Sunday, 8 October 2017

புனைவுகளிலிருந்து வெளியேறுதல் - தி.ஜானகிராமனின் மோக முள்

தத்துவம் என்பதை வாழ்வைப் பற்றிய அல்லது நம்மைச்சூழ்ந்து நடக்கும் புற நிகழ்வுகள் குறித்த ஒரு முழுமை நோக்கை அளிக்கும் கோட்பாடு என வரையறுத்துக் கொள்ளலாம் அல்லவா.

கலியுக முடிவில் பகவான் கல்கி அவதாரம் எடுப்பார் என்பதையோ பிரபஞ்சமே அவனின் பெருநடனம் என்பதையோ இறுதித் தீர்ப்பு நாளில் நீரும் நெருப்பும் நிலமும் தம்மிடமுள்ள உயிர்களை தீர்ப்புக்கு ஒப்படைக்கும் என்பதையோ பொதுவுடமைச் சமூகம் அமைந்துவிட்டால் மானுட இனம் இன்றைய துன்பங்களில் இருந்து விடுபட்டு விடும் என்பதையோ வசதிக்கு ஏற்றார்போல் ஒவ்வொருவரும் தங்களுக்கான முழுமை நோக்காக எடுத்துக் கொள்கின்றனர். மேலும் பல நுண்மையான நோக்குகள் கடந்த இருநூறு ஆண்டுகளில் திரண்டு வந்திருக்கின்றன.

அப்படியெனில் இலக்கியம்? குறிப்பாக தத்துவத்தின் கலை வடிவம் என்றே வர்ணிக்கப்படும் நாவல் தனக்கென உருவாக்கிக் கொண்ட நோக்கு என்ன? யோசித்துப் பார்க்கையில் தத்துவத்தை மையமாகக் கொண்டு இலக்கியமும் அறிவியலும் இருவேறு திசைகளிலாக பிரிந்து பயணிப்பதைக் காண முடிகிறது. தத்துவத்தை ஏற்றுக் கொண்டு அதன் புறவய விதிகளை பயன்படுத்தி மேலும் மேலும் புதிய உச்சங்களை அறிவியல் தொடுகிறது. பயன்பாட்டுத் தளம் நோக்கி நகருந்தோறும் அறிவியல் விதிகள் மேலும் இறுக்கம் கொள்கின்றன. சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவையாக நிறுவப்படுகின்றன. நிறுவப்பட்டாக வேண்டும் என்பதே எதார்த்தம். ஆனால் நாவல் தத்துவத்தை எதிர்திசையில் மோதுகிறது. தத்துவத்திடம் மேலும் மனிதத் தன்மையைக் கோருகிறது. ஏனெனில் தத்துவத்தினால் கட்டப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட மரபையோ பண்பாட்டையோ நடைமுறைகளையோ நாவல் ஒரு விரிவான விவாதத்திற்குள் தன்னுடைய நீண்ட விவாதத்தன்மையால் உள்ளிழுத்து விடுகிறது. ஏன் அது அப்படி உள்ளிழுக்கும் தன்மை கொண்டிருக்கிறது எனில் அதை எழுதுபவன் தர்க்கத்தை விட உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறான் என்பதே பதில். தர்க்கம் மேலும் மேலும் தெளிவினை திட்டவட்டத் தன்மையைக் கோருகிறது அடையவும் செய்கிறது. ஆனால் ஒரு நாவலாசிரியன் வரலாறோ மனித உறவுகளோ பண்பாடோ சமூக நடைமுறைகளோ எதை ஆராயப் புகுந்தாலும் திட்டமிட்டு வகுத்துவிட முடியாத "மனித உணர்வுகள்" எனும் பொதியை விரிக்கிறான். அதன் வழியாகவே அவன் அனைத்தையும் புரிந்து கொள்ள முயல்கிறான். ஒரு நாவலாசிரியன் மார்க்ஸிய வரலாற்றுப் பொருள்முதல் வாதத்தையோ பிராய்டிய உளப்பகுப்பாவையோ தன்னுடைய ஆய்வுமுறையாகக் கொண்டால் கூட அவற்றின் முரண்களை இவனுடைய கற்பனை மோதும் போதுதான் ஒரு நவீன நாவல் பிறக்கிறது. இலக்கியத்தின் பணி அது மனித மனதுள் பயணிக்குந்தோறும் சமூகத்தில் ஏற்கனவே நிலவி வருகிறவற்றை மேலும் வலுப்படுத்துவது  அதன் நோக்கம் அல்லாமல் ஆகிறது. கால மாற்றத்திற்கு ஏற்றார்போல புதிய வரையறைகளை உருவாக்கிக் கொள்கிறது.

மகாபாரதமோ பைபிளோ பழங்குடிச் சமூகங்களை வெற்றிகரமாக நிலப்பிரபுத்துவத்துக்குள்ளும் மன்னராட்சிக்குள்ளும் செலுத்தின என்பதை மறுத்துவிட முடியாது. அவ்வகையில் நவீன இலக்கியம் நிலப்பிரபுத்துவம் உருவாக்கிய மனநிலைகளில் இருந்து விலகி ஒரு முதலாளித்துவ அல்லது ஜனநாயக சமூகத்திற்குள் ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய பிரக்ஞைகளை கட்டமைக்கும் பணியையே செய்கிறது. ஆகவே முன்பே சொன்னது போல வாழ்வு குறித்து பண்பாடு அல்லது பண்பாட்டுக்கு அடித்தளமான தத்துவங்கள் உருவாக்கி வைத்த பிரக்ஞையை அது தன் முழு விசையுடன் தாக்குகிறது. நவீன இலக்கியப் படைப்புகள் வாசிக்கப்படும் போது ஏற்படும் நிலைகுலைவு நம் பிரக்ஞையை அல்லது நனவிலியை அது கலைக்க முயல்வதால் நிகழ்வதே. ஒரு வகையில் அறத்தை வலியுறுத்தும் பழைய பாணி படைப்புகள் கூட அத்தகைய "கலைத்தலை" நிகழ்த்தவே முயல்கின்றன. ஆனால் அவற்றை மிகுந்த பாதுகாப்பான ஒரு வட்டத்துக்குள் நின்றபடிதான் அவை செய்கின்றன. அதேநேரம் நவீனத் தன்மை கொண்ட ஒரு படைப்புகள் நம்பத் தகுந்த களத்தை அமைப்பதன் வாயிலாக அரண்கள் இன்றி தங்களைத் திறந்து முன்வைக்கின்றன. மிகப்பெரும் படைப்புகள் சமகாலப் பிரக்ஞை மட்டுமே கொண்டவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் போவதற்கு காரணம் அவற்றின் "உடனடித் தீர்வுகளை" முன்வைக்கும் தன்மை இல்லாமைதானோ என்று தோன்றுகிறது. சமகாலப் பிரக்ஞை என்பது ஒரு வகையில் தத்துவத்தில் இருந்து வெகுதூரம் தள்ளி எளிமையான தர்க்கங்களை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் பொதுவான ஒரு மனப்பாங்கு. அதேநேரம் ஒரு படைப்பு சொல்ல உத்தேசிக்கும் ஒன்று தத்துவத்துடன் மிக நெருக்கமாக நின்று சமர் புரிந்து கொண்டிருக்கிறது. அதை உள்வாங்க அப்படைப்பு உத்தேசிக்கும் மனநிலை நோக்கி வாசகன் செல்ல வேண்டியிருக்கிறது. மிக நெருக்கமாக ஒரு படைப்பினை வாசித்து உள்வாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவ்வகைப் புரிதல்களே பின்னாட்களில் எழும் சமூக விவாதங்களை இலக்கியத்தை முக்கியமானத் தரப்பாக மாற்றி அமைக்கிறன்றன. மனநிலைகளைக் கட்டமைக்கின்றன.

இந்தப் பின்புலத்தில் வைத்தே தி.ஜானகிராமனின் மோகமுள் நாவலை நான் புரிந்து கொள்கிறேன். தமிழில் நாவலின் வடிவம் குறித்த பிரக்ஞையை முழுமையாக்கியதில் க.நா.சுவுக்கும் சுந்தர ராமசாமிக்கும் அசோகமித்திரனுக்கும் ஜெயமோகனுக்கும் முக்கியமான பங்கு உண்டு. க.நா.சு விமர்சனங்கள் வழியே நாவலுக்கான வடிவம் எப்படி இருக்க வேண்டும் என்ற விவாதத்தை உருவாக்கினார். சுராவும் அமியும் தங்கள் படைப்புகள் வழியே வடிவப் பிரக்ஞையை கூர்மைப்படுத்தினர். ஜெ அதை மேலும் செம்மையாக்கினார். நாவல் வடிவம் குறித்த விவாதத்தின் நீட்சியாக ஜெயமோகன் எழுதிய "நாவல் கோட்பாடு" என்ற நூல் நாவலின் வடிவம் குறித்த வரையறையை முன்வைக்கிறது. தி.ஜானகிராமன் இவர்களுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த படைப்பாளிகளில் முதன்மையானவர். மேலும் மோகமுள் தொடர்கதை வடிவத்திலேயே எழுதப்பட்டது. புதுமைப்பித்தனால் தமிழ்ச் சிறுகதை மரபு உச்சம் தொட்டிருந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட படைப்பு மோகமுள். இத்தகைய தடைகளைக் கடந்தும் தமிழில் கொண்டாடப்பட வேண்டிய படைப்பாக மோகமுள்ளை நிறுத்துவது அதன் வாழ்க்கை நோக்கும் கலையும் மனித மனமும் பின்னி முயங்கும் புள்ளிகளை தொட்டெடுப்பதுதான்.

கும்பகோணத்தின் தெருப்புழுதியில் பாபு ஒதுங்கி நிற்பதுடன் நாவல் தொடங்குகிறது. இயல்பிலேயே மென்மையான மனம் படைத்தவனாக இருக்கிறான் பாபு. சங்கீதத்தின் மீது ஈடுபாடு உள்ளவனாக பெண்ணை வழிபடும் ஒருவனின் நண்பனாக அப்பாவையும் குடும்பத்தையும் விரும்புகிறவனாக இருக்கிறான். ஒரு பிராமணப் பண்ணையாரின் நிலபுலன்களை கவனித்துக் கொள்ளும்  வேலை பார்க்கிறார் அவன் அப்பா. அந்தப் பண்ணையாரின் இரண்டாவது மனைவி பார்வதி ஒரு மராத்திக் குடும்பத்தைச் சேர்ந்த பெண். நந்தமங்கலம் எனும் கிராமத்தில் முதல் குடும்பமும் கும்பகோணத்தில் இரண்டாவது குடும்பமும் இருக்கிறது. பார்வதியின் மகள் யமுனா. பாபு அப்பா வழியாக இந்தக் குடும்பத்துடன் நட்புடன் இருக்கிறான். சக்தி உபாசகரான அவன் அப்பா பாபுவுக்கும் அந்த வழியையே காட்டுகிறார். அழகும் நிமிர்வும் வாய்ந்தவளான யமுனாவே பாபுவின் மனதில் தேவியாக விளங்குகிறாள். கலப்பு மணம் காரணமாகவும் இரண்டாவது மனைவியின் மகள் என்பதாலும் யமுனாவின் சுய விருப்பத்தினாலும் அவளுக்கு மணமாவது தட்டிக் கொண்டே செல்கிறது. பாபு யமுனாவை விட பத்து வயது இளையவன். யமுனா மீதான அவனது ஈர்ப்பு பெரும் மோகமாக மலர்கிறது. சங்கீதத்திலும் அவனது நாட்டம் பெருகுகிறது. இளமைக்கே உரிய கொந்தளிப்பான பல தருணங்களை பாபு கடக்கிறான். யமுனாவின் அப்பா இறந்துவிடவே அவளது குடும்பம் நொடிக்கிறது. இளமையைக் கடந்தும் மணமாகாமல்  நிர்கதியாய் யமுனா சென்னையில் வேலைபார்க்கும் பாபுவிடம் வந்து நிற்கிறாள். அதன்பிறகான உணர்வுப் போராட்டங்களையும் அதற்கான தீர்வினை ஒரு நடைமுறைத் தளத்திலும் சொல்லி நிறைவுபெறுகிறது இந்த நாவல்.

கரவுகளும் சிடுக்குகளும் இல்லாமல் மிக இயல்பாக ஒழுகிச் செல்கிறது நாவல். ஆனால் சிடுக்காவது நாவலின் பிரதான அம்சம். மிக சிக்கலான தருணங்களைக்கூட எளிமையான வார்த்தைகளில் தருணத்தின் தீவிரம் குன்றாமல் சொல்லி விடுகிறார் தி.ஜா. நாவல் முழுக்கவே ஒவ்வொரு பக்கத்திலும் தி.ஜாவின் இந்த ஆகிருதி பிரம்மிக்க வைக்கிறது. பாபு குடியிருக்கும் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு வயோதிகக் கணவனும் அவருடைய இளமையான மனைவியும் குடியேறுகின்றனர். பகலில் அவளைப் பூட்டி வைத்துவிட்டு வேலைக்குச் செல்லும் கணவனை நினைத்து பாபு பொறுமும் இடம் ஒரு "லட்சியவாதியின்" அறச்சீற்றமாக அல்லாமல் அவள் அழகிற்காகவும் துக்கப்படுகிறவனாகவே சித்தரிக்கப்படுகிறது. சமூக மதிப்பீடுகளுக்கும் அழகு நோக்கிய ஈர்ப்புக்கும் இடையே தத்தளிக்கும் இளம் மனதின் சிக்கலை தேர்ந்த வார்த்தைகளில் சித்தரித்துச் செல்கிறார். அதேபோல் அவள் பாபுவை ஈர்க்க நினைப்பதும் அதனால் அவன் அடையும் ஆழமான குற்றவுணர்ச்சி அதிலிருந்து மீண்டு வருதல் பின் அவனையே நினைத்து அவள் தற்கொலை செய்து கொள்ளுதல் என ஆழமான பாதிப்பினை உருவாக்கும் அத்தியாங்களை எளிமையான வார்த்தைகளைக் கொண்டே தீவிரமாக கட்டமைத்து விடுகிறார் தி.ஜா.

"உங்களை ஒரு தடவை பாக்கணும் போலிருக்கு. என்ன செய்வேன்?" என்பது தங்கம்மாள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் பாபுவுக்கு விட்டுச் சென்ற கடிதத்தின் இறுதிவரி. ஆனால் தங்கம்மாள் தன்னை நெருங்கும் போதுதான் பாபுவுக்கு யமுனாவின் மீதான பற்றின் ஆழம் கொள்கிறது. என்ன செய்வதென்று புரியமால் அவளை நோக்கி ஓடி அழுகிறான். அதேநேரம் தான் இசையிலும் அவன் ஆர்வம் தீவிரமடைகிறது. ரங்கண்ணா எதிர்பார்க்கும் "தூய" கலைஞனாக தன்னை மாற்றிக் கொள்வதற்காக பாபு தன் அழகுணர்வுக்கு எதிராக போராடிக் கொண்டே இருக்கிறான். நாவல் முழுக்கவே அழகுணர்வுக்கும் (aesthetic sense) இச்சைக்குமான போர் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. நம்முடைய மரபுக் கதைகளின் மறு ஆக்கமாக கூட இதை எடுத்துக் கொள்ள முடியும். தியான நிலை கைகூடி வரும்போது மோகத்தால் அலைகழிக்கப்படும் யோகி போல இசையை நோக்கி பாபு நகருந்தோறும் அவனுடைய உணர்வுகளால் மேலும் தீவிரமாக பாதிக்கப்படுகிறான்.

மோகமுள் நாவலை வாசிப்பதற்கு என்னையறியாமலேயே எனக்குள் இருந்த தடை அதுவொரு இசைக்கலைஞனை கொண்டிருக்கும் நாவல் என்பதுதான். ஆனால் இப்போது யோசிக்கையில் அவ்வெண்ணம் புன்னகையைத்தான் வரவழைக்கிறது.இசை பற்றிய ரங்கண்ணாவின் அதன் பின் பாபுவின் உரையாடல்களைத் தவிர பெரும்பாலும் ஒற்றைவரி கேள்வி பதில்களைப் போலவே நாவல் பாத்திரங்கள் பேசிக் கொள்கின்றனர். ஆனால் நோக்கம் சரியாக நிறைவேறிவிடுகிறது. இசை பற்றி இந்த நாவலில் இடம் பெற்றிருக்கும் விவாதங்கள் அனைத்தையும் (பாபுவிடம் அவன் குருவான ரங்கண்ணா சொல்கிறவை பாபுவுக்கும் பாலூர் ராமுவுக்கும் நடைபெறும் விவாதங்கள் மராத்திய இசைக்கலைஞர்கள் சொல்கிறவை) கலையில் ஈடுபாடு கொண்டவர்கள் தங்களது துறைக்கும் பொருத்திக் கொள்ளக்கூடிய பொதுவான கூற்றுகள் என்றே தோன்றுகிறது.

மனதின் மெல்லிய பகுதிகளைத் தீண்டும் வகையில் எழுதப்பட்டிருப்பதால் வாசிக்கும் எல்லோருமே தங்களது "ரகசிய" நினைவுகளை மீட்டி பரவசப்பட்டுக் கொள்ளும் வாய்ப்பை இந்த நாவல் அளிக்கவே செய்கிறது. உதாரணமாக யமுனாவின் பாத்திர வார்ப்பு. நிமிர்வும் அழகும் தைரியமும் கம்பீரமும் கொண்ட பெண்ணாகவும் அவள் இருந்தாலும் எதிர்காலம் குறித்த பிரக்ஞையே இல்லாதவளாக அவள் சித்தரிக்கப்படுவது கொஞ்சம் "பழைய" அம்சமே. அது யமுனாவின் "தேவி" தன்மைக்கு வலுவூட்டினாலும் கூட பின்னாட்களில் அவள் எடுக்கும் முற்போக்கானா முடிவுகளுடன் பொறுந்துவதில்லை. செவ்வியல் தன்மை கொண்டதாக நிலைநிறுத்தப்பட்டிருக்கும் ஒரு படைப்பு தன்னுடைய மென்மையால் நீடித்தாக வேண்டிய அவசியமில்லை என்பதையே சொல்ல வருகிறேன். அத்தகைய வாசிப்பு அப்படைப்பை பின்னிக்கு இழுப்பதே. இளமையின் காமத்தின் வேறுபட்ட வண்ணங்கள் வழியே பயணித்தாலும் நாவல் செல்லும் இடம் மேன்மை நோக்கியதாக உள்ளது. போலியான கனவுகள் அல்லது லட்சியத்தின் வழியில் இல்லாமல் நடைமுறை தளத்தில் தன்னை நிறுவிக் கொள்வதே இன்றைய நாளில் மோகமுள்ளை முன்னோடிப் படைப்பாக நிறுத்துகிறது.

அதன் இடைவெளிகள் வழியாக நுட்பமான வாசிப்பினைக் கோரும் திகைத்து நிற்கச் செய்யும் பல பகுதிகள் நாவலில் உள்ளன. யமுனா பாபுவுடனான உறவிற்கு மறுநாள் "இதற்குத்தானா" என்று கேட்பதை மிகப்பெரிய திகைப்பின் பொருளின்மையின் கணமாக இப்போது வாசிக்க முடியவில்லை. ஏனெனில் நாவல் அந்த இடம் நோக்கிச் செல்வதை எந்த வாசகனும் ஊகித்திருப்பான். அந்த உச்சம் கூட ஒரு தேர்ந்த வாசகனை அதிரச் செய்யுமே தவிர கடக்க முடியாததாக இருக்காது. மாறாக பாபுவின் மனம் இசை நாட்டத்தாலும் தங்கம்மாள் தன்னால் இறந்தாள் என்ற குற்றவுணர்வாலும் யமுனாவின் மீதான தவிர்க்க முடியாத மோகத்தாலும் ஒரே நேரம் தவிப்பதை முறையே ஞானத்தேடல் சமூகப் பிரக்ஞை அழகுணர்வு என்று தத்தளிக்கும் மனதின் உச்சமாக வாசிக்கலாம். தி.ஜாவும் கு.ப.ரா அளவிற்கு இல்லாவிட்டாலும் கொஞ்சமாக "லட்சிய" பெண்மணி தாகம் கொண்டிருப்பது யமுனாவின் சித்தரிப்பில் காண முடிகிறது. ஆனால் யமுனாவின் பாத்திர வார்ப்பும் அவளது ஆளுமையும் அக்குறையை ஈடுகட்டிவிடுகின்றன.

பாபுவுடனான உறவுக்குப் பிறகு யமுனா அவனுக்கு எழுதும் கடிதமும் அதற்கு பிறகு அவன் தன் லட்சியத்தை நோக்கி மேலும் உந்தப்படுவதும் யமுனாவின் அதன்பிறகான நடவடிக்கைகளும் நம்பிக்கை தருவதாகவே உள்ளன. ரங்கண்ணா இறக்கும் தருவாயில் அவனைப் பாடச் சொல்வது ராஜத்தின் பிரிவு சென்னையில் என எத்தனையோ தருணங்களை இணைத்து வாசிக்கும்படியான நெகிழ்வினை கொண்டிருப்பது மோகமுள்ளை நாவல் தரத்திற்கு உயர்த்துகிறது. ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் கைவிடப்பட்டவளை உரிமை கொள்ளத் துடிக்கும் உந்துதல் என எளிய கோட்பாடுகளை போட்டுப்பார்க்க இந்த நாவல் அனுமதிப்பதில்லை. அதையும் தாண்டி ஆழமான தளங்களுக்குச் செல்லும் போது மட்டுமே அர்த்தம் தருவதாக அமைந்துள்ளது இப்படைப்பு.

தொடக்க அத்தியாயங்களில் ராஜமும் பாபுவும் பேசிக் கொண்டே இருக்கின்றனர். வாழ்வு குறித்து நமக்கு அளிக்கப்பட்டுள்ள புனைவுகளை ஒரு எல்லைக்கு மேல் அப்படி பேசித்தான் நிறுவிக் கொள்ள வேண்டியிருக்கிறது. புனைவில் இருந்து பாபு வெளியேறியாக வேண்டிய காலத்தில் தான் நாவல் தொடங்குகிறது. குடும்பம் காதல் நட்பு என ஏதோவொரு அழகான புனைவிலிருந்து வெளியேறிய அனுபவம் நம் அனைவருக்கும் இருக்கவே செய்யும். பாபுவும் அப்படித்தான் வெளியேறுகிறான். அவனது வெளியேற்றத்தை கொந்தளிப்பு நிறைந்ததாக மேன்மைக்கான தேடல் நிறைந்ததாக அன்பால் ஈடுசெய்யப்பட்டதாக காட்டியிருப்பதே மோகமுள்ளை தூக்கி நிறுத்தும் அம்சம் எனத் தோன்றுகிறது. யமுனாவின் வழியாக அவன் இன்னொரு புனைவு நோக்கிச் செலுத்தப்படுகிறான். ஆனால் அப்புனைவு மேலும் உறுதிமிக்கதாக இருக்கிறது. சவால் நிறைந்ததாக ஞானத்திற்கான உத்திரவாதம் தரக்கூடியதாக இருக்கிறது. ஆனால் அதுவும் புனைவுதான். அதிலிருந்து வெளியேறுவதற்கு அவனுக்கு மேலும் இரக்கமின்மையும் தைரியமும் தேவைப்பட்டிருக்கும்.

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் விலை: ₹.600

Friday, 29 September 2017

மனவடுக்குகளின் முடிவற்ற வண்ணங்கள் - பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலை முன்வைத்து

பெருநாவல்களுக்கான நோக்கம் என்னவாக இருக்கும் என்ற கேள்வியை கேட்டுப்பார்க்கலாம்.

கலை என்று நாம் வரையறுக்கும் ஒன்றின் நோக்கம்தான் என்னவாக இருக்கும் என்று நம்முடைய முதல் கேள்வியை சற்று பொதுமைப்படுத்திக் கொள்ளலாம். வாழ்வு என்ற சொல்லின் வழியாக நாம் வகுத்து வைத்திருக்கும் மாற்றங்களை புகுத்திவிட முடியாத சலிப்பூட்டும் எதார்த்தத்தில் இருந்து சற்றே நம் மனம் எம்பிக் குதிக்கையில் அது கலாப்பூர்வமான ஒரு பிரக்ஞையை அடைகிறது. தன் வாழ்வு எவ்வளவு பாதுகாப்பாக அல்லது அபத்தமாக இருக்கிறது என்பதை இந்த "எம்பல்" நடைபெறும் மனம் ஏதோவொரு விதத்தில் உணர்ந்து கொள்கிறது. தனக்கேற்பட்ட பாதிப்பின் அடிப்படையில் மேலும் சமரசம் நோக்கியோ அல்லது மேலும் சமரசமின்மை நோக்கியோ மனம் நகர்கிறது. எப்படியாயினும் ஒரு கலையனுபவத்துக்கு தன்னை ஒப்புக்கொடுக்கும் மனிதனுள் நிச்சயம் ஒன்று எக்காலத்துக்குமாக மாறிவிடுகிறது. எல்லா அனுபவங்களும் நம்மை மோதி நம்முள் மாற்றத்தை விளைவிக்கவே செய்கின்றன. திடீரென அடைந்த சிநேகமாக துரோகமாக அது இருக்கலாம். திட்டமிட்டடைந்த வெற்றியாக கை பிசைந்து நிற்க வைக்கும் இழப்பாக ஆச்சரியத்தில் திகைத்து நிற்க வைக்கும் தடாலடியான மாற்றமாக எப்படி வேண்டுமானாலும் ஒரு "அனுபவம்" "நமக்கே நமக்கென" நேரிடலாம். ஆனால் அது எவ்வளவு "செறிவுடைய" அனுபவம் எனினும் அது முழுமையானதாக பெரும்பாலும் அமைந்து விடுவதில்லை. ஒரு சுய அனுபவத்தை ஒருமுறை விவரிக்கிறோம் எனக் கொள்ளலாம். அதே அனுபவத்தை ஓராண்டு கழித்து மீண்டும் சொல்லும் போது நம்முடைய விவரணையும் அந்த அனுபவம் குறித்த நம்முடைய பார்வையும் நிச்சயம் மாறியிருக்கும். யார் கண்டது பத்தாண்டுகளில் அந்த அனுபவம் நிகழ்ந்த போதிருந்த மனநிலைக்கு எதிர்திசையில் கூட நாம் திரும்பியிருக்கலாம். மகிழ்வான "பழைய" நிகழ்வுகள் கண்ணீரோடும் கொந்தளிப்பான தருணங்கள் சமநிலையோடும் சொல்லப்படுவது ஒருமுறையாவது நம் வாழ்வில் நிகழ்ந்திருக்கும்.

கலையும் இலக்கியமும் அனுபவங்களை சாராம்சப்படுத்துகின்றன(சாரமின்மை கூட ஒருவகை சாராம்சப்படுத்தலே). ஒரு கடத்தியின் (conductor) முனைகளில் மின்னழுத்தம் கொடுக்கப்படும் போது அக்கடத்தியில் உள்ள அணுக்கள் ஒரு திசை நோக்கி பயணிக்கத் தயாராவது போல இலக்கியம் பிரதியின் மாறாத மொழியின் வாயிலாக அனுபவங்களை முனை கொண்டதாக "நோக்கம்" உடையதாக மாற்றிவிடுகிறது. ஆக கலைகளின் நோக்கம் அர்த்தமற்ற பெருந்தொகுப்பான வாழ்வினை தன் அழகியலின் வழியாக சாராம்சப்படுத்துவது என்று வரையறுக்கலாம். அழகியல் என்ற சொல்லை ஆராயப்புகுவது கிட்டத்தட்ட மனிதனுள் உறையும் மேன்மைக்கான முழுமைக்கான ஏக்கத்தையும் தேடலையும் ஆராயச் செல்வதே. ஆகவே ஒவ்வொரு கலையும் தனக்கே உரிய ஒரு "அறிய முடியாமையை" கொண்டுள்ளது என்பதோடு அதனை நிறுத்தி நிறுவிக் கொள்ளலாம்.

மொழியில் நிகழ்த்தப்படும் கலையான இலக்கியத்திற்குள் இப்போது வந்துவிடுவோம். இலக்கியத்தின் இக்காலத்திய வெளிப்பாட்டு வடிவங்களில் ஒன்றான நாவல் குறித்தே இக்கட்டுரையின் முதல் கேள்வி அமைந்திருந்தது. தமிழில் கடந்த இருபதாண்டுகளில் குறிப்பிடத்தக்க பெருநாவல்கள் வந்திருக்கின்றன(நிறைய பக்கங்கள் என்ற அளவுகோலின்படி அல்லாமல் உண்மையில் நாவல் என்ற வடிவத்திற்கு நியாயம் செய்யும் படைப்புகளை மட்டுமே கணக்கில் கொண்டால் இருபதாண்டுகள் என்பதே சரியான காலம்). நாவல் என்ற வடிவம் நீண்ட கதைகளை சொல்வதற்காக அல்லாமல் அறிவுப் பரப்பில் எப்போதும் இறுக்கமாக உரையாடப்படுகிறவற்றை வாழ்வில் நிறுத்தி வாசிப்பவரின் அனுபவமாக மாற்றிக் காட்டி வாசகனே தன்னுடைய அனுபவத்தாலும் நுண்ணுணர்வாலும் முடிவுகளை (சாரங்களை?) நோக்கிச் செல்ல வைப்பதாக உள்ளன. புறவயமான தகவல்களின் வழியாக உணர்வுநிலைகளை கட்டமைத்து வாசகனை தன் கட்டமைப்புக்குள் ஈர்த்து ஒரு நிகர்வாழ்வில் அவனை சில நாட்களோ மாதங்களோ வாழச் செய்வதே வார்த்தைகளால் சொல்லக்கூடிய நாவல் கொடுக்கக்கூடிய கலையனுபவம். இது தொடக்க நிலை மட்டுமே. ஒருவனின் வாசிப்பும் வாழ்வனுபவங்களும் பெருகப்பெருக உடன் பயணிப்பவையாக வாசகனுக்குள் வளர்பவையாக சிறந்த இலக்கியப் படைப்புகள் அமைந்து விடுவதுண்டு.

வாசகனின் மனதில் வளரும் அத்தகையப் படைப்புகளின் தொகையே சிறந்த இலக்கியப் படைப்புகள் எனப்படுகின்றன. தொடர்ச்சியாக வெவ்வேறு வகையில் அவை பயிலப்படுகின்றன. பின்பற்றப்படுகின்றன. பெருநாவல்களின் உடனடி நோக்கம் வாசகனை நாவலாசிரியன் தான் உத்தேசிக்கும் பிரம்மாண்டமான அறிவுப் பரப்புக்குள் ஈர்ப்பதே. அதன் வழியாக தன்  எழுத்தில் பின்னிக்கிடக்கும் சமூகத்தின் மனவெழுச்சிகளை கனவுகளை மேன்மைகளை கீழ்மைகளை நாவலாசிரியன் நுட்பமாக வாசகனுக்குள் செலுத்துகிறான். அவை வளர்த்தெடுக்கப்படக்கூடியவையாக இருந்தால் அது வாசகனின் மனதில் நீட்சி கொள்கிறது. எப்படியாயினும் பெருநாவல்கள் வாசித்து "உணர்ந்து" கடந்து செல்லக்கூடியவை அல்ல. ஏனெனில் வெவ்வேறு மன அமைப்பு கொண்ட மனிதர்களால் ஒரு படைப்பு எதிர்கொள்ளப்படும் போது ஒவ்வொருக்குள்ளும் அது உருவாக்கும் விளைவு தனித்துவமானதாக இருக்கிறது. அந்த "தனித்துவங்களின் தொகை" என ஒன்று உருவாகும் போதுதான் ஒரு நாவல் உத்தேசிக்கும் மதிப்பீடுகளும் லட்சியங்களும் வெளிப்படுகின்றன. அப்படி அந்த மதிப்பீடுகள் வெளிப்படும் போது அவை ஏற்கப்படுவதையும் மறுக்கப்படுவதையும் பொறுத்து ஒரு படைப்பு சமூகத்தின் கூட்டு நனவிலிக்குள் நுழைகிறது. நம்முடைய தமிழ் வாழ்க்கையின் இன்றைய மதிப்பீடுகளை உருவாக்கிய சிலப்பதிகாரமும் குறளும் கம்ப ராமாயணமும் நம்முடைய கூட்டு நனவிலிக்குள் வாழ்வதை நாம் பரிசோதித்து அறியலாம்.

நவீன யுகம் நம்மை வேறொரு வகையான வாழ்க்கைக்குள் நுழைத்திருக்கிறது. குலச் சடங்குகளுக்குள்ளோ மதங்களுக்குள்ளோ பிறந்து விழுந்து இறந்து போகும் "மரபான" வாழ்க்கை நவீன மனிதனுக்கு வாய்க்கவில்லை. ஆகவே மரபான இலக்கியங்களின் மதிப்பீடுகளை அவனால் பின்பற்ற முடியாது. மரபிலக்கியங்களில் இருந்து அவசியமான சில மதிப்பீடுகள் அவனுக்கு கொடுக்கப்பட வேண்டுமானால அவை மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டும். சந்தேகப்படுகிறவனாகவும் நம்பிக்கையற்றவனாகவும் தற்செயல்களின் பெருந்தொகுப்பை "கடவுள்" என ஏற்றுக் கொள்ளாதவனாகவும் ஒரு மனிதன் கடந்த முன்னூறாண்டுகளில் மேற்கில் உருவாகி உலகம் முழுவதுமே பரவிவிட்டான். அறம் என்ற ஒன்று சொல்லப்படுகிறது. ஆனால் அனைத்தையும் தன் தர்க்கத்தால் எள்ளி நகையாடும் ஒரு எல்லையை இவ்விளைஞன் அடைந்துவிட்டான். மொழியைக் கொண்டு தத்துவத்தையும் அறிவியலையும் அவன் கையாளத் தொடங்கிவிட்டான். அப்படி இருக்கும் போது மொழியில் செய்யப்பட்ட ஒரு அழகுப் பொருள் போன்றிருக்கும் மரபான நூல்களால் நீதிகளை போதிக்கும் அவற்றின் உத்தேசத்தால் அவனுடன் உரையாட முடியவில்லை. அவனுடைய தர்க்கமும் அறிவும் ஏற்றுக் கொள்ளாதவற்றுடன் அவன் உரையாட விழையவில்லை. இந்த சிக்கலை இலக்கியம் எதிர்கொண்ட போதுதான் நவீன இலக்கியம் பிறக்கிறது. இந்த சிக்கலை வெற்றிகரமாக எதிர்கொண்ட இன்னும் எதிர்கொள்ள காத்திருக்கும் ஒரு வடிவமே பெருநாவல். நாம் இன்று பேரிலக்கியவாதிகள் என்று கொண்டாடுகிறவர்கள் இந்த காலமாற்றத்தின் அனலை முன் வரிசையில் நின்று எதிர்கொண்டவர்கள்.

பெருநாவல்களின் நோக்கங்களாக இரண்டை வரையறுக்கலாம்.

ஒன்று அவை நவீன மனிதனின் தர்க்கத்துடன் மோதி விவாதித்து தங்களை நிலைநாட்டுகிறவை. மற்றொன்று மதிப்பீடுகள் என்று ஏற்கனவே சமூகம் வரையறுத்து வைத்திருக்கிறவற்றுடன் ஓயாமல் மோதிக் கொண்டிருப்பவை.

பேரிலக்கியத்தின் பாதை

முன்பே சொன்னது போல நவீன யுகத்தை மொழி சந்தித்த போதே நவீன இலக்கியம் பிறக்கிறது. அதுவரை இருந்த மதிப்பீடுகளை உருக்கி மறுவார்ப்பு செய்யும் வேலையை ஏற்றுக் கொண்ட படைப்புகள் மரபான சமூகங்களில் புழங்கிய மனிதனுக்கு அளித்திருக்கக்கூடிய ஒவ்வாமை புரிந்து கொள்ளக்கூடியது. காவியங்கள் உச்ச தருணங்களை மையப்படுத்துகிறவை. ஹெக்டரை போருக்கு அறைகூவும் அக்கிலஸ் எரிகுழியில் இறங்கவிருக்கும் சீதை ஒற்றை சிலம்புடன் நீதி கேட்கும் கண்ணகி என உணர்ச்சிகரமான உச்சத் தருணங்களை காவியங்கள் தங்கள் பண்புகளாக கொண்டிருந்தன. ஆனால் நவீன இலக்கியம் வேறு வகையாக வெளிப்பட்டது. நிச்சயம் செய்யப்பட்ட மணப்பெண் ஒருத்தி மற்றொரு ஆணழகனை நோக்கி காதல் கொள்வதை நுட்பமாக வர்ணிப்பதை "உச்சங்களை" (போரும் வாழ்வும்)விரும்பும் மனம் விரும்பாது என்றே எண்ணுகிறேன்.

பொதுவாக ஒட்டுமொத்தமாக எதிர் திசையில் திரும்ப வேண்டுமெனில் அதற்கான விசையும் அதிகமாக கொடுக்கப்பட்டாக வேண்டும். அதனால் தான் நவீன இலக்கியங்கள் தோன்றிய பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே நவீன இலக்கியத்தின் மிகச் சிறந்த (அல்லது உகந்த)வடிவமான நாவலும் மிகச் சிறந்த நாவல்களும் வெளிப்பட்டுவிட்டன.

அவ்வகை சிறந்த படைப்புகளில் சில படைப்புகள் பேரிலக்கியங்களாக மேலெழுந்திருக்கின்றன. இலக்கியம் ஒரு குறிப்பிட்ட சமூகச் சூழல் சார்ந்தே எழுதப்படுகிறது. ஆனால் அதன் தேடல் எந்தளவிற்கு மானுடப் பொதுமை நோக்கி நகர்கிறதோ அந்த அளவு குறிப்பிட்ட அப்படைப்பு காலம் நிலம் போன்ற அளவுகளில் இருந்து தன்னை துண்டித்துக் கொள்கிறது. ஒரேயொரு குடும்பத்தின் சிக்கலை மட்டும் சொல்லும் படைப்புகள் பேரிலக்கியங்களாக எழ முடியும். அதேநேரம் மிகப் பெரிய நில கால எல்லைகளை உள்ளடக்கும் படைப்புகளும் ஒட்டுமொத்த மானுடத்தையும் தழுவும் எதையும்  சொல்லவில்லையெனில் அவை தேங்கியழியவே செய்யும்.

பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் என்ற பெருநாவல் பேரிலக்கியமாக எழுவது இரண்டு காரணங்களால். அதன் கதை நிகழும் காலம் மூன்று வாரங்களைத் தாண்டாத போதும் கதை நிகழும் இடம் பீட்டர்ஸ்பர்கின் ஒடுங்கிய வீதிகள் மட்டுமே என்ற போதும் கிட்டத்தட்ட முழு நாவலுமே காலாதீதமான ஒன்று மட்டுமே விவாதிக்கப்படுகிறது என்ற தோரணையை ஏற்படுத்துவதால் தான்.

இரண்டு "மனித மனம்" என்ற அருவத்தை இவ்வளவு ஸ்தூலமான ஒன்றாக இன்று வரையிலும் கூட வேறெந்த படைப்பும் காட்ட முடியவில்லை என்பதாலும் தான்.

தனிமனதின் தீர்க்கமான வருகை

குற்றமும் தண்டனையும் நாவலுக்கு வடிவம் சார்ந்த ஒரு புறச் சட்டகத்தை கொடுக்க முனைந்தால் அது சிக்கலற்றதாக மிக மிக எளிமையான ஒன்றாகவே இருக்கும். ரஸ்கோல்னிகோவ் என்ற இளைஞன் சுய உந்துதலால் இரண்டு கொலைகளை செய்து விடுகிறான். அக்கொலைகளால் அவன் வாழ்வு எவ்விதத்தில் பாதிக்கப்படுகிறது என்பதே நாவலின் உடல். நேர்க்கோட்டிலேயே கதையும் நகர்கிறது. ஆனால் கதையாடல் வாசகனுக்கு அளிக்கும் சவாலும் அவன் கண்டடைய வேண்டியவையும் வரிகளுக்கிடையில் ஒவ்வொரு பக்கத்திலும் புதைந்து கிடக்கின்றன.

தொடக்கம் முதலே அடகுக்கடைக்காரியான அல்யோனா இவானோவ்னாவை கொலை செய்யும் உந்துதல் ரஸ்கோல்னிகோவிடம் இருக்கிறது. அந்த உந்துதலை அவன் பெறும் விதம் சற்றே மாறுபட்டதாகத் தோன்றினாலும் மனித வாழ்க்கையை கட்டமைக்கும் மனித மனம் அத்தகைய முன்னறிவிக்க முடியாத முரண்களால் இயங்குகிறது என்பதை இப்படைப்பை வாசிக்கும் யாரும் உடனே கண்டு கொள்ள முடியும். பண நெருக்கடி அதிகரிக்கும் போது பல்கலைகழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் மாணவனான ரஸ்கோல்னிகோவ் தன்னுடைய பொருளொன்றை அடகு வைப்பதற்காக அல்யோனா இவானோவ்னாவிடம் செல்கிறான். திரும்பும் வழியில் அவளைப் பற்றி இரு இளைஞர்கள் பேசிக் கொண்டிருப்பதை அவன் கேட்க நேர்கிறது. தற்செயலான இச்சம்பவம் அவளைக் கொலை செய்வதற்கு அவனைத் தூண்டுகிறது.

முழுக்க முழுக்க மனித மனம் என்ற ஒன்றை மட்டும் பேசுபொருளாக்கி அதனுள் நடக்கும் விசித்திரங்களையே விவரித்துச் செல்கிறது இப்படைப்பு. ரஸ்கோல்னிகோவின் மனம் போலவே புறச்சூழலும் நெரிசல் மிகுந்ததாக குழப்பம் நிறைந்ததாக எரிச்சலூட்டுவதாக சித்தரிக்கப்படுகிறது. அவனுடைய மனநிலையும் உடல்நிலையும் இசைவு கொள்கின்றன. அடகுக்கடைக்காரியை கொலை செய்வதற்கு முன் ஒரு குதிரையை அதன் உரிமையாளன் அடித்துக் கொல்வதைப் போல அவன் காணும் கனவு குடிகார விடுதியில் அவன் சந்திக்கும் மர்மெலாதோவ் அவன் அன்னையிடம் இருந்து அவனுக்கு வரும் கடிதம் என ஒவ்வொன்றும் ஏதோவொரு விதத்தில் அச்செயலுடன் அவனை முடிச்சிட வைக்கிறது.

மிக எளிய விவரணைகளுடன் தொடங்கும் அத்தியாயங்கள் அவ்வெளிமையில் இருந்து விலகாமல் பிரம்மாண்டமாக விரிந்து மனதை ஆக்கிரமிக்கின்றன. அல்யோனாவை கொலை செய்யும் வரை ரஸ்கோல்னிகோவின் மனம் நிகழ்த்தும் நுண்மையான நாடகங்கள் அதிர்ச்சியூட்டும் கவர்ச்சியைக் கொண்டிருக்கின்றன. கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் அவன் அம்மாவிடமிருந்து வரும் நீண்ட கடிதம் அளிக்கும் ஆறுதலும் அதை உடைத்துப் பொருள் கொள்வதில் அவன் காட்டும் தீவிரமும் அவனுடைய கூர்மையை வெளிப்படுத்துவதாக உள்ளன. ரஸ்கோல்னிகோவின் தங்கை துனியாவிற்கு சற்றே வயது முதிர்ந்த ஒரு செல்வந்தனுடன் நிச்சயம் நடைபெறுகிறது. அவன் அம்மா அதை எழுதியிருக்கும் விதத்தில் இருந்தே அவனை ஊகித்து விடுகிறான் ரஸ்கோல்னிகோவ். அவன் மனம் போடும் அத்தனை வேடங்களையும் தாண்டி அல்யோனா இவனோவ்னாவை கொலை செய்யச் செல்கிறான். அந்த பயணத்தை விவரிக்கும் இடத்தில் நாவலின் உச்சங்களில் ஒன்று வெளிப்படுகிறது. செய்ய வேண்டும் என்று தீர்மானித்தப் பிறகு தன்னால் இதை செய்ய முடியுமா என அவன் தயங்கிக் குழம்பும் இடங்களில் உண்மையில் வாசகனை தன் மனதையே தரிசிக்கச் செய்துவிடுகிறது இப்படைப்பு. எதிர்பாராத விதமாக அடகுக்கடைக்காரியின் சகோதரி  லிஸாவெதாவையும் ரஸ்கோல்னிகோவ் கொலை செய்ய நேர்கிறது.

வறுமை சுகாதாரமின்மை நோய் மனக்குழப்பம் என எந்நேரமும் கொந்தளிக்கும் மனநிலையிலேயே ரஸ்கோல்னிகோவ் இருக்கிறான். அந்த நொய்மையான மனநிலையோடு இக்கொலைக் குற்றத்தை ஏற்பதும் மறுப்பதற்குமான அகமும் புறமுமான சதுரங்கமே இந்த நாவல். அறிவுக்கூர்மையும் கருணையும் ஒருங்கே இணைந்த நோயுற்ற இளைஞன் இச்சிக்கலை எதிர்கொள்வதை வைத்து "குற்றம்" என்று சமூகம் வரையறுத்து வைத்திருக்கும் ஒன்றை மோதுகிறார் தஸ்தெய்வ்ஸ்கி. நாவலின் பக்கங்கள் கொந்தளித்துக் கொண்டிருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தந்த வண்ணமே உள்ளன. டால்ஸ்டாயின் படைப்புகள் விரிவான விவரணைகளை அளிப்பதன் வழியாக மனதில் ஒருவித "சோர்வினை" உருவாக்கும். அவர் படைப்புகள் ஒரு கிழட்டு யானையைப் போல காலம் கிடப்பதைக் காட்டுபவை. அதன் வழியே பயணித்து டால்ஸ்டாய் தொடும் இடங்கள் கவித்துவமும் திகைப்பும் ஒருங்கே கொண்டவை. ஒரு சமூக மனம் திகைத்து நிற்கும் பல இடங்களை டால்ஸ்டாயின் படைப்புகளில் காண முடியும். உதாரணத்திற்கு அன்னா விரான்ஸ்கியின் குழந்தையை ஈனும் சமயத்தில் கரீனினுக்கு அக்குழந்தையின் மீது எழும் அன்பை விளக்க முடியாமல் டால்ஸ்டாய் திகைத்து நிற்பார். தஸ்தயெவ்ஸ்கியின் புனைவுலகு தொடங்குவதே அத்திகைப்பில் இருந்து தான். மனித மனதின் ஆழத்தில் புதைந்திருக்கும் இருளையும் மகத்துவத்தையும் (பாற்கடல் கடையும் தொன்மம் நினைவுக்கு வருகிறது) துலாவிச் சென்றபடியே உள்ளது இந்த நாவல். இந்த நாவலின் நாயகன் மனம் தான். தன்னுடைய அப்பட்டமான இச்சைகளை தன்னலமின்மையை நேர்மையை தந்திரத்தை மனிதன் எனும் ஊடகத்தில் ஏற்றி நடித்தபடியே இருக்கின்றன மனங்கள். அதன் மையமென நிற்கிறான் ரஸ்கோல்னிகோவ்.

கொப்பளித்தெழும் புனைவுகள்

முன்பே சொன்னது போல நாவலின் நிகழ்வுகள் அனைத்தையுமே ரஸ்கோல்னிகோவின் மனதுடன் பொருத்திப் பார்க்க முடியும் என்பதால் நாவலில் நடைபெறும் மிக நீண்ட உரையாடல்கள் அனைத்தும் அவனால் நிகழ்த்தப்படுகிறவையாக அவனுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன. உதாரணமாக மது விடுதியில் தற்செயலாக அவன் சந்திக்கும் மர்மெலாதோவ் உணர்ச்சிப் பெருக்கில் அவனிடம் சொல்கிற விஷயங்கள் பின்னாட்களில் மிகுந்த தாக்கத்தை அவனிடம் உருவாக்குகின்றன. உண்மையான அனுதாபம் என்பது பெரும்பாலும் நிதர்சனத்தை எதிர்கொள்ளும் மனதின் ஏதும் செய்ய முடியாத ஆற்றாமையே என்பது என் அனுமானம். சோனியா தன்னை விபச்சாரியாக மாற்றிக் கொண்டதை மர்மெலாதோவ் ரஸ்கோல்னிகோவிடம் விவரிக்கும் இடங்களில் தோன்றுவது அத்தகைய ஆற்றாமையே. அவன் போல ரஸ்கோல்னிகோவிடம் அதன்பின் பல உரையாடல்கள் நிகழ்கின்றன கொலைக்கு முன்னும் பின்னும். அவையனைத்தும் ஒரு பொது வாசகனுக்கு சலிப்பினை ஏற்படுத்திவிடக்கூடும். ஆனால் அவ்வுரையாடல்களின் "அபத்தப் புனைவு"த் தன்மையை கண்டு கொள்ளும் வாசகன் அவற்றுடன் விளையாடத் தொடங்கி விடுவான். தோற்றுப் போனவர்கள் தங்களை நிரூபிக்க காத்திருப்பவர்கள் தான் இப்படித்தான் எனச் சொல்கிறவர்கள் மீண்டும் மீண்டும் ரஸ்கோல்னிகோவிடம் உரையாட வருகிறார்கள்.

எதிர் இருப்பவனின் மனதில் நன்மதிப்பை மட்டுமே பெற விழையும் லூசின் மனதினை ஆழச்சுரண்டி உண்மையை வரவழைக்கும் போர்பிரி தந்திரமாக ரஸ்கோல்னிகோவை அணுகும் ஸ்விட்ரிகைலோவ் என நாவல் முழுக்க நீளும் நீண்ட உரையாடல்கள் உண்மையில் வாசகனை மிகச் சிக்கலான ஒரு விளையாட்டுக்குள் அழைக்கின்றன. சோனியா குற்றம் சாட்டப்படுதல்  காதரீனா இவனோவ்னாவின் பரிதாபமான முடிவு  என மனதில் ஆழமான பரிவைத் தூண்டும் சம்பவங்களை எழுதிச் செல்வதில் தஸ்தயெவ்ஸ்கி இன்னும் கூட விஞ்சப்படவில்லை.

அபத்தத்தின் உச்சங்கள்

விபச்சாரிகள் குறித்து எழுதுவதில் நம்மூரில் எழுத்தாளர்களுக்கு ஒரு தனிப்பட்ட கவர்ச்சி இருந்திருக்க வேண்டும். ஜே.ஜே சில குறிப்புகளில் முல்லைக்கல் மாதவன் நாயரை முன்னிறுத்தி இப்பண்பை ஆழமாக கேலி செய்திருப்பார் சுந்தர ராமசாமி. ஆனால் குற்றமும் தண்டனையும் வழியாக நவீன இலக்கியம் கண்டறிந்த மிகச்சிறந்த பாத்திரமான சோனியா ஒரு விபச்சாரியாக இந்த நாவலில் சித்தரிக்கப்பட்டிருக்கிறாள். ஆனால் அவள் அப்படி மாறும் சூழலை சொல்லும் விதமும் அதன் பிறகான அவளுடைய நடத்தைகளும் உண்மையான பரிவும் அக்கறையும் நிறைந்தவை. சோனியா எங்கும் இழிவான சித்தரிப்புகளுக்குள் செலுத்தப்படவில்லை. அவள் தன் இழிவை உணர்ந்தவளாக பயந்தவளாக விலகியே இருக்கிறாள். தன் செயலை உட்சபட்ச தர்க்கங்கள் வழியாக நியாயம் செய்யும் ரஸ்கோல்னிகோவுக்கு வலுவான மாற்றாக முன்னிற்கிறாள் சோனியா.

அவனைப் பற்றிய உண்மைகள் வெளிப்பட வாய்ப்பிருக்கும் ஒவ்வொரு முறையும் தடுமாறிக் குழம்புகிறான் ரஸ்கோல்னிகோவ். லூசினுடனான அவன் சகோதரி துனியாவின் திருமணம் தடைபடுகிறது. போர்பிரி பெத்ரோவிச் என்ற விசாரணை அதிகாரி அவன் தான் கொலைகாரன் என்று உறுதியாக தெரிந்தபின்னும் ஆதாரங்கள் இல்லாமல் அவனைக் கைது செய்ய முடியாமல் தவிக்கிறார். ஸ்விட்ரிகைலோவால் அவனுக்கு ஏற்படவிருந்த ஆபத்தும் விலகிச் செல்கிறது. இந்த நாவலில் நடைபெறும் சம்பவங்கள் அனைத்துமே ஒரு வகையான "மனத்துருவல்" வழியாகவே கட்டமைக்கப்படுகின்றன. காலம் நீண்டதாகவும் குறுகியதாகவும் சூழல் மகிழ்வானதாகவும் துன்பம் நிறைந்ததாகவும் தோற்றம் கொள்வது மனதை முன்னிறுத்தியே என்பதை இப்படைப்பின் பல பக்கங்கள் நிறுவுகின்றன. சோனியாவின் தந்தை மர்மெலாதோவின் இறுதிச் சடங்கிற்கு அவளின் சிறு தங்கையான போலென்காவிடம் பணத்தை கொடுத்து அச்சிறுமியின் அன்பு நிறைந்த முத்தத்தை ரஸ்கோல்னிகோவ் பெற்றுக் கொள்ளும் தருணம் அவன் சஞ்சலங்கள் நீங்கியவனாக தன்னை உணர்கிறான். கொலை செய்து விட்டு அவன் வீட்டிற்கு திரும்பி இருக்கும் போது காவல் நிலையத்தில் இருந்து அவனுக்கு அழைப்பு வருகிறது. அச்சமயம் கொலை விசாரணைக்காக தான் அழைக்கப்படவில்லை என்பதை அவன் உணரும் தருணம் அச்சூழலை லாவகமாக கையாண்டு விடுகிறான். சமெடோவ் போர்பிரி என ஒவ்வொருவரையும் தன் குழப்பங்களோடும் சஞ்சலங்களோடும் அவன் எதிர்கொண்டாலும் எச்சூழ்நிலையிலும் அவனுடைய புத்திசாலித்தனம் அவனை கைவிடுவதில்லை. ஆனால் சோனியாவின் கள்ளமற்ற நேர்மையின் முன் அவன் மண்டியிடுகிறான். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு நவீன இலக்கியத்தின் இந்த உச்ச தருணத்தை ஒத்துக் கொள்ள முடியாது. ஆனால் அதுதான் உண்மை . கள்ளமற்ற தூய்மையான விபச்சாரியின் பாதங்களை புத்திசாலித்தனம் நிறைந்த கொலைகாரன் முத்தமிடும் தருணம் அளிக்கும் மனவெழுச்சியே நவீன இலக்கியத்தின் தனிமனித கரிசனத்திற்கான சான்று.

வெல்லும் அறம்

ஒரு வகையில் ஆயிரம் பக்கங்கள் விரியும் இந்த மொத்த நாவலுமே குற்றத்தை ஒரு புத்திசாலி இளைஞனின் மனதின் வழியாக விசாரணை செய்வது நிறுவ நினைப்பது பழமையான ஒன்றைத்தான். செய்த குற்றத்திற்கான தண்டனையை தானாக உடன்பட்டு ஏற்றுக் கொண்டு வருந்துதல். ரஸ்கோல்னிகோவிற்கு இறுதிவரை தப்பிச் செல்வதற்கான வாய்ப்பிருக்கிறது. இருந்தும் அவன் சரணடைந்து தண்டனையை ஏற்கிறான். தண்டனையை ஏற்பதோடு நாவல் முடிந்தாலும் அவன் மனம் அக்குற்றத்தை ஒத்துக் கொள்ளும் கணம் சோனியாவின் கால்களில் மீண்டும் விழுகிறான். லாசரஸின் உயிர்த்தெழுதலை வாசிக்கத் தொடங்குகிறான்.

மனவடுக்குகளின் முடிவற்ற வண்ணங்கள்

ஒரு குற்றவாளி மனம் வருந்தி தன் குற்றத்தை ஒத்துக் கொள்வது இவ்வளவு நீளமாக சொல்லப்பட வேண்டுமா? என்றொரு கேள்வி எழலாம். ஆனால் நெருக்கடிகளில் மட்டுமே மனித மனம் தன்னுடைய பலத்தையோ எல்லையையோ கண்டு கொள்ள முடிகிறது. ரஸ்கோல்னிகோவ் சந்திப்பது அத்தகைய நெருக்கடியைத்தான். மனித மனம் எதிர்கொள்ளும் அத்தகைய நெருக்கடிகள் உலகப் பொதுவானவை. தஸ்தயெவ்ஸ்கியின் வர்ணணைகளில் கூட நாம் பீட்டர்ஸ்பர்கை காண்பதில்லை. இடுங்கலான இருட்டான பாதைகளை கட்டமைக்கிறார். அதிகமான "வட்டாரத்தன்மையை" ஊட்டாமல் பொதுவான சித்தரிப்புகள் வழியாகவே நம்மை உள்ளிழுத்து விடுகிறார். அதன்பின் அங்கு நடக்கும் மன விசாரணைகள் எக்காலத்துக்கும் எந்த நிலத்துக்கும் பொருந்துவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடுகின்றன. அதன் வழியாக ஒவ்வொரு வாசகனும் கண்டடைவது தன்னையே. நாவலின் இந்த தன்மைதான் நூற்றைம்பது ஆண்டுகள் கடந்த பின்னும் வாசிக்கத் தக்கதாக இப்படைப்பை வைத்திருப்பதோடு இதனையொரு செவ்விலக்கியமாகவும் நிறுத்துகிறது.

தனிப்பட்ட முறையில் என் எழுத்திலும் மனதை துருவிச் செல்லும் இக்கூறுகளை என்னால் அடையாளம் காண முடிகிறது. அது தனிப்பட்ட முறையில் ஒரு மூதாதையை கண்டு கொண்ட பரவசத்தை அளிக்கிறது.

செவ்விலக்கியத்தின் பண்புகளில் ஒன்றாக பின்னாட்களில் வரவிருக்கும் எழுத்து முறைக்கு முன்னொடியாக அமைவதைச் சொல்லலாம். அதனினும் முக்கியமாக அப்படி அமைந்து ஒரு எழுத்து முறை உருவாகி வந்த பின்னரும் கூட அதற்கு தொடர்பே இல்லாத வெவ்வேறு எழுத்து முறைகளை உருவாக்கும் தன்மை அப்படைப்பில் இருக்க வேண்டும்.

அவ்வகையில் நவீன உளவியல் ஆய்வுகள் எவ்வளவோ வளர்ந்துவிட்ட பேசப்பட்டுவிட்ட இன்றைய நிலையிலும் ஒரு இலக்கிய வாசகன் மட்டுமே கண்டடையக்கூடிய நுட்பங்கள் மண்டிக் கிடப்பதாக இப்படைப்பு இருப்பதே இன்றும் ஒரு முன்னோடிப் படைப்பாக இதனை நிறுத்துகிறது.

மனித மனம் எனும் இருட்சுரங்கத்தை கண்முன் நிறுத்தி ஆராயும் அதன் முடிவற்ற வண்ணங்களை வாசகனுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும் அவனுடைய தர்க்கத்துடன் தொடர்ந்து மோதும் இவ்வகைப் படைப்புகளே சமூகத்தின் நியாய உணர்ச்சியை தர்க்கம் வென்று விடாமல் தடுக்கின்றன.

மூலத்தின் விரைவான ஓட்டம் குன்றாமல் மிகச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கும் எம்.ஏ.சுசீலா அவர்களின் பணி போற்றுதலுக்குரியது.

வெளியீடு: நற்றிணை பதிப்பகம் விலை: ₹.990


Tuesday, 19 September 2017

நாயகிகள் நாயகர்கள் என் முதல் சிறுகதை தொகுப்பு

அறுந்துவிழும் நுண்திரைகள்

நாயகிகள் நாயகர்கள் சிறுகதை தொகுப்பின் முன்னுரையிலிருந்து சில வரிகள்

தொடர்ச்சியாக சமூக ஊடுகலப்பும் குறையும் இடைவெளிகளும் குனிந்தோ அண்ணாந்தோ பார்த்து நாம் "பிறன்" என விலக்கி வைத்திருந்தவர்களை கொஞ்ச நேரத்திற்கோ நீண்ட நாட்களுக்கோ நம் பயண வாகனத்தில் ஏற்றியாக வேண்டிய அவசியத்தை கொண்டு வந்திருக்கின்றன. இந்த சூழலில் அந்த நெருக்கம் நம் மனதில் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ சலனங்களை உருவாக்குவது தவிர்க்க முடியாததே.

அவற்றை பதிவு செய்வதன் வழியாகவே கடந்து செல்ல முடியும் என்ற தீர்மானமான நம்பிக்கையை இலக்கியம் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வாமையை உருவாக்குகிறவற்றை புரிந்து கொண்டாலன்றி சற்றேனும் நியாய உணர்வு கொண்ட மனிதன் நிம்மதியாக வாழ்ந்து விட முடியாது என்ற நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டியிருக்கிறது.

வெகு தூரத்தில் இருந்து மட்டும் ஒவ்வாமைகளும் விலக்கங்களும் நம்மை வந்தடைவதில்லை. தொடர்ந்து நம்மை நாம் வெளிப்படுத்திக் கொண்டேஇருக்கிறோம். தொடர்ச்சியாக நமக்கு இடையேயான நுண்திரைகள் அறுபட்டு விழுந்தவண்ணமே உள்ளன. அறிந்தவர்களையே இன்னும் கொஞ்சம் கூடுதலாய் அறிய நேர்வதால் ஏற்படும் நிலையின்மை இத்தனை நாள் அறிந்தவர்கள் என எண்ணி இருந்தவர்கள் வேறொருவறென மாறி நிற்பதைக் காண்கையில் அடையும் துணுக்குறல் என ஒவ்வொரு கணமும் அறிந்த ஒரு மனிதன் ஒரு மனிதன் மட்டுமல்ல என்பதை தொடர்ந்து உணர்ந்து கொண்டே இருக்கிறோம். இத்தொகுப்பில் பெரும்பாலான கதைகளில் அறுபட்டு விழுவது அந்த நுண்திரை மட்டும்தான். அத்தகைய நுண்ணியவற்றை சொல்வதே இன்றைய நாளில் சிறுகதையின் பங்களிப்பென இருக்க இயலும். இத்தொகுப்பில் உள்ள கதைகள் அதையே செய்கின்றன.

நாயகிகளை நாயகர்களை வளர்த்தெடுத்த என் அண்ணன் கௌதமனுக்கு அன்புடன் இந்நூலினை சமர்ப்பிக்கிறேன்


நூலினை வாங்க


https://www.nhm.in/shop/9789386737137.html

Saturday, 9 September 2017

காலச்சுமை - ராஜ் கௌதமன்

நவீன இலக்கியத்தின் முக்கியமான ஒரு பொதுக்கூறாக குறிப்பிடப்படுவது தனிமனிதனுக்கு அதில் கொடுக்கப்படும் முக்கியத்துவம். டால்ஸ்டாயின் எழுத்துக்களிலேயே அப்பண்பினை காண முடியும். அவருடைய புத்துயிர்ப்பு நாவலில் அரசமைப்பின் உச்சப் பதவிகளில் இருப்பவர்களின் மீது நெஹ்லூதவ் கொள்ளும் எரிச்சலை இப்பண்பிற்கு உதாரணமெனச் சுட்டலாம். அமைப்புகளால் கைவிடப்பட்ட அல்லது கண்டுகொள்ளப்படாதவர்களால் ஆனது அசோகமித்திரனின் படைப்புலகம். தற்கொலை செய்து கொள்ளுதல் எனும் உளவியல் சிக்கலில் சிக்கித் தவிப்பவள் அடுத்த வீடு கிடைக்குமா என நடைமுறைச் சிக்கலுக்குத் தள்ளப்படுவது (தண்ணீர்), தேசப்பிரிவினை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டு இஸ்லாமியர் ஒரு இந்து வீட்டிற்குள் நுழைந்து தண்ணீர் டேப்பை கடுமையாக பேசிவிட்டு சாத்திச் செல்வது (18வது அட்சக்கோடு)என ஒருபுறம் அபத்தமாகவும் மறுபுறம் அமைப்பின் மீதான தனிமனித எள்ளலாகவும் வெளிப்படுவது அமைப்புகளுக்கும் தனிமனிதனுக்குமான தொடர்பே.

தமிழின் இயல்புவாத எழுத்தின் மிகச் சரியான முன்னோடியாக கொள்ளப்படும் பூமணியின் எழுத்துகளில் சலிப்பூட்டும் அத்தியாயங்களை இப்பின்னணியில் வைத்து நன்றாகவே புரிந்து கொள்ள முடியும். அழகிரிப் பகடையின் வாழ்வை சித்தரித்துச் செல்லும் பிறகு நாவலின் வழியாக பூமணி முன் வைக்கும் அடங்கலான அதேநேரம் கூரிய சமூக விமர்சனம் தனிமனிதனின் நியாய உணர்வுகளை நுண்மையாக அசைத்துப் பார்ப்பது. நவீன இலக்கியம் அந்தரங்க வாசிப்புக்குரியது எனும் போது அதனிடமிருந்து எதிர்பார்க்கப்படும் விளைவுகளும் அந்தரங்கமானதாகவே இருக்க இயலும். நவீன இலக்கியம் குறிப்பாக இயல்புவாத படைப்புகள் சலிப்பூட்டுவதற்கு முக்கிய காரணம் அவை சுவையான நீதிக்கதைகளைச் சொல்லவோ போதிக்கவோ உத்தேசிக்கப்பட்ட வடிவம் கிடையாது என்பதுதான்.

ராஜ் கௌதமனின் காலச்சுமையை இந்தப் பின்புலத்தின் வழியாகவே நான் புரிந்து கொள்கிறேன். அங்கதம் மிகுந்த தன் வரலாற்றுத் தன்மை கொண்ட படைப்பு. இப்படைப்பில் இழையோடும் அங்கதம் இயல்பாகவே விரைவான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. பெரும்பாலும் பேச்சு நடையிலேயே உரைநடையை அமைத்துக் கொண்ட நாவல். சாதாரண பேச்சு நடையை ஆர்வத்துடன் வாசிக்கத் தகுந்ததாக மாற்றி விடுகிறார் ராஜ் கௌதமன். விரிவான வாசிப்பும் பேச்சு மொழியை கூர்ந்து கவனிக்கும் திறனும் வெளிப்படும் ராஜ் கௌதமனின் மொழியில் "பெரிதாக" ஒன்றும் நடைபெறாத இந்த நாவலை விரைவாக வாசிக்க வைக்கின்றன. ஆனால் ஆசிரியர் உத்தேசிக்கும் தருணங்கள் மிக்கூர்மையாக இப்பேச்சு மொழியில் வெளிப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

பறையர் சாதியில் பிறந்து ஆர்.சி கிறிஸ்துவனாக வளரும் சிலுவைராஜ் தன்னை ஒரு மனிதனாக வாழ்வில் நிலைநிறுத்திக் கொள்வதும் அவனுடைய தேடலும் துயரும் மகிழ்ச்சியுமே இந்த நாவலின் கதையோட்டத்தை உருவாக்குகின்றன. சிக்கலற்ற நேரடி கதை சொல்லலை எடுத்துக் கொண்டு அதன் வழியாகவே தன் மொழியின் மூலம் மனிதர்களின் மன அடுக்குகளுக்குள் புகுந்து பயணிக்க வைக்கிறார் ஆசிரியர்.

பின் நவீனத்துவத்தின் தனிமனிதன்

சிலுவைராஜ் காரைக்காலில் ஒரு கல்லூரியில் துணைப் பேராசிரியராகச் சேர்வதுடன் நாவல் தொடங்குகிறது. நாவல் முழுக்கவே வாழ்வை விலகி நின்று அணுகும் சிலுவையின் நக்கல் மொழி வெளிப்பட்டபடியே இருக்கிறது. வாசிக்கத் தொடங்கும் போது எளிய தன் வரலாற்று நடை போல தோற்றம் தரும் மொழி பக்கங்கள் நகரும் போது தனக்கான கூர்மையைக் கண்டடைந்து விடுகிறது.

வரலாற்றால் கைவிடப்பட்டனாக உணரும் ஜோசப் ஜேம்ஸ்(ஜே ஜே சில குறிப்புகள்), சந்திரசேகரன்(18 வது அட்சக்கோடு) போன்றவர்களின் சலிப்பும் நம்பிக்கையின்மையும் சிலுவையிடம் இல்லை. எளிய மனிதர்கள் எப்போதும் இப்படி கைவிடப்பட்டவர்களாக எளிய சூத்திரங்களைக் கொண்டு வாழ்வை புரிந்து கொள்கிறவர்களாக இருக்கிறார்கள் என்பதை நகைப்புடன் நோக்கும் ஒரு பின்நவீனத்துவ தனியனின் வருகையை சிலுவை தெளிவாகவே அறிவிக்கிறான்.

இந்நூலில் இழையோடும் சாதி குறித்த சாடல்களும் இத்தகையை அபத்தப் பின்னணியிலேயே நிகழ்கிறது. கழிவறையை அசுத்தப்படுத்துவதை சுட்டிக்காட்டும் போதும் தன்னெழுச்சியுடன் அவன் உளறும் போதும் அவன் எல்லைகள் உணர்த்தப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறான். நாவலின் நடை மாறும் போதெல்லாம் உணர்வு நிலைகளும் மாறிச் செல்கின்றன. கல்லூரிக்கு புதிதாக பொறுப்பேற்கும் பிராமண முதல்வரை அறிமுகம் செய்யும் பகுதிகள் அதிகாரத்துக்கே உரிய இறுக்கத்தையும் இலக்கியம் சார்ந்த பகுதிகள் சரளமாக (இலக்கியம் வாசிப்பவர்களுக்கு மட்டும்?) வாசித்துச் செல்லக்கூடியதாகவும் மகள்களை பறிகொடுத்து சிலுவை தவிக்குமிடங்களில் அதீத நெகிழ்வுடையதாகவும் மொழி மாறுகிறது.

காலூன்றுதல்

தமிழகத்தில் தலித் சொல்லாடல்கள் உருவாக ஆரம்பித்த சென்ற நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அதுவொரு உத்தேசமான பொதுச் சமூகத்தால் தலித்துகள் நோக்கி வீசப்பட்டதாகவே இருந்தது. பொதுச் சமூகம் உருவாக்கிய விழுமியங்களால் கைவிடப்பட்டவர்கள் என்பதால் "எதிர் விழுமியங்கள்" கொண்டவர்களாக அவர்கள் இருக்க வேண்டும் என்பது போன்ற அறைகூவல்கள் எழுந்திருக்கின்றன. ஆகவே கொச்சையாக பேசுவது அசுத்தமாக இருப்பது போன்றவை புரட்சிகர அடையாளங்கள் போல முன்வைக்கப்பட்டன. இந்தக் கதையாடல்களில் இருந்து விலகி உருவான பூமணயின் "பிறகு" நாவலே இன்றுவரை வாசிக்கவும் விவாதிக்கவும் படுகிறது. அந்த நாவலின் மையக்கதாப்பாத்திரமான அழகிரி பகடை ஒரு பிரச்சார பாத்திரமாக முன்வைக்கப்படவில்லை. தன் எல்லைகளை அறிந்தவனாக தன் கௌரவத்திற்கு இழுக்கு வருகையில் சினம் கொள்கிறவனாக குடும்பத்தின் மீது அக்கறை உடைய ஒரு தகப்பனாக கணவனாக ஒரு உத்தேச "நவீன" மனிதனின் அத்தனை குணமும் கொண்டிருக்கிறான்.

ராஜ் கௌதமனின் சிலுவைராஜை அழகிரியின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியாகப் பார்க்கலாம். கிறிஸ்துனான சிலுவை இட ஒதுக்கீட்டு சலுகை பெறுவதற்காக (மீண்டும்?) இந்துவாகிறான். அவனைப் போலவே அரசு வேலை செய்யும் அவன் சாதிப் பெண்ணொருத்தியை மணக்கிறான். அவன் பணிபுரியும் இடமான காரைக்காலில் தான் நாவலின் களத்தின் பெரும்பகுதி அமைந்துள்ளது. மணம் புரிந்து கொள்ளும் சிலுவை ஒரு சராசரி மத்திய தர இந்தியன் அனுபவிக்கும் அத்தனை இடையூறுகளையும் சந்திக்கிறான். அவனது முன்னேற்றம் சொந்தங்களிடம் குடும்பத்திடம் நண்பர்களிடம் ஏற்படுத்தும் பொறாமையும் எரிச்சலும் மிக நேர்த்தியான சொற்களில் வெளிப்படுகின்றன. வீடு மாற்றி அலைகிறான் சொந்த வீடு கட்டுகிறான் சென்ற நூற்றாண்டின் கௌரவ அடையாளங்கள் ஒவ்வொன்றும் அவனை நோக்கி வருகின்றன.

இப்படி இயல்பான தன்வரலாற்றுத் தன்மை கொண்ட படைப்பை ஒரு பின் நவீனத்துவ நாவலாக்குவது ஆசிரியரின் சமூகப் பிரக்ஞையே. அவன் தானொரு பறையன் என்பதை இயல்பாக வெளிப்படுத்த முடிவதில்லை. தன்னுடைய பெண் தன்னிடம் வந்து சாதியைக் கேட்கும் போது தடுமாறுகிறான். தன் தங்கையை சாதி காரணமாக அவள் கணவனே கொலை செய்யும் போது மௌனமாக திகைத்துப் போய் திரும்புகிறான். நவீன லட்சியவாதங்களுடனும் பழமையுடனும் பொருந்த முடியாமல் சிலுவை தத்தளித்தபடியே இருக்கிறான். அதேநேரம் அவன் வாழ்வு மெல்ல மெல்ல ஒரு நவீன இந்தியனின் வாழ்வாக பரிணாம வளர்ச்சி பெற்றபடியே உள்ளது.

அவன் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்கதையை சொல்லும் பகுதிகளும் ஆர்வமூட்டுகின்றன. பொதுவாக உயர்சாதி ஆய்வு வாழிகாட்டி தாழ்ந்த சாதி ஆய்வாளனுக்கு இடையே இருக்கும் பாகுபாடுகள் ஏதுமின்றியே பெண்ணான அவனுடைய வழிகாட்டி பழகுகிறார். ஆனால் அவருடைய ஆணவம் காலத்தில் சற்று பின் தங்கிய பார்வையால் சீண்டப்படும் இடம் நுண்மையாக சொல்லப்பட்டுள்ளது. அவ்விடத்தில் ஒரு கணம் அந்த உயர்ந்த தாழ்ந்த அடையாளங்கள் சட்டென தலைகீழாகின்றன. அவரை ஒரு பெண்ணாக "பின் தங்குதலுக்கு" வேறொரு சொல்லாடலை உருவாக்குவதாக அத்தருணம் மாற்றிவிடுகிறது. வழக்கமாக சொல்லப்படும் பொத்தாம் பொதுவான சமூக அநீதிக் கதைகளில் இருந்து விலகி யதார்த்தத்திற்கு அணுக்கமானதாக நிற்கிறது இப்படைப்பு.

இப்படைப்பின் குறை என்பது எவ்வளவு அங்கதத்துடன் வெளிப்பட்டாலும் ஆசிரியரின் குரலோங்குதல் நடைபெறுவதை தவிர்க்க முடியாமல் இருப்பதே. ஜெயமோகனின் காடு நாவல் தான் கதை சொல்லியால் முழுக்கதையும் சொல்லப்படுவது போல அமைக்கப்பட்டு நான் வாசித்த முதல் நாவல். ஆனால் அந்த நாவலுக்குள்ளாக ஒலிக்கும் கதை சொல்லியின் குரல் குட்டப்பன் அய்யர் நீலி கதை சொல்லியின் தாய் என அழுத்தமாக உருவாக்கப்பட்டிருக்கும் "மற்றவர்களால்" சமன்செய்யப்பட்டிருக்கும். ஆனால் காலச்சுமையில் சிலுவைராஜின் பார்வையிலேயே மற்றவர்கள் வந்து செல்வது பிரக்ஞையுடன் உத்தேசிக்கப்பட்டதாகவே இருந்தாலும் அது நாவலுக்கான விரிவினை அளிப்பதைத் தடுக்கிறது. அதை சிலுவைராஜின் "அறிவும் அனுபவமுமே" வாசகனிடமிருந்து மறைக்கிறது. ஆனால் இந்த நாவலின் சொல்லாடல்கள் புழங்கு மொழியாக மாறும் இன்னும் சில ஆண்டுகளில் இது ஒரு குறையாகவே தென்படும்.

சாதி ஒரு தனிமனிதனுடன் கொள்ளும் உறவை செயற்கையான நாடகீயத் தருணங்கள் வழியே அல்லாமல் ஒரு இயல்பான வாழ்க்கைப் போக்கின் அறிவால் புரிந்து கொள்ளக்கூடிய அசூசை தரக்கூடிய ஒரு பழம்பொருளாக மட்டும் கண்டிருப்பது இப்படைப்பு உருவாக்கும் தனிப்பட்ட தரிசனமாக எனக்குப்படுகிறது. அதேநேரம் சாதியை மையப்பொருளாக்காமல் மறைக்கப்பட வேண்டிய விட்டு ஓடியாக வேண்டிய ஒன்றாக பதற்றம் தருவதாக மாற்றிக் காட்டியிருப்பதும் இந்நாவலின் சிறப்பு.

ஒவ்வொரு மனிதனும் தன்னை ஒரு சமூக மனிதனாக அடையாளம் கண்டு கொள்ளும் போது அவன் விட்டு ஓடியாக ஒன்று இருக்கவே செய்கிறது. அவன் உடலாக பின்னணியாக பால் தேர்வாக லட்சியமாக ஏதோவொன்று அவனைப் பதற்றப்பட வைத்துக் கொண்டுதான் இருக்கிறது. அப்பதற்றமே அவன் மீதான சுமையாகப் படிகிறது. அவனால் விலக்க முடியாதவற்றால் விட்டு ஓடிவிட முடியாதவற்றால் ஆனதாக அவன் உலகம் மாறும்போது சுமையேறிய ஒரு மனிதனாக அவன் மாறிப்போகிறான். சிலுவை தன் முயற்சியால் அறிவால் குடியால் தனிமையால் தனித்தன்மையால் வாழ்வு முழுக்க அவன் தவிர்க்க நினைப்பதை தவிர்த்தபடியே இருக்கிறான். இறுதியில் பறவைகளை ரசிப்பதில் அவன் மனைவிக்கு குழந்தையாவதில் தன் நிறைவினைக் கண்டடைகிறான்.

Sunday, 27 August 2017

அயோத்திதாசர் ஒரு அறிமுக உரை!!

நண்பர்களுடனான ஒரு மாலை உரையாடலை பதிவு செய்தது மட்டுமே இது. அமேரிக்கா தேர்தல் முறை பற்றிய தகவல் மட்டும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை. மற்றபடி ஒரு முறையான உரையாற்றும் எண்ணத்தோடு தொடங்காததாலும் என்னுடைய சட்டைப்பையில் கிடந்த அலைபேசி இவ்வுரையை பதிவு செய்ததாலும் திறந்தவெளி உரை என்பதாலும் ஒலிப்பதிவின் தரம் குறைவாகவே இருக்கும். எனினும் என்னை என் குரல் வழியாக நண்பர்கள் அறிய வழி வகுக்கும் என்பதால் இதை வலையேற்றுகிறேன்.

அயோத்திதாசர் அறிமுக உரை

Tuesday, 15 August 2017

ஆசிரியர் சொல்

ஒளிர்நிழல் வெளியாகி மூன்று மாதங்கள் ஆகப்போகின்றன. இந்த நாவலின் முதல் வாசகரான மேரி எர்னஸ்ட் கிறிஸ்டி நாவலை வாசித்து மெய்ப்பு பார்த்த ஹரன் பிரசன்னா மற்றும் பேராசிரியர் டி.தருமராஜ் ஆகியோர் மட்டுமே நாவல் குறித்து தங்கள் பார்வையை விரிவாக என்னுடன் பகிர்ந்து கொண்டனர். வாசிப்பதற்கு மெல்லிய சவாலை அளிக்கும் படைப்பு என்பதால் ஓரளவு இலக்கிய வாசிப்பு உடைய நண்பர்களிடம் இருந்தே எதிர்வினையை எதிர்பார்த்தேன். பின்னர் அவர்களுக்கும் புரிந்து கொள்வதில் சிக்கல் இருக்கும் போல என மிதப்பாக எண்ணிக் கொண்டேன். நாட்கள் நகர்ந்த போது "படித்துக் கொண்டிருக்கிறேன்" மற்றும் "புரியவில்லை" என்ற இரு பதில்களே நண்பர்களிடம் இருந்து அதிகம் வந்தன(நான் கேட்காவிட்டாலும்😊).

ஆசிரியரின் இந்த நீண்ட விமர்சனம் நானடைந்த பேறு. அதேநேரம் எல்லா விமர்சனங்களுமே வாசகர்களை நோக்கியதே. ஆகையால் ஒளிர்நிழல் வாசிக்க விரும்பும் நண்பர்களுக்கு இந்த விமர்சனம் ஒரு புரிதலை அளிக்கும். வாசகனாக எனக்கும் இந்த விமர்சனம் எனக்கு அத்தகைய புரிதலை அளிக்கிறது.

http://www.jeyamohan.in/101425#.WZJ9PcvA7qA

Tuesday, 8 August 2017

ஒரு பழைய ஓட்டு வீட்டின் கதை

ஒரு பழைய ஓட்டு வீட்டின் கதை வெளியில் இருந்து சொல்லப்படும் போது ஆர்வமூட்டுவதாக இருக்கலாம். அதன் தோற்றத்தையும் வீழ்ச்சியையும் சரியான வார்த்தைகளில் படம் பிடித்து நிறைவோ துயரோ வேண்டிய அளவு உணர்ச்சிகளை ஊட்டலாம். ஆனால் ஒரு பழைய ஓட்டு வீட்டின் கதையை அவ்வீடு புதிதாக இருந்த போது அங்கு வளர்ந்த ஒருவனின் சொற்களில் அதுவும் அவ்வீட்டுக்குள் இருந்தே வெளிவரும் அவன் சொற்களில் கேட்பது சற்றே சங்கடம் தருவதாக இருக்கலாம். வெளியே அடர்த்தியாக மழை பெய்கிறது. இவ்வீடு ஒரு கிழ நாயைப் போல மழைக்கு அஞ்சி நெளிகிறது. இதை உங்களிடம் சொல்லிக் கொண்டிருப்பவன் அவ்வீட்டுக்குள் கிடந்த நெளிகிறான். உங்கள் கட்டிடங்களை அவை கட்டிடங்கள் என்ற உணர்வு எழும் முன் இடித்துவிடுங்கள் என்பது அவன் சொல்லும் போதனையாக இருக்கலாம். ஏனெனில் அவன் இப்போது ஒரு கட்டிடத்தில் இருக்கிறான். அவன் இந்த கட்டிடத்துக்கு எப்போது வந்தான் எனத் தெரியவில்லை. ஆனால் அவன் வீட்டை விட்டே சென்றிருந்தான். திரும்பி வருகையில் அந்த வீட்டில் கொஞ்சம் வீடும் அவன் அம்மாவில் கொஞ்சம் அம்மாவும் அவன் மனைவியில் கொஞ்சம் மனைவியும் எஞ்சி இருப்பார்கள் என அவனுக்கொரு நம்பிக்கை இருந்தது. ஆனால் அந்த நம்பிக்கைக்கு ஆதாரமாய் அந்த வீட்டைத் தவிர வேறெதையும் அவன் செல்லும் போது விட்டுச் செல்லவில்லை. அவன் அந்த வீட்டுக்கு திரும்பி வந்தது ஊரில் யாருக்குமே தெரியவில்லை. ஊரை விட்டு இப்போது அவன் வீடு தள்ளியிருக்கிறது. அவன் வீட்டுக்கு அருகில் இருந்த எந்த வீட்டிலும் இப்போது ஆட்கள் இல்லை. மேலு‌ம் அவை வீடாகவும் இருக்கவில்லை. இடிந்து நைந்து வரப்போகும் பெருமழையில் கரையக் காத்திருந்தன. இவன் வீடு அப்படியில்லை. சிக்கலான நோய்கள் கொண்டவனைப் போல அவன் வீடு மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. அது வீடாக இருந்த நாட்கள் அவன் நினைவுக்கு வருகின்றன.

எல்லாவற்றையும் துல்லியமாக நினைவுகூர அவன் விரும்பவில்லை. அவனால் அது முடியவும் இல்லை. அவன் விரும்பினால் இன்னும் கொஞ்ச காலம் உயிரோடு இருக்கலாம் என்பதைப் போலவே அவன் விரும்பினால் பல நினைவுகளை அவ்வீடு குறித்து மீட்டெடுக்க முடியும்.

அவன் அம்மா அவ்வளவு சந்தோஷமாக சாப்பாடு பரிமாறிய தினம் அவனுக்கு ஞாபகம் வந்தது. அது இந்த வீடு கட்டி முடித்து பால் காய்ச்சப்பட்ட தினம். அவள் முகத்தில் அன்றிருந்த சீற்றமும் பெருமிதமும் இன்று நினைத்தாலும் மனம் பொங்க வைக்கின்றன. அடுத்த நாளில் எந்த வெற்றியும் இருந்ததாக அவள் நம்பவில்லை. சிறு அலட்சியங்களை அவமானங்கள் என்றும் எண்ணியது அதே செறிவுடன் நடக்காதது தோல்வி என்றும் அவள் கற்பனை செய்தாள். எந்நேரமும் தொடுக்கப்பட்ட அம்பு போலவே இருந்தாள். அந்த வீடும் அப்படித்தான் இருந்தது. அதுவரை அவன் அம்மாவின் உடலில் தெரிந்த தயக்கம் இல்லாமல் ஆவதை அவன் கண்டான். திண்ணையில் நின்று அனைத்திற்கும் தீர்க்கமாக பதில் சொன்னாள். அப்பாவை "இங்க வாங்க" என சத்தமாக அழைத்தாள். சாலையில் நடந்து செல்கிறவர்களை அலட்சியம் மின்னும் விழிகளால் பார்த்தாள். தன் மதிப்பை யாரேனும் குறைக்க வேண்டும் என்ற ஆசை அவளிடம் எப்போதும் இருந்தது. அதன் வழியே அவர்களை பற்றிப் படர்ந்து படம் விரிக்க நினைக்கும் அவளுடைய ஆவலை அனைவரும் அஞ்சினர்.

அப்பா அந்த வீட்டுக்கு வந்த பிறகு எந்நேரமும் இருக்கும் பதற்றம் குறைந்தவர் ஆனார். செய்தித்தாள்களை விரித்துப் பிடித்து அரைமணி நேரத்திற்கும் மேலாக வாசிக்கும் அப்பாவை பார்க்க அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அம்மாவை அடிப்பதோ கெட்டவார்த்தைகளில் திட்டுவதோ கிடையாது. வீட்டுக்கு வரும் யாரையும் எதையும் உண்ண வைக்காமல் அனுப்புவதில்லை அவர். சத்தமாக சிரிக்கிறார் கூர்மையாக அனைத்தையும் கவனிக்கிறார்.

அவன் மாறிப்போகவே செய்தான். முதலில் வீட்டருகில் யாரும் இல்லாதது வருத்தம் தருவதாய் இருந்தது. ஆனால் அவன் வீட்டுக்கு அடுத்து விரியும் திடலில் தான் பசங்கள் விளையாட வருகிறார்கள். அதனால் இயல்பாகவே அவன் எல்லா விளையாட்டிலும் இணைத்துக் கொள்ளப்பட்டான். விளையாட்டுச் சாமான்கள் எல்லாமும் அந்த வீட்டிலேயே வைத்துச் செல்லப்பட்டன. அவன் வீட்டுக்கு அருகில் சில வீடுகளும் கட்டப்பட்டன. இருந்தும் அவன் வீட்டின் தனிமை அப்படியே அசைக்கப்படாமல் இருந்தது. அந்த வீட்டில் தான் ரம்யா சித்தி ஒருமுறை பாத்திரம் கழுவ வந்தவள் வீட்டுக்குள் டி.வி பார்த்துக் கொண்டிருந்தவனை பிடித்து உடலோடு அணைத்து உதடுகளில் இறுக்கமாக முத்தமிட்ட பின் அழுது கொண்டே ஓடினாள். செல்வி அக்காவுக்கு அந்த வீட்டில் தான் குழந்தை பிறந்தது. சுமதியை முதன்முறையாக அவன் முத்தமிட்டதும் அங்குதான். நண்பர்களுடன் இணைந்தமர்ந்து கைகள் நடுங்க முதன்முறையாக மது அருத்தியதும் அங்குதான்.

வெளியூருக்கு படிக்கச் சென்ற போது அந்த வீட்டை மட்டுமே மீண்டும் மீண்டும் எண்ணிக்கொண்டான். நண்பர்களின் வீடுகளை பார்க்கும் போதெல்லாம் தன் வீட்டுடன் அதை ஒப்பிட்டு பெருமையோ சிறுமையோ அடைந்தான். படித்து முடித்த பின் காயத்ரியை கூட்டிவந்தபோது அவன் எவ்வளவோ மறுத்தும் அவள் அவனை தன்னுடன் முதன்முறை இணைத்துக் கொண்டதும் இந்த கூடத்தில் தான். அவளை மணமுடித்ததில் அப்பாவுக்கு வருத்தம் இருந்தது. மாரடைப்பில் இறந்து போனார். அதன்பிறகும் அவன் வீடு நன்றாகவே இருந்தது. காயத்ரியின் உறவினர்கள் அம்மாவின் உறவினர்கள் அவனுடைய மகன் மகள் என வீடு எந்நேரமும் சத்தமாகவே இருந்தது. அவனும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டுக்கு வந்துவிடும் வேலையிலேயே இருந்தான். அவனுக்கு எங்கோ ஒரு மூலையில் சலிப்பு தட்டியிருக்க வேண்டும். காயத்ரியை தவிர்க்கத் தொடங்கினான். அவளும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின்னர் யாருடனும் பேசாமல் ஆனான். குழந்தைகளை கொஞ்சுவதும் குறைந்து போனது. சரியாக வேலைக்குச் செல்வதில்லை. குடும்பம் நொடிக்கத் தொடங்கியது. எப்போதேனும் அவளைக்கூடும் போது அவளுடைய குழி விழுந்த கன்னங்களையும் சுள்ளி போன்று மாறியிருந்த கைகளையும் கண்டு வெறி கொண்டு அடிக்கத் தொடங்கினான். அவள் கைகளை முகத்துக்கு நேரே நீட்டிக் கொண்டு அழுவது மேலு‌ம் வெறுப்பைக் கொடுத்தது.

குழந்தைகள் உண்ணாமல் மெலிந்து கொண்டே வந்தன. அதை நினைத்தும் எரிச்சல் கொண்டான். அவன் எதை நினைத்து எரிந்தாலும் காயத்ரியை அணைத்துக் கொண்டான். குழந்தைகள் பார்க்கவே அவள் கெஞ்சுவதையும் பொருட்படுத்தாமல் உள்ளே இழுத்துச் சென்றான். கொஞ்ச நேரத்தில் அழுதபடி ஓடிவரும் அம்மாவுக்காக குழந்தைகள் காத்திருக்கத் தொடங்கின. ஒரு இறந்த குழந்தையை ஈன்றாள்.

மகனுக்கு மார்புச்சளி முற்றி வைத்தியம் பார்க்க பணமில்லாமல் ஆனபோது அவன் வீட்டை விட்டு ஓடிவிட்டான். பிச்சை எடுத்தான். ஓரினச்சேர்க்கை மூலம் அவனுக்கு கொஞ்ச நாள் பணம் கிடைத்தது.

"என் பிறப்புக்கு முந்தைய கணத்தை என்னால் ஊடுருவிப் பார்க்க முடிகிறது. எனக்கு அம்மா இருந்தாள். எனக்கு இரு அழகான குழந்தைகளும் ஒரு அற்புதமான மனைவியும் இருந்தார்கள். எங்களுக்கு அழகான ஒரு ஓட்டு வீடு இருந்தது. நாங்கள் ரொம்பவும் மகிழ்ச்சியாய் வாழ்ந்தோம்" என அவன் தன் பூர்வ ஜென்ம நினைவுகளாய் தன் குடும்பத்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தான். கண்கள் வெளித்தள்ளிய அந்த எலும்புருவுக்கு அப்படியொரு வாழ்க்கை இருந்திருக்கும் என யாரும் நம்பவில்லை.

அவன் மெல்ல மெல்ல அந்த வாழ்க்கைக்கு பழகிக் கொண்டான். கண்டதை தின்றும் கண்ட இடத்தில் உறங்கியும் அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை. அவன் உடலும் தேறியது. அவனுக்கு பெண்களும் எளிதாக கிடைத்தனர். எல்லா ஆறுகளிலும் மூழ்கி எழுந்தான். அவன் ஊர் என்ற போதம் இல்லாமலேயே அவன் ஊர் ஆற்றில் முழுகி எழுந்தான். எப்போதும் போராடி நீந்தும் அவன் உடல் அவ்வாற்றில் எளிதாக நீந்தியது. அவன் ஊரும் வீடும் அவனுக்கு நினைவுக்கு வந்தன. அதுவரை உடலில் இருந்த சமநிலையும் முகத்தில் இருந்த மகிழ்ச்சியும் காணாமல் ஆனது. நோயுற்றவன் போல அவன் முகம் இருண்டது. அவன் வீட்டை அவன் அடைந்த போது இருட்டிவிட்டிருந்தது.

வீட்டுக்கு கதவுகள் இல்லை. எறும்புகள் வீடு முழுக்க மண் அரித்து வைத்திருந்தன. பொருட்கள் என அவ்வீட்டில் ஏதுமில்லாதது அவனுக்கு நிம்மதியைக் கொடுத்தது. அடுத்த நிமிடமே பயம் வந்து மனதைக் கவ்வியத். பல கட்டுவிரியன் பாம்புகள் அவனைச் சுற்றி நெளிந்து கொண்டிருந்தன. அவனளவு நீளமும் அவன் கையளவு கனமும் கொண்ட நிறைய பாம்புகள்.

சமையற்கட்டின் மேல் பிணைந்து கிடந்த பாம்புகளை அகற்றிவிட்டு அக்கட்டையின் மேல் படுத்துக் கொண்டான். அவனுடைய துணிப்பையில் இருந்த கம்பளியை எடுத்துப் போர்த்திக் கொண்டான். பின்னர் அப்பையில் இருந்த எல்லா உடைகளையும் எடுத்துப் போர்த்திக் கொண்டான். நன்றாக மழை பெய்யத் தொடங்கியது. அந்த குளிரை அனுபவித்தபடியே கிடந்தான். அவன் படுத்திருந்த மேடையின் மழை ஒழுகவில்லை.

மனம் எப்போதும் அஞ்சித் தயங்கும் அந்தப்புள்ளியை இந்த உடற்சுகநிலை அசைபோடத் தொடங்கியது. ஒருவேளை அவன் காயத்ரியை வெறுக்காமல் இருந்திருந்தால். அம்மாவையும் குழந்தைகளையும் பிரியாமல் இருந்திருந்தால். போர்த்தி மூடி தூங்கும் அவனை அவள் மகள் ஒவ்வொரு போர்வையாக இழுத்து எழுப்புகிறாள். அவன் மகன் அவன் மேல் ஏறிக்குதிக்கிறான். குளித்த ஈரம் சொட்டும் தலையுடன் உடைமாற்றும் காயத்ரியின் உடல் மணம் மனதை கிளரச் செய்கிறது. அம்மா ஒருக்கி வைத்திருக்கும் பூஜை அறையினுள் நன்றாக குளித்து உடையணிந்தபடியே போய் அவனும் காயத்ரியும் பிள்ளைகளும் போய் நிற்கின்றனர். அவள் அவர்கள் நால்வருக்கும் விபூதி பூசி விடுகிறாள். கணவனை நினைத்து கலங்கும் அவள் கண்களை துடைத்துவிட்டு அணைத்தபடி அழைத்துச் செல்கிறாள் காயத்ரி. பாட்டி அழுவதற்கான காரணத்தை கேட்கும் குழந்தைகளை திசைமாற்றி அவன் வேறு பக்கம் அழைத்துச் செல்கிறான். அவன் கண்களும் பனிக்கின்றன.

ஆனால் அதை அவன் துடைத்த போது அவனை எழுப்ப ஆள் இல்லை. மழையில் நனைந்த பாம்புகள் உடற்சூடு தேடி ஊர்ந்து கொண்டிருந்தன. அந்த வீடு மெல்ல மெல்ல கரைந்து கொண்டிருந்தது. பாம்புகள் உடற்சூட்டினை கண்டு கொண்டன. அவற்றை அணைத்துக் கொண்டான். கடைசியாக அடித்த மின்னலில் அந்த வீட்டின் சிவப்பான ஓடுகள் கண்ணுக்குத் தெரிகின்றன.