Thursday 23 February 2017

தேனுலகு - 2

சீறல் ஒலி தொடர்ந்து கேட்டது. நேரம் ஆக ஆக அவ்வொலி வலுத்தே வந்தது. முல்லை அதையே கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள். ஒரு சமயம் ஒலி திடீரென நின்று போகும். இனி பயமில்லை என ஆசுவாசமடைவாள் முல்லை. மீண்டும் அச்சத்தத்தை கேட்டுவிடும் போது மனதை ஒரு பயம் கவ்விப் பிடிக்கும். காட்சிகள் மங்கலாகவேத் தெரிந்தன. அவளால் கண்களையும் திறக்க முடியவில்லை. எழுந்து ஓட நினைத்தாலும் கால்களை ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத அளவிற்கு உடல் வலுவற்றுப் போயிருந்தது. எத்தனையோ முயற்சிகள் செய்தும் ஒரு அடி வைப்பதற்குள் உடலின் மொத்த எடையும் பாதங்களுக்கு இறங்கியது போல கால்கள் வலித்தன. சீறல் ஒலி மேலு‌ம் வலுத்திருந்தது. சேறு நொதிக்கும் ஒரு குளம் போல ஏதோ அவளுக்கு கண்ணில் பட்டது. சேறல்ல. அது தேன். தேன் என்று தெரிந்ததுமே உடலில் ஒரு இனிமையும் பரபரப்பும் எழுவதை முல்லை உணர்ந்தாள். தேன் குளத்தின் வாய் இன்னும் திறக்கவில்லை. அதனையே உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். தேன் குளம் மெல்ல மெல்ல விரியத் தொடங்கியது. முல்லை மேலு‌ம் ஆர்வத்துடன் குனிந்து நோக்கினாள். குளம் விரிய விரிய தன்னுள்ளும் ஒரு பதற்றம் தொற்றுவதை முல்லையால் உணர முடிந்தது. தன் புறங்கையில் திடீரென ஒரு வெப்ப மாறுபாட்டை உணர்ந்தாள். சூடான எச்சில் கைகளில் வழிந்திருந்தது. திடுக்கிட்டு கண் விழித்தாள். தலையணையில் எச்சிலைத் துடைத்துவிட்டு புத்திசாலித்தனமாக தலையணையைத் திருப்பிப் போட்டாள். மீண்டும் ஏதோ யோசித்தவளாய் பக்கத்தில் குறட்டை விட்டபடி தூங்கிக் கொண்டிருந்த அப்பாவின் தலையணையை மெல்ல உருவி தன் தலையணையை அவருக்கு அண்டை கொடுத்தாள்.

கவிதா அறைக்குள் நுழைந்த போது அறையில் வெப்பம் ஏறுவதாக முல்லை உணர்ந்தாள். ஞாயிற்றுக்கிழமை கூட ஆறுமணிக்கெல்லாம் குளித்து வந்து "எழுந்திருங்க ரெண்டு பேரும்" என ஈரத்தலையை பிண்ணியபடியே எழுப்புகிறவளை முல்லையால் மன்னிக்கவே முடிந்ததில்லை.

"நான் ஏம்ப்பா உன்ன மாதிரி மொந்த வாழப்பழமாட்டம் இருக்கேன். போப்பா. அம்மாவப் பாரு எவ்வளவு அழகா இருக்கான்னு" என சரவணனைக் கடிந்து கொள்வாள்.

அவளை மடியில் தூக்கி அமர்த்திக் கொண்டு கவிதாவின் காதில் விழுவது போல "முல்லிக்குட்டி நாமெல்லாம் ரொம்ப ரொம்ப நல்லவங்கடா. உங்கம்மா மாதிரி எப்பவும் எரிஞ்சு எரிஞ்சு விழறவங்கல்லாம் அப்படித்தான் வெளுத்துப் போய் நோஞ்சானா இருப்பாங்கா" என அவன் சொல்லும் போது இருவரில் ஒருவருக்கு அடி விழுவது உறுதி.

"ஏய் எழுந்திருங்கன்னா" என மீண்டும் அதட்டுகிறவளிடமிருந்து யாருக்கு அடி கிடைக்கப் போகிறது என முல்லை யோசிக்கத் தொடங்கினாள். நன்றாக உறங்கும் போது குப்புறப் படுத்துக் கொண்டு அடிப்பதற்கு வசதியாக புட்டத்தை காட்டியபடி கிடப்பாள். ஆனால் இன்று விழிப்பு தட்டிவிட்டதால் மல்லாந்து படுத்திருந்தாள். மேலும் நம்பகத் தன்மையை கூட்டுவதற்காக உட்சிவப்பு தெரிவது போல மேலுதடு லேசாக தூக்கி இருப்பது போலவும் இடது உள்ளங்கையை பாதி மூடிய நிலையிலும் வைத்திருந்தாள். ஆகவே அடி நிச்சயம் சரவணனுக்குத்தான் என முடிவு செய்து கொண்டாள். அதோடு அவனும் புட்டத்தில் அடி வாங்கினால் எப்படி இருக்கும் என யோசித்துக் கொண்டிருக்கும் போதே சுளீரென சத்தம் கேட்டது. சற்று நேரத்தில் "யம்மோ" என அலறி எழுந்தபடி ஒரு கையால் புட்டத்தை தேய்த்துக் கொண்டு மறுகையால் முகத்தை சுளித்தபடி தலையை சொறிந்தபடி "எழுப்புனா எந்திரிக்க மாட்டனா. சும்மா அடிச்சிட்டே இருக்காத கவி" என்றவனை பார்ப்பதற்கு முல்லைக்கு பரிதாபமாக இருந்தது. எவ்வளவு முயன்றும் முடியாமல் "ம்க்கும்" என சிரித்துவிட்டாள்.

"அச்சச்சோ பாப்பாக்கு வலிச்சிடுச்சு போல" என கவிதா அவன் தலையைக் கோதினாள். போர்வையை கோபமாக உதறி பல் துலக்கப் போனவனை "ஏய் சரோ" என்ற கவிதாவின் சத்தமான குரல் நிறுத்தியது. தலையணையை உதறியவள் "யு ஆர் நாட் அ சைல்ட் சரோ" என சூடாக முறைத்தாள்.

சற்று நேரம் குழம்பி நின்றவன் "ஏய் இல்ல இல்ல. இது என்னோட பில்லோ இல்ல. என்னது மெரூன் கலர்" என பதறினான். முல்லைக்கு பயம் கொடுத்தது.

"மாட்டிவிட்டுட்டியேப்பா" என்பது போல சரவணனைப் பார்த்தாள்.

"உன்ட்ட எத்தன தடவ சொல்றதுடி" என்றவள் "போய் பிரஷ் பண்ணு" என திரும்பி நடந்தாள்.

"அப்பு அப்பு சரோப்பு சரோப்பு" என சரவணனின் பின்னே ஓடியவள் அவன் மேல் தொற்றி ஏறினாள். "சரோ அவள எறக்கி விடு" என்று அவள் இறங்கிய வேகத்தில் கவிதாவின் குரல் வந்தது.

"முல்லை வாக் பை யுவர்செல்ப்" என்றவன் அவளை மேலும் இறுக்கிக் கொண்டான்.

"சரிப்பா" என வாய்பொத்தி சிரிப்பை அடக்கியவள் கவிதாவின் குரல் வந்த திசை நோக்கி பழிப்பு காட்டினாள்.

"அப்பு எனக்கொரு கனவு வந்துச்சு" என்றவளை சரவணன் ஆச்சரியமாகப் பார்த்தான். அவள் கனவுகள் அத்தனையிலும் ஏதோவொன்று இடம் மாறியிருக்கும். கவிதா அவளை அணைத்துத் தூக்குவது போல ஒருமுறை கூட அவள் கனவு கண்டதில்லை. அவள் பார்க்கும் படங்களின் மிகப் பயங்கரமான வில்லன் கதாப்பாத்திரங்கள் பெரும்பாலும் கவிதாவாக உருமாறியிருக்கும். பல நாட்கள் கனவு கண்டு கொண்டே சிரிப்பாள். அந்நேரம் கவிதா அவளை அடித்தால் கூட அவளுக்கு வலிப்பதில்லை. ஆனால் மனிதர்களற்ற இக்கனவு சரவணனை திகைக்கச் செய்தது.

ஒழுகிச் சொட்டும் ஒரு துளி தேன். ஒவ்வொரு துளியும் தேனென்றான கனவு. தேன் மறைந்த உலகு. திமிறி வெளியேறக் காத்திருக்கிறது தேன். தேனைப் பிறப்பிக்கும் கருமலை. தேனாக எழுந்த பொன்மலை. மலையில் இருந்து உருகி வழியும் தேனோடை. தேனாறு. தேனருவி. தேன்கடல். தேனுலகு.

"அங்க போலாமாப்பா" என்றாள் முல்லைக்குட்டி.

"எப்படிம்மா" என்றான் சரவணன்.

"ரொம்ப சிம்பிள். என்ன நம்பி என் கூட வா" என்று அவனைக் கூப்பிட குரலில் முல்லை மட்டும் இருந்ததாக அவனால் நம்ப முடியவில்லை.

No comments:

Post a Comment