ஆகவே ஆதிரையையும் அவள் படைகளையும்   முப்பக்கமும் சூழ்ந்து  தேய்த்து அழித்த பின்னரே அரியணை அமர்வேன்" என்றான் வன்தோளன்.
இரு நாழிகைகளாவது துயில வேண்டும்  என்ற எண்ணம்  வன்தோளனுக்கு ஏற்பட்டது. மேலு‌ம்  வெற்றியின்  நடுவில்  கொள்ளும்  உறக்கம் முழுவது‌ம்  தன்னை மீட்டுக்  கொள்ள உதவும்  என்று  எண்ணினான். ஆதிரை இவ்வளவு  விரைவாக  பின் வாங்கி விடுவாள் என அவன் எண்ணியிருக்கவில்லை. கணபாரரும்  தன்னை சமாளிக்க  முடியாமல்  திணறுவதால் அவர் மேலும் வன்தோளனுக்கு மெல்லிய  கசப்புணர்வு  எழுந்திருந்தது. காமிலரை அவன் எண்ணிக்  கொண்டான். ஆதிரை  தன்னை நோக்கி முன்னேறாமல் காமிலரை நோக்கி நகர்ந்த போதே அவள் அஞ்சிவிட்டாள் என எண்ணினான். அகல்யையும்  விகந்தரும்  கண் முன் வந்த போது  தன்னை ஈன்றவர்கள் இறந்ததை அப்போது  தான்  அவன் சித்தம்  தொட்டறிந்தது. அகல்யைக்கு இழைக்கப்பட்ட  துன்பங்கள்  மட்டுமே  தன்னுடல் எனத் தோன்றியது  அவனுக்கு. தன்னுடைய  வெற்றிகளை பரத்தையருடன் மட்டுமே  பகிர்ந்து கொள்ள முடியும்  எண்றெண்ணிய போது அவன் கண்கள்  வழிந்தன. பின் அதையே கற்பனை செய்யத் தொடங்கினான். தன் வெற்றியை வியந்து தன்னுடன் உறவாடப் போகும்  அத்தனை  பெண்களின்  விழிகளிலும் இறுதியில்  எஞ்சி நிற்கப் போகும்  ஏளனத்தை அவன் மூடிய விழிகளில்  தெளிவாகக் கண்டன. ஏளனமாக நோக்கும்  அப்பெண்களை எப்படியெல்லாம்  துன்புறுத்துவது என கற்பனை செய்யத் தொடங்கினான். வெற்றுடலுடன்  நிறுத்தி ஒரு பெண்ணை சவுக்கால்  அடித்துக் கொண்டிருந்தான். வெள்ளையான அவள் முதுகில்  கசை உருவாக்கிய ஆழமான  செவ்வரித் தடங்களில்  இருந்து குருதி வழிந்து கொண்டிருந்தது. அறை மூலையில்  ஒன்றிக்கொண்டு நின்ற அப்பெண்ணின் உடல் நடுங்கியது. அவளை எங்கோ கண்ட நினைவு மீளவே எழுந்து சென்று  அவள் தலைமயிரை பற்றி இழுத்து முகத்தை  நோக்கினான். கண்களில்  நீர்  வழிய கூப்பிய  கைகளுடன்  அவன் முன் நின்றிருந்தாள்  அகல்யை. வன்தோளன்  திடுக்கிட்டு விழித்துக்  கொண்டான். இரு வயதில்  அவன் அன்னையை பிரிந்து குருகுலம்  சென்றபோது அவன் எந்த துக்கத்தையும்  உணரவில்லை. மற்ற மாணவர்கள்  அழுவது கூட அவனுக்கு  சிரிப்பையே வரவழைத்தது. மறுநாள்  காலை எழுந்த போதே அகல்யை  தன்னருகே  இல்லையென்பதை உணர்ந்தான். இரு வயதில்  உணர்ந்த அதே தனிமையை இறுக்கத்தை பயத்தை வன்தோளன்  புகிந்தத்தின்  அரண்மனையில் உணர்ந்தான்.
உப்பரிகையிலிருந்து  வெளியே பார்த்தான். வீரர்கள் எரி வட்டம்  அமைத்து ஆடிக்கொண்டும் பாடிக் கொண்டும் இருந்தனர். நிமிர்வும் தெளிவும் இல்லாத  வன்தோளனை  அவர்கள்  கண்டதில்லை. ஒருவேளை  இப்போது  தன்னை காண நேர்ந்தால்  அவர்கள்  தன்னைக் கொல்லவும் வாய்ப்பிருக்கிறது என்றெண்ணிக் கொண்டான்  வன்தோளன். திடீரென  அவ்வெண்ணம்  அவனை அடைந்தது. ஆதிரை காமிலரை கொன்றதன் காரணம். சுனதபாங்கத்தின்  உபதளபதியான கோரிதமணை அழைத்தான்  வன்தோளன். காமிலர்  இறந்த துக்கம்  அவன் முகத்தில்  பிரதிபலித்தது. அச்சமயம்  அவன் தன்னை ஆழமாக  வெறுப்பான் என வன்தோளன் உணர்ந்தான். அவன் முகத்தில்  காமிலர் குறித்தோ விகந்தர்  குறித்தோ எந்த குழப்பமும்  இல்லை  என்பதை கோரிதமண் அறிவான்.
"இவ்வரண்மனையிலிருந்து ஆழி எவ்வளவு  தூரத்தில்  இருக்கிறது?" என்றான் வன்தோளன்.
"கிழக்கே மூன்று  காத தூரம் இளவரசே" என்றவன் அனைத்தையும் உணர்ந்தவனாய் "மேலு‌ம்  புகிந்தத்தை  கடக்காமல் நாற்பது  காத தூரம்  பயணித்தால்  நம் கண்ணில்  படாமல் சதுப்பு காடுகளை கடந்து மேற்கே விரிந்த பொட்டலை அடைய முடியும்" என்றான்  பதற்றத்துடன்.
வன்தோளன்  முகம்  அமைதி அடைந்தது.
"போர் நாளை தான்  தொடங்குகிறது" என்றான் வன்தோளன்  தனக்குள்ளாகவே சிறுவனுக்குரிய உற்சாகத்துடன்.

No comments:

Post a Comment