Monday 22 August 2016

நூல் இரண்டு - மழைப்பாடல்

கங்கைக்ரையில் அமைந்த தொன்மையான  ஷத்ரிய குலங்களை கடந்து பார்ப்பவராக அறிமுகமாகிறார் பீஷ்மர். பழம்பெருமைகளால் குலப்பூசல்களில் ஈடுபட்டிருக்கும் அதிகாரம்  மிக்க  ஐம்பத்தாறு ஷத்ரிய நாடுகளை முற்றாக  தவிர்த்து விட்டு பாரதவர்ஷத்தின் எல்லை நிலங்களில்  இருந்து அரசுகள் உருவாகி வருகின்றன. மகாபாரதத்தை மிக மிக எளிமைப்படுத்தப்பட்ட குடும்பப் பகையாகவும் அதன் மீது போடப்பட்ட தொன்மங்களின் வழியாக  ஒரு மாயாஜால  கதையாகவும் நம்மில்  பலர்  அறிந்திருப்போம். ஆனால்  அக்கால  இந்தியா வரலாற்றின்  ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம் மகாபாரதத்தில்  உள்ளது. மழைப்பாடல் அவ்வரலாற்றை தொட்டுச் செல்லும்  அதே நேரத்தில்  பெரும் ஆளுமைகளையும் அவர்களின்  முழு விரிவோடு அறிமுகம்  செய்கிறது.

விழியற்றவனுக்குரிய பதற்றத்துடன்  அறிமுகமாகும்  திருதராஷ்டிரன் பீஷ்மரை மல்யுத்தத்திற்கு அழைத்து அவரிடம்  அடைக்கலம்  கொள்கிறான். விதுரன்  அரசு சூழ்கையில் பீஷ்மருக்கு இணையாக  ஏறி வரும்  இடத்திலிருந்தே மிக நுண்மையான  வார்த்தைகளில்  நிகழும் அரசியல்  உரையாடல்களும் தொடங்கி  விடுகின்றன. பண்டைய  இந்தியாவின் ஆட்சியதிகாரத்தில் மண நிகழ்வுகள்  அரசியலுடன் தொடர்புடையவாக இருந்திருக்கின்றன. அஸ்தினபுரியை ஷத்ரிய  நாடுகளை  கடந்து முழு பாரதவர்ஷத்தையும் வென்றெடுக்கும்  வல்லமை மிக்க தேசமாக  மாற்ற விரும்புகிறாள் சத்யவதி. கிழக்கில்  வணிகத்தாலும் பொன்னாலும் புது வல்லமை பெற்று வளரும்  காந்தாரத்திற்கு திருதராஷ்டிரனுக்கு மகற்கொடை கேட்டு புறப்படுகிறார் பீஷ்மர். அஸ்தினபுரியின் மன்னனான யயாதியால் ஆட்சி மறுக்கப்பட்ட துர்வசு பாலையின் தொல் குடிகளான லாஷ்கரர்களுடன் இணைந்து அமைத்த அரசு காந்தாரம். மூன்று நெருப்புகளின் மீதேறி  வரும்  மூன்று  காற்றுகளாக பாலையின்  நில விரிவும் பாலை நில மக்களின் குணமும்  விவரிக்கப்பட்ட பின் காந்தார இளவரசனான சகுனி  அறிமுகமாகிறான்.

பாரதவர்ஷத்தை வென்றெடுக்கும் அதே நோக்கத்துடன் வளர்கிறான்  சகுனி. நாக சூதன் ஒருவன்  சகுனியிடம் சொல்லும்  ஒரு கதை அவன் முடிவுகளை கட்டுப்படுத்தவதாக அமைகிறது. ஒரு செங்கழுகினை சகுனி  அம்பெய்து வீழ்த்துவதும் ஓநாய் ஒன்று அக்கழுகினை உண்பதை சகுனி  பார்த்து நிற்பதும்  அவனுள் உருவாக்கும்  நிலையின்மை அவன் ஒவ்வொரு  செயலிலும்  அவனைத் தொடர்கிறது. மூர்க்கமும் பேரன்பும் கலந்தவனாக திருதராஷ்டிரனும் அவனை நன்கறிந்து வினை புரிபவனாக விதுரனும் உருப்பெறுகின்றனர். காந்தாரத்தின் பதினொரு இளவரசியரும் திருதராஷ்டிரனுக்கு மணமுடிக்கப்படுகின்றனர். வசுமதியாகிய காந்தாரி நகர் நுழையும்  போது பெய்யும்  பெருமழையுடன் யமுனையில் அறிமுகமாகிறாள் குந்தி.

தன் வயிற்றுக் கருவை கலைக்க  வரும் மருத்துவச்சியிடம் நிமிர்வுடன் கட்டளையிடும் போதே குந்தியின்  ஆளுமை வெளிப்பட்டு விடுகிறது. யயாதியால் வெளியேற்றப்பட்ட இன்னொரு மைந்தனான யதுவின் குலமாக வளர்ந்து நிற்கிறது  யாதவ குலம். சூரசேனரின் மகளாய் மதுவனத்தில் வசுதேவனுடன் பிறக்கிறாள் குந்தி. குலங்கள் ஒருங்கிணைந்து யாதவ குடிகள்  தலைமை நோக்கி நகரும்  சித்திரம்  குந்தியின் பிறப்பினூடாக சொல்லிச் செல்லப்படுகிறது. வசுதேவன் மதுராபுரியின் அமைச்சனாக உயர்கிறான். துர்வாசரின் மந்திரத்தால் ஒருவனை கவரும்  குந்தி அவனால்  கருவுறுகிறாள். நாகங்களின் துணையோடு நிகழும் கர்ணனின்  பிறப்பும் குந்தி அவனை பிரிவதும்  ராதை கண்டெடுப்பதும் கொந்தளிக்கச் செய்யும்  அனுபவங்கள்.

அதேநேரம் அரசியல்  காய் நகர்த்தல்களும் நிகழ்கின்றன. அஸ்தினபுரியிலிருந்து குந்தியை பெண் கேட்டு தூது வருகிறது. கம்சன்  குந்தியை சிறையெடுக்க முயல்கிறான். தன்னை மீட்டுக்  கொண்டு  அரசியல்  நுட்பத்துடன்  குந்தி எடுக்கும்  முடிவுகள்  பிரம்மிக்க  வைக்கின்றன. குந்தி பாண்டுவை தேர்ந்தெடுக்கிறாள். தன் நிமிர்வினால் அனைத்தையும்  கடந்து செல்கிறாள். குந்தியின்  மீதான  விதுரனின் நுண்ணிய  காதலும் அவள்  வளர்ப்பு அன்னையான  தேவவதியிடம் அவள் அதனை கூர்மையுடன் வெளிப்படுத்தும்  விதமும்  எதற்கும்  நடுங்காதவளாக குந்தியை விரித்தெடுகின்றன. பாண்டுவை அவள் அன்னையெனவே அணுகுகிறாள். உடற்குறையால் அவன் சூடிக் கொண்டு வேடத்துக்கு  அப்பால் அவனை கண்டு கொள்கிறாள்.

திருதராஷ்டிரனின் உலகில்  முழுதாய்  நுழைந்து விட கண்களை கட்டிக் கொள்கிறாள் காந்தாரி. அவள்  அரசியல் நுட்பங்களும் அச்செயலினூடாக கரைகின்றன. குஹ்யமாசனம் எனும்  தடாகத்தில்  குந்தி தன் முகத்தை  காணும்  போது அதில்  அவள் காணாத  வஞ்சம்  நிறைந்த காந்தாரியின் கண்களை காண்கிறாள் எனும்  சித்தரிப்பே அஸ்தினபுரியை மையமாக்கி குந்தியும் காந்தாரியும் நிகழ்த்தும்  ஆடலாக மழைப்பாடலை மாற்றுகின்றன. சகுனி ஒரு பக்கமும்  விதுரன்  மறு பக்கமும்  நின்று  அவ்வாடலை நிகழ்த்துகின்றனர்.

அம்பிகையும்  அம்பாலிகையும்  தொடங்கி வைத்த எளிய அச்சங்களால் ஆன சிக்கலே பெரும்  வஞ்சங்களாக வளர்கிறது. திருதராஷ்டிரன் மணிமுடி சூட முடியாமல்  அச்செய்தியை திருதராஷ்டிரனிடம் தெரிவித்து பாண்டுவை மன்னனாக்கும் இடத்தில்  அவன் கூர்மதியும் தற்செயல்களை கையாளும்  திறனும்  அவன் அண்ணன்  மீதான  நம்பிக்கையும்  வெளிப்படுகிறது. காந்தார  குடிகள்  நகர் நுழையும்  போதும்  விதுரன்  அதையே செய்கிறான். அரியணை ஏற்று மாத்ரியை மணந்த பின் பாண்டு அவர்களுடன் வனம்  நோக்கிச் செல்கிறான்.

துரியோதனனின் பிறப்பு கலியுகத்தின் பிறப்புடன் இணைத்து சொல்லப்படுகிறது. குந்தி பாண்டுவிடம் தனக்கொரு மகனிருப்பதை சொல்கிறாள். அவன் இச்சையை ஏற்று மற்ற மகவுகளையும் பிறப்பிக்கிறாள். பாண்டவர்கள்  ஒவ்வொருவரின் பிறப்பும் ஒரு பருவத்துடனும் தெய்வத்துடனும் மிருகத்துடனும் இணைத்து சொல்லப்படுகிறது. அவர்களுடைய  உயிரியல்  தந்தைகளையும் நேரடியாக அறிவிக்காமல்  கோடிட்டுச் செல்கிறது மழைப்பாடல்.

தந்தையென்ற முழுமையை உணர்ந்த பின் பாண்டு  இறக்கிறான். மாத்ரியும் அவனுடன் சிதையேறுகிறாள். அதுவரை  நிகழ்ந்தவை பொருளற்றுப் போக அம்பாலிகையை அழைத்துக்  கொண்டு  காடேகுகின்றனர் சத்யவதியும் அம்பிகையும்.

முதல் முறை படித்தபோது மழைப்பாடல் அதிர்ச்சியூட்டவதாகவே இருந்தது. பல்வேறு திசைகளில் நகர்வதாகவும் தெரிந்தது. மறு வாசிப்பின் போதே மழைப்பாடலின் இறுக்கமான மொழி நடையினுள் இயல்பாக நுழைந்து கொள்ள முடிந்தது. பருவநிலை தொடர்ந்து சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது. திருதராஷ்டிரனின் அரியணை ஏற்பு நிகழ்வு பெரு மழைக்குப்பின் ஒருங்குகிறது. காந்தாரி அஸ்தினபுரி நுழைவதற்கு முன் கடும் வெயிலும் குந்தி மார்த்திகாவதி நீங்குவது வரை பெரும் மழையும் துரியோதனன் பிறப்புக்கு முன் வெயிலும் இறுதியாக சத்யவதி தன் மருகிகளுடன் வனம் புகும்போது மழை பெய்யத் தொடங்குவதுடன் மழைப்பாடல் முடிகிறது.

கரவும் கூர்மையும் நிறைந்த நுண்மையான அரசியலாடல்கள் குந்தியாலும் விதுரனாலும் சகுனியாலும் முன்னெடுக்கப்படும் அதே நேரத்தில் அவர்களின் உயரத்தை நினைவுறுத்தும் விதமாய் விதுரனிடம் அம்பிகையும் குந்தியிடம் அம்பாலிகையும் சகுனியிடம் அவன் சகோதரிகளும் நடந்து கொள்கின்றனர்.

ஷத்ரிய தர்மங்களும் நியதிகளும் அன்றைய ஆட்சியதிகாரத்தை எவ்வாறு முன்னெடுத்தன என்பதையும் மழைப்பாடல் சொல்லிச்செல்கிறது. சிவை சம்படை என கைவிடப்பட்ட பெண்கள் மழைப்பாடலிலும் தொடர்கின்றனர்.

ஒரு யுகத்தின் தொடக்கம் என்பது மனநிலைகளிலும் நியதிகளிலும் ஏற்படும் மாற்றமே. அதனை பல்வேறு விசைகள் கட்டுப்படுத்துகின்றன. மையமும் விளிம்பும் போரிடுகிறது. மையமாக தொல் குடி ஷத்ரியர்களும் விளிம்பாக புதிதாக எழுந்து வரும் அரசுகளும் மோதப்போகும் பெரு நிகழ்வின் களம் ஒருங்கும் சித்திரத்தை மழைப்பாடல் அளிக்கிறது. ஒரு தலைமுறையினர் தங்களை கனவுகளை விடுத்து வனம் நுழைகின்றனர். அக்கனவுகளின் உச்சத்தை அடுத்த தலைமுறை ஏற்று வனத்தில் இருந்து மீள்கிறது. மத்திய மற்றும் வட இந்திய நிலப்பரப்பின் பல்வேறு உட்கூறுகளையும் அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வியலையும் முழுமையாகவே தொட்டுச் செல்லும் அதே நேரம் அன்றிலிருந்து இன்றுவரை நீளும் ஒரு தொடர்ச்சியையும் அளிக்கிறது.

தொன்மங்களை கதை நகர்வுடன் இணைத்து விவரித்துக் கொள்ளும் பயிற்சியை முதற்கனல் அளித்திருந்தாலும் மழைப்பாடல் மேலு‌ம் சிக்கலான பரிணாமம் கொண்ட தொன்மங்களைக் கொண்டுள்ளது. அதேநேரம் அவற்றை இணைத்துக் கொள்ள முடியாததும் வாசிப்பிற்கு தடையாக இருக்காது என்றே எண்ணுகிறேன். மேலும் பல அத்தியாயங்கள் தொடங்கும் இடத்திலிருந்து பல்வேறு நிகழ்வுகளினூடாக பயணித்து மீண்டும் தொடங்கிய இடத்திற்கு வந்து நிற்கின்றன. எக்குறிப்புகளும் இல்லாமல் அத்தியாயத்தின் திசை மாறுவதையும் மீண்டும் வந்து இணைந்து  கொள்வதையும் துல்லியமாக பிரித்தறிய முடிகிறது.

மழைப்பாடலில் வளர்த்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவரும் கை நீட்டினால் தொட்டுவிடக்கூடிய தூரத்தில் நின்று புன்னகைக்கின்றனர். ஆவலும் அச்சமும் மேலிட நானும் புன்னகைக்கிறேன்.

No comments:

Post a Comment