Sunday 1 January 2017

சில கவிதைகள் - 2

இனிப்பு

உப்புச் சுவையும் எச்சில் மணமுமே

உதட்டு முத்தம்

தோழி

பிறகு இனிப்பென்பதென்ன?

முத்தம் இனிப்பல்ல

ஒவ்வொரு இனிப்பும்

முத்தமே

------

பூசனை இலைப் பீப்பிகள் போல

சுற்றி அழுகின்றன குழந்தைகள்

நெரிசலான பேருந்து

------

அது மட்டுமெனில் அது மட்டும்

பால் மணம் மறந்த நாட்களில்

அம்மாவின் அடிவயிறோடு ஒட்டி உறங்கிய பொழுதுகளில் உணர்ந்த உடல்மணம்

தன்வலுவறிய எட்டொண்பது வயதுகளில்

இரு கை நீட்டித் தூக்கிய ஓடிய அக்கைகளின் முலை மணம்

அடர் மழைச் சாரலில் ஆட்டோவின் ஓரம் அமர்ந்திருந்தவனை இழுத்தருகமர்த்திய அறியா மூத்தவளின் உடற்சூடு

இவற்றில் நான் உணர்ந்தது நீ எண்ணும் ஒன்று தான் எனில்

தோழி

தவறில்லை

உன்னை நோக்க வரளும் என் உதடுகளும்

தவித்துத் துடித்து விலகும் விழிகளும்

காமம் காமம் என மட்டும் துடிப்பதாய் எண்ணிக்கொள்

------

ஒன்று மற்றொன்று

பிறர் கண் படா

கண நேரத்தில்

கன்னம் உப்ப வைத்து

நுனி நா நீட்டி

புருவமுயர்த்தி

ஒரு கண் மூடி

இதழ்கள் குவித்து

பழிப்பு காட்டுபவளை

உள்ளங்கைக்குள் சுருட்டித் தூக்கி

உள்ளுக்குள் உறைத்து விடச் சொல்கிறது

ஒன்று

நெற்றியில் கை வைத்து

புறங்கை தொட்டு

உடல் சூடுணர்பவளின்

உகந்தது கொணர்ந்து

தெளிகையில் மலர்ந்து

நடுங்குகையில் நகுந்து

இமைக்கும் கணத்திலும்

மறவாதவளின்

பேருருவக் கனிவில்

கைமகவென

கண் மூடி

களித்துறங்கத் துடிக்கிறது

மற்றொன்று

------
கோரிக்கை

என்னால் மன்னிக்கப்படுவதற்கான

எல்லாத் தகுதிகளையும்

வளர்த்துக் கொண்டிருக்கிறாய்

மன்னிப்பு கேள் என்பதையும்

நானே நினைவுறுத்துகிறேன்

மன்னித்துவிடுகிறேன்

தயவு செய்

தயவு செய்து

என்னிடம் மன்னிப்பு கேள்

பொய்யாகவேணும்

------

தயக்கச்சலிப்புடன்

வேகம் குறைத்த வலக்கை

விர்ரென ஏற்றுகிறது

விடுபட்ட வேகத்தை

எதிர்வருவது

ஆம்புலன்ஸ் அல்ல

அமரர் ஊர்தி என

விழியறிந்ததும்

------

மருந்து கொடுங்கள்

எதிர்வரும் ஒவ்வொரு இணையுதடுகளிலும்

அழுந்தப் பதிக்கச் சொல்லும்

என் உதடுகளின்

நமைச்சலுக்கு

-----

பேயன்பு

அம்மா

இல்லாத பயத்தினை

இழுத்து வரவழைத்து

உன் அடிவயிற்றுச் சூட்டின்

அனலில் பயந்து ஒளிந்து

புதைந்து நெளிகையில்

ஆதூரத்துடன் என் முதுகை வருடுகிறது

பேய்

----

No comments:

Post a Comment