Tuesday 15 November 2016

மீட்பன் - சிறுகதை

காட்டின் விளிம்பிற்கு தள்ளப்பட்டு மனிதர்களை வேட்டையாடி உண்ணும் புலியினை விட பரிதாபகரமான மிருகம் எது? இல்லை. தவறான தொடக்கம். விளிம்புக்குத் தள்ளப்பட்ட ஒரு புலியுடன் என்னை ஒப்பிட முடியாது. ஏனெனில் கேவலம் மனிதர்களை வேட்டையாடும் அந்தப் புலி நிச்சயம் ஒரு சமயம் அக்காட்டில் விரைவுடனும் சீற்றத்துடனும் வேட்டையாடி இருக்கும். நான் அவ்வாறல்ல. விளிம்பிலிருந்து மையத்தை எட்டி எட்டிப் பார்த்து அதனை நெருங்க முடியாமல் தள்ளி நிற்பவன்.

மன அழுத்தம் காதல் தோல்வி தேர்வில் தோல்வி என ஒற்றை வார்த்தைகளில் தற்கொலைக்கு நிறைய காரணம் சொல்வார்கள் தொலைக்காட்சிகளில். உண்மையில் ஆண்களுக்கு (பெண்களுக்கும் அப்படித்தான் இருக்கும்) இவையெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. குறிப்பாக இந்திய ஆண் மனம் ஒரு பெண்ணையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தாது. எனவே என் தற்கொலைக்கு காரணம் என்னவென்று யோசித்து யோசித்து பார்க்கிறேன். ஒன்றும் புலப்படவில்லை. அதுவே நல்லதொரு காரணம் தானே. என் இறப்பு இவ்வுலகில் எந்த வித்தியாசத்தையும் உருவாக்கி விடப்போவதில்லை. என் போன்ற ஒருவனின் இருப்பும் எந்த வித்தியாசத்தையும் உருவாக்கி விடுவதில்லை. நாளை எழப் போகும் சூரியனை நான் பார்க்கப்போவதில்லை. இதுவரை எப்போது தான் பார்த்திருக்கிறேன். ஒருவேளை நாளை தான் உண்மையான உதயத்தை காணப்போகிறேனோ என்னவோ. அனைவரும் செத்துப் போவது உறுதி. இது என் சுய தேர்வு. வாழ்வில் சுய தேர்விற்கு இடமற்ற ஒருவனின் இறுதி சுய தேர்வு எனக் கொள்ளலாமா? அல்லது முதல் சுய தேர்வு.

என்னுடைய முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று உணர்வுபூர்வமான எந்த சம்பவமும் சற்றே யோசித்தால் கூட முழுமையாக என் நினைவில் எழுந்து விடும். அந்த நிகழ்ச்சி நடந்த சூழலின் வாசனையைக் கூட என்னால் உணர்ந்து விட முடியும். சிக்கல் என்னவென்றால் எனக்கு உணர்வுபூர்வமானதாகத் தெரியும் எதுவுமே பிறருக்கு அப்படித் தோன்றுவதில்லை என்பதே. பிறனிடம் எதையுமே எதிர்பார்க்கக் கூடாது. சிறுவனாய் இருந்தது முதலே இதில் முழு உறுதியோடு இருந்தேன். அது குலையத் தொடங்கிய போதே நான் சாகத் தொடங்கி விட்டேன் என நினைக்கிறேன். உயிரின் உண்மையான ஆட்டம் தெரியத் தொடங்கியதும் அன்று தான். பெண். முதலில் ஆணுக்கு மிக அபூர்வமான குழப்பமூட்டக் கூடிய ஒரு இருப்பாக பெண் தெரிவாள். எனக்கும் அப்படியே. இருந்தும் நானொரு பெண் விரும்பி. பித்தன் அல்ல விரும்பி. ஒரு பெண்ணின் இருப்பு என்னை குழந்தையைப் போல் ஆக்கிவிடும். வயதோ உருவோ அல்ல பெண்ணின் சிரிப்பு. நான் என்றுமே எதிர்பார்த்தது அந்த சிரிப்பை மட்டுமே. ஏனென்று தெரியவில்லை பெண்கள் என்னை நோக்கி சிரிப்பதே இல்லை. என் போன்ற பல ஆண்களை நோக்கி சிரிக்கும் பெண்கள் என்னை நோக்கி மட்டும் சிரிப்பதே இல்லை. என்னை ஒரு பொருட்டென இருப்பென எந்த பெண்ணும் உணர்ந்ததாக எனக்கு நினைவில் இல்லை. நான் சத்தமாக பேச மாட்டேன். கெட்ட வார்த்தைகளோ இன்னொருவனை கிண்டல் செய்வது போன்ற வார்த்தைகளோ என்னிடமிருந்து வெளிப்பட்டதே கிடையாது. சண்டை ஏதாவது நடந்தால் அதனை தவிர்த்து விட்டு வேறு பக்கம் சென்று விடுவேன். எந்த மாணவர் போராட்டங்களிலும் கலந்து கொள்ள மாட்டேன். ஒழுங்காக வகுப்புகளுக்கு செல்வேன். சுமாராக படிப்பேன். வகுப்பில் எழுந்து நின்று ஏதாவது பேச வேண்டும் என்றால் எனக்கு உதறல் எடுத்து விடும். ஆங்கிலம் சுத்தமாகப் புரியாது. ஆங்கிலத் திரைப்படங்களை நான் பார்ப்பதில்லை. பேருந்தில் படியில் நிற்க மாட்டேன். குடிப்பழக்கமும் எனக்கு கிடையாது. எந்த விளையாட்டும் தெரியாது. சதுரங்கம் கேரம் போன்றவை உட்பட. கல்லூரி ஆசிரியர்களை முழுதாக மதிப்பேன். எப்போது எதிரே பார்த்தாலும் சலாம் போடுவேன்.

நீங்களே சொல்லுங்கள். நான் எப்படிப்பட்டவன்? உங்கள் பதில் என்னவென்று எனக்குத் தெரியும். அம்மாஞ்சி கோழை அதானே. அது எனக்கே தெரியும். என்னைப் பற்றி உங்களுக்கு இப்போது இளக்காரமோ பரிதாபமோ தோன்றி இருக்குமே. இப்போது உங்கள் மூளை கூர்மையடையும். உங்கள் மேல் நான் சுமத்தக்கூடிய குற்றச்சாட்டுகளை எப்படி எதிர்கொள்வதென யோசிக்கிறீர்கள் சரியா? தவறாய் இருந்தாலும் யாருக்கு நஷ்டம். ஆம் பொதுவாக மேற்சொன்ன குணமுடைய ஒரு பையன் நன்றாக படிப்பான். நான் படிப்பிலும் சுமார் தான். என் நண்பர்கள் குழுவாக அமர்ந்து இரவு முழுவதும் அரட்டையடித்துக் கொண்டே படித்து அனைத்திலும் தேர்ச்சி பெற்று விடுவார்கள். நான் செமஸ்டர் முழுக்க பயந்து பயந்து படித்து எப்படியும் ஒரு பேப்பரிலாவது அரியர் வைத்து விடுவேன்.

இப்படி இருந்தால் பெண்களுக்கு பிடிக்காதாமே. உடன் படிக்கும் ஒருவன் சொன்னான். முதலில் ஏக்கமாகவே இருந்தது. ஒரு பெண் கூட நம்மிடம் பேசுவது இல்லையே என. பிறகு மெல்ல மெல்ல சமாதானம் அடைந்துவிட்டேன். ஆம் நீங்கள் மிக வெறுக்கக்கூடிய குழந்தை வகை நான். தான் நினைத்தது நடந்தே தீர வேண்டும் என்று அழுது அடம்பிடித்து தன்னை காயப்படுத்திக் கொண்டு பிறரையும் காயப்படுத்தி அமர்க்களம் செய்யும் குழந்தையை அனைவரும் விரும்பவே செய்கிறார்கள். நான் அப்படியல்ல. வளர்ப்பு நாய்க்குட்டி போல் அடித்தாலும் வாலாட்டிக் கொண்டு ஒன்றிக் கொள்வேன். எளிமையாக சமாதானம் அடைந்து விடுவேன். நான் நினைத்தது நடக்க வேண்டுமென நிற்கத் தெரியாது எனக்கு. என் மேல் அருவருப்பு கூடுகிறது அல்லவா?

ஒத்த அலைவரிசையும் அதிர்வெண்ணும் உடையவர்களாய் உயர்வானவற்றை நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது பல்லை இளித்துக் கொண்டு ஒவ்வாத ஒருவன் அறிவும் இங்கிதமும் இல்லாத ஒருவன் உங்களிடம் வந்து நுழைய நினைப்பான். நான் அத்தகையவனே. பெரும்பாலும் நான் சொல்வதற்கு மட்டுமல்ல பிறர் சொல்வதை கேட்பதற்கும் எனக்கு அனுமதி இருக்காது. தொடர்ந்து படியுங்கள். தயவு செய்து.

முதலில் பெண்களிடம் பேச கூச்சப்பட்டேன். இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது. என் கூச்சம் தான் பெண்களை என்னிடம் நெருங்க விடாமல் செய்கிறது. அதைத் தவிர்த்துவிட்டு நெருங்கினால் எல்லோரும் என்னுடன் சகஜமாக உரையாடுவார்கள் என நம்பினேன். எவ்வளவு மடத்தனமான எண்ணம் இல்லையா! குருதியை வைத்தே பெண் ஆணை மதிப்பிடுகிறாள். ஒருவனுடைய சிறப்புத் தகுதிகள் உடற்கட்டு உயரம் ஈர்க்கும் தன்மை இவைதான் பெண்ணை ஆணை நோக்கி நெருங்க வைக்கின்றன. இயற்கையை அப்போது தான் உணர்ந்தேன். அடிக்கடி சளி பிடிக்கும் குள்ளமான வயிறு சற்று வெளியே தள்ளியிருக்கும் பயந்தாங்கொள்ளியை எந்தப் பெண்ணுக்கு பிடிக்கும். சில பெண்களின் பார்வையே என் நிலையை எனக்கு உணர்த்திவிட்டன. அதன்பிறகு எந்தப் பெண்ணையும் நிமிர்ந்து பார்க்கும் துணிவு எனக்கு வரவில்லை. எனக்கு காதல்களோ பெண் பழக்கமோ இல்லாததால் "ஆபத்தற்ற" மிருகமாக என்னைக் கருதி என்னிடம் நிறைய காதல் கதைகளை சொன்னார்கள் உடன் படித்தவர்கள். பொறாமையும் அவமானமும் அதனால் உருவான ஒரு மனவலியும் முறுக்க அவற்றைக் கேட்டு அமர்ந்திருப்பேன். சில இரவுகளில் உடன் படித்தவர்களின் காதலிகளை நினைத்து சுய மைதுனம் செய்வேன். அவர்களை நேரில் காணும் போது அதனை நினைத்துக் கொண்டுதான் பார்ப்பேன். பெண்கள் எப்படியோ அதை அறிகிறார்கள். அவர்களை பழி வாங்கிவிட்டதாக ஒரு கொடூர அமைதி மனதில் பரவும்.

அதுவு‌ம் சில நாட்கள் தான் நீடித்தது. பின்னாட்களில் எண்ணி எண்ணி வெறுத்த அந்த கேவலமான கல்லூரி நாட்கள் ஒரு வழியாக முடிவுக்கு வந்தன.

பிறகு எப்படியோ உண்பதற்கு மட்டும் போதுமானதாக ஒரு வேலை கிடைத்தது. என் குடும்பம் குறித்து சொல்லியே ஆகவேண்டும். உண்மையில் தற்கொலை என்ற சிறந்த முடிவை நோக்கி என்னை உந்தியதில் என் குடும்பத்துக்கு முக்கியமான பங்குண்டு. அழிந்து முளைக்க வேண்டிய விதையை அழுக வைக்கிறது குடும்பம். பெரும்பாலான நேரங்களில் என்னை ஈன்றவர்கள் எப்போது இறப்பார்கள் என்று எண்ணத் தோன்றும். ஜெயமோகனின் வெண்முரசு நாவல் வரிசையில் வரும் வரியென நினைக்கிறேன். புட்கள் முளைக்க வயதான மரங்களை காட்டுத்தீ அழிக்க வேண்டுமென. அப்போது தான் காடு முளைத்தெழும் என. என் குடும்பத்தினருக்கு நான் ஒரு உற்பத்தி அலகு மட்டுமே. அவர்களும் எனக்கு அப்படித்தான். அவர்களை மிதமிஞ்சி நுகர்ந்து விட்டேன் என்பது எவ்வகையிலும் சரியான சொற்றொடர் அல்ல. அவர்களும் என்னை அதே அளவிற்கு நுகர்ந்திருக்கின்றனர். பேரத்தில் எப்போதும் நான் தோற்பவனாகவே இருந்திருக்கும்.

நண்பர்கள் என்ற வசதியான வார்த்தையைக் கொண்டு அழைக்கப்பட சிலர் என்னுடன் இருந்தனர்..அவர்களும் என்னை உறிஞ்சினர். பெண் செய்வதும் அதைத்தானே சூடான குருதியை ஆணின் குறி வழியே உறிஞ்சிய பிறகு அவனைத் தூக்கி எறிகிறாள். உறிஞ்சப்படுபவன் பரிதாபத்துக்குரியவன். உறிஞ்சப்படுவதற்கு என்னில் எதுவும் எஞ்சவில்லை என்றான போது என்னை தூக்கி எறிந்தனர்.

என் நண்பர்கள் அனைவரிடமும் சென்று பிச்சை கேட்க விழைகிறேன். என்னை உறிஞ்சிய ஒருவனையும் விடக்கூடாது என்ற வெறி சில சமயம் எழும். அவர்களின் துணைவிகள் அத்தனை பேரின் புகைப்படமும் என்னிடம் உண்டு. அந்தப் படங்களை எதிரே வைத்துக் கொண்டு சுய மைதுனம் செய்வேன். அவர்களை வென்று விட்டதாய் ஒரு நிம்மதி எழும். பின்னர் கடும் கசப்பு நெஞ்சில் ஊறும். என் மேலாளர் அடிக்கடி என் கனவில் வருவார். அந்த அளவிற்கு நான் அவருக்கு பயந்தேன். அந்த பயத்தை நான் முழுமையாக நம்ப வேண்டியிருந்தது. ஏனெனில் அந்த பயத்தை எங்காவது என் ஆணவம் சீண்டும் போது மேலாளர் மீதான என் பக்தி குறைந்துவிட்டதாக எண்ணம் ஏற்படும். பக்தி குறைந்தால் இறைவன் தண்டித்துவிடுவார் அல்லவா? அதனால் என் கனவில் காட்சியளிக்கும் இறைவன் இளகிக் குளிர்ந்த கூர்மையான கண்ணாடியாக இருந்தார். மேல் தோலினை மட்டும் மென்மையாக சுரண்டி எடுக்கும் கூர்மையுடன் எந்த சலனமும் அற்றவராக என் முன்னே தோன்றினார். வென்றவர்கள் அனைவருமே அப்படிப்பட்டவர்கள் தான். எப்பக்கமும் வழிந்துவிடாத கூர்மையுடைவர்கள். அவர்களைப் போன்றவர்களையே நான் அதிகம் சந்திக்க நேர்ந்தது. அவர்களின் தன்னம்பிக்கையும் கருணையும் என்னை கீழானவனாக உணரச் செய்தது. ஆனால் பின்னிரவின் ஆழங்களில் அந்த முகங்கள் நினைவில் எழுகையில் நான் சிரித்துக் கொண்டிருப்பேன். பிறகு நேரிலும் அத்தகைய முகங்களை காணும் போது முகத்தில் ஒரு ஏளனத்தை ஏற்றிக் கொண்டேன். இது என்னுடைய சுயமான கண்டுபிடிப்பு. ஒரு மெல்லிய ஏளனத்தை அத்தகையவர்களுக்கு அளித்தால் போதும். அந்த நொடி தளர்ந்து போய் அழிவார்கள். அந்த நொடியை பலருக்கு என்னால் கொடுக்க முடிந்தது. அழகான மனைவி அன்பான குழந்தைகள் என உயர்ந்த லட்சியத்துடன் வாழும் கீழ்த்தரமான ஆண்களை வதைப்பது இன்னும் எளிது. கண் நிரம்பிய காமத்துடன் அவன் மனைவியைப் பார்த்தால் போதும். அவன் சீண்டப்பட்டிருப்பான். என் விழிகளின் தாபத்தை அவன் விழிகளில் ஒரு போதும் அடைந்திருக்காது. அப்போதுணர்வான் பெண் எவ்வளவு தனித்தவள் என. அப்பார்வையின் வழியாக அவன் மனதின் ஆழத்தில் நான் விதைப்பது ஒரு முள் விதையை. தன் பெருந்தன்மையால் முட்டாள்தனமான அறிவினால் குழந்தைகளைக் கொண்டு வாழ்வில் அமரத்துவம் பெற நினைக்கும் அசிங்கமான பேராசையால் என அவன் என்னை எப்படி வேண்டுமானாலும் கடந்து செல்ல நினைக்கலாம். ஆனால் அதன் பிறகான அத்தனை கூடல்களிலும் அவளுடன் அவன் வழியாக இயங்கப் போவது நானே. அதை அவன் அறிவான். அறிந்தே ஆக வேண்டும். இல்லையெனில் மனித இனம் நீடிக்க முடியாது. அந்த ஆதி பொறாமை இல்லாத ஒரு மிருகமாக அவன் நடிக்க விரும்பலாம். ஆனால் அது அவனால் முடியாது.

ஒரு வழியாக என் முகம் நோக்கி கேள்வி கேட்க ஆட்கள் யாரும் இல்லையென்றானது. அது நானே விரும்பி உருவாக்கிக் கொண்டதா இல்லை என்னுடன் யாரும் இருக்கமாட்டார்கள் என்ற நடைமுறை உண்மையை உணர்ந்த என் ஆழ் மனம் அனைவரையும் விட்டு நான் விலகியதாக பாவனை செய்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. இரண்டாவதே உண்மையாக இருக்க வேண்டும். பொருட்படுத்த வேண்டிய எந்த அவசியமும் இல்லாதவனானேன். என்னிடம் இருந்த மிச்ச சொச்சங்களையும் நக்குவதற்கு அப்போதும் சிலர் இருந்தனர். சில நாட்கள் என்னை அவர்கள் அறிவாளி என்றனர் சாதிக்கப் பிறந்தவன் என்றனர் அனைத்தும் அறிந்தவன் என்றனர். அவை அனைத்தும் பச்சை பொய்கள் என்று அறிந்தும் ஒரு கேவலமான சந்தோஷத்திற்காக அவற்றை நம்பினேன். பின்னர் அவர்களுக்கும் என்னுடைய இயலாமைகள் தெரியத் தொடங்கின. இயலாமை உடைய ஒருவனை எவ்வளவு நுண்மையாக நம் மனம் அடையாளம் காண்கிறது என்று வியந்தேன். என்னிலிருந்து நக்கிய எதற்காகவும் என்னை அவர்கள் துறக்காமல் இல்லை. துறந்தனர். என் பேச்சும் செயலும் ஏளனமுடையதாகியது. அவர்களில் ஒருவர் கூட நான் அவர்கள் யாரையும் ஏளனம் செய்வதில்லை என்பதை உணர்ந்திருக்கவில்லை. ஆபத்தற்றவனாக நம் முன்னே ஒருவன் தெரிந்தால் அவனை வதைப்பதற்கு நாம் உள்ளம் எவ்வளவு விரும்புகிறது என என்னைக் கொண்டே நான் உணர்ந்தேன்.

என்னுடைய அழுக்கான சிறிய அறையில் இரண்டு மூலைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். ஒரு மூலையில் ஒரு உடைந்த நாற்காலியைப் போட்டுக் கொள்வேன். நாற்காலியில் அமர்ந்து என்னை நான் கேலி செய்வேன். அவமானப்படுத்துவேன். என் மீது அதிகாரம் செலுத்துவேன். கேலியை உடற்குழைவுடனும் அவமானத்தை கண்ணீருடனும் அதிகாரத்தை பயத்துடனும் நானே எதிரே குறுகி அமர்ந்து எதிர்கொள்வேன். ஒரு கட்டத்தில் வெறி தலைக்கேற என்னை நானே அடித்துக் கொள்ளத் தொடங்கினேன். வெறியுடன் என்னைக் காயப்படுத்திக் கொண்டு அக்காயங்களைக் கண்டு நடுங்கிப் போய் யாருமற்றவனாக அழுவேன். இன்று ஒரு நொடி இருவரையும் இன்னொரு ஆளாக தனித்து நின்று பார்த்தேன். அரசலாற்றில் அம்மணமாக நீச்சல் அடித்த சிறுவனாக டி.வி வாங்கி வந்த அன்று ஓடாத டி.வியை இரவு முழுவதும் கண் விழித்தமர்ந்து தொட்டுத் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தவனாக தீபாவளிகளில் காரணமே இன்றி மகிழ்ந்து எல்லோர் கையையும் பற்றிக் கொள்பவனாக இன்னொருவன் நின்று என்னை பார்த்துக் கொண்டிருந்தான். சிறு வயதில் செய்தது போலவே உதட்டைக் குவித்து நாக்கை வெளியே நீட்டி பழிப்பு காட்டிவிட்டு ஓடினான். அப்படியே மல்லாந்து தரையில் விழுந்தேன். தலையிலும் மார்பிலும் ஓங்கி ஓங்கி அறைந்து கொண்டேன். நெஞ்சு அறுபடுவது போன்ற வலி எழும் வரை அழுதேன். அவன் இன்னும் வாசலில் நிற்பதாகவும் ஓடிச் சென்றால் பிடித்துவிடலாம் என்றும் தோன்றியது. அவன் வாசலில் தான் நிற்கிறான். அவனை நெருங்கி அவனைத் தொட முடியாது. காலம் இரக்கமற்ற திரைச்சீலையாய் எங்களிடையே விழுந்து கிடக்கிறது. விலகி ஓடி அவனை முழுக்கப் புறக்கணித்து என்னை மீண்டும் மீண்டும் மன்னித்துக் கொண்டு தண்டித்துக் கொண்டு நான் செல்வதெல்லாம் நான் செல்லும் பாதை வட்டம் எனும் நம்பிக்கையில் தான். நான் சென்றடையப் போவது என்னைத்தான். எதுவாகவோ இருக்கப் போகும் என்னையல்ல. எதுவாக இருந்தேனோ அந்த என்னை.

No comments:

Post a Comment