Sunday, 12 February 2017

மரணம் - ஒரு உரையாடல்



பொழுதுபோக்கு எழுத்துக்களின் முக்கியமான பங்களிப்பென்பது அவற்றால் ஒரு குறிப்பிட்ட நேர்மறையான மனநிலையை கட்டமைக்க முடியும் என்பதே. பொன்னியின் செல்வனில் ராஜராஜன் எங்கேனும் மது அருந்தினான் என்றோ யாரையேனும் கொல்ல ஆணையிட்டான் என்றோ எக்குறிப்பும் வராது. ஐந்து பகுதிகளாக வெளிவந்த அந்த நூலில் மிகப்பெரிய யுத்தம் கூட சித்தரிக்கப்பட்டிருக்காது. யுத்தத்தின் ரணங்களோ வன்முறைகளோ அந்த படைப்பில் தென்படாது. ஏறத்தாழ அதில் வரும் ராஜராஜனை எண்பதுகளின் தமிழ் வாத்தியாருக்கு உடைய குணங்கள் கொண்டவனாக பொருத்திக் கொள்ள முடியும். கேளிக்கை எழுத்துக்களில் அது அவசியமும் கூட. ஏனெனில் அவை பெரும் வாசகப் பரப்பை சென்றடைகின்றன. ஆகவே யாருடைய முகமும் சுளித்து விடாதபடி அவை இருக்க முடியும். கொலையைக் கூட வலிக்காமாலேயே செய்வார்கள். ஆனால் சமூகத்தின் மனநிலை கட்டமைப்பதில் அவற்றின் பங்களிப்பு மறுக்க முடியாதது.
தமிழில் பின் நவீனத்துவ போக்குகளின் பரவலாக்கத்திற்கு முன் பொன்னியின் செல்வன் மன்னன் மகள் வேங்கையின் மைந்தன் போன்ற படைப்புகள் அளவுக்கு ஒரு அரசாட்சியை ஒரு படை நகர்வை ஒரு அரசியல் சூழ்ச்சியை ஒரு பேரரசை ஒரு பேரரசனை தீவிர இலக்கிய படைப்புகள் சித்தரித்ததில்லை. கனவு லட்சியம் போன்றவற்றை இந்த கற்பனாவாத தன்மை கொண்ட படைப்புகளே மனதில் விதைக்கின்றன.  இப்படைப்புகளில் இருந்து முன்னகர்ந்தே தீவிரமான வாசிப்புக்கு வருகிறோம்.


டான் பிரவுனின் inferno-வும் வணிக கேளிக்கை எழுத்து வகையினதே. ஒரு புராதான நம்பிக்கை ஒரு அதிநவீன அறிவியல் பாய்ச்சல் பல விடுகதைகள். டான் பிரவுனின் ரெசிபி இதுதான். Inferno இந்த இலக்கணங்கள் கொண்ட படைப்பு தான் எனினும் அது எழுப்பும் ஒரு கேள்வி என்னை நிம்மதி இழக்கச் செய்தது. அக்கதையின் மையம் என்பது உலகின் மக்கள் தொகை கணக்கற்ற விகிதத்தில் பரவுவதால் அதனைத் தடுக்க வில்லன்(வழக்கம் போல் ஒரு விதத்தில் ஹீரோ) ஒரு மருத்துவ வழிமுறையைக் கண்டுபிடிக்கிறான் என்பது தான். அதை உலக சுகாதார நிறுவனத் தலைவருடன் பகிர்ந்து கொள்ளும் போது "என் பாட்டி இன்னும் சில நாட்கள் உயிருடன் இருக்கட்டும் என்ற ஒருவனின் எண்ணத்தால் மருத்துவ வசதி தேவைப்படும் பலர் இறந்து கொண்டிருக்கின்றனர்"என்ற ஒரு வசனம் வரும். மால்தூஸ் தொடங்கி பிறப்பு விகிதம் அதிர்ச்சியூட்டும் விதத்தில் பெருகியிருப்பதை அவன் விளக்கும் போது மனதில் மெல்லிய ஒரு அதிர்ச்சியை உணர்ந்தேன். அது பல வருடங்களுக்கு முன்பு. அதற்கு நண்பர் விஷ்ணு பிரகாஷ் மூலம் இன்று விடை கிடைத்ததாக நம்புவதால் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

செங்கல் கான்கிரீட்டை சிமெண்ட் கான்கிரீட்டாக மாற்றுவதற்காக மொட்டை மாடியில் இருந்த ஒரு பில்லரை உடைத்த போது அப்பாவிற்கு இடது கை கட்டை விரலில் சுத்தியல் விழுந்து கட்டு போட்டிருக்கிறது. இன்று ஞாயிற்றுகிழமை என்பதாலும் அப்பாவிற்கு கையில் அடிபட்டிருப்பதாலும் வீட்டு வேலைகளை நான் செய்ய வேண்டியிருந்தது. காலை எட்டரை மணிக்கு தோழி மேரி எர்னஸ்ட் கிறிஸ்டி "தீமையும் மானுடமும்" என்ற பெயரில் என் கட்டுரை jeyamohan.in-ல் வெளிவந்திருப்பதாக எனக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலை பார்த்த போது மகிழ்ச்சியாக உணர்ந்தேன். சற்று நேரத்தில் ஷாகுல் அழைத்து வாழ்த்தினார். அரிசி அரைக்க மில்லுக்கு சென்றது அம்மாவுடன் ஆஞ்சநேயர் கோவில் அப்பாவுக்கு மீண்டும் கட்டுப்போட மருத்துவமனை கோழிக்கறி வாங்க மீண்டும் வீட்டு வேலை செய்யவென மதியம் வரை நாள் விரைவாக ஓடிவிட்டது. மதியம் இரண்டரை மணிக்கு விஷ்ணு பிரகாஷ் அழைத்தார்.

பிரகாஷ் அனைத்தையும் கூர்ந்து கவனிப்பவர் என்பதை விஷ்ணுபுரம் விருது விழா குறித்த அவரது பதிவினை வாசித்தால் அறிய முடியும். பேச்சில் இருக்கும் அதே நிதானம் வெளிப்படுகிறது அவர் எழுத்திலும். நான் படபடவென பேசுபவன். அவர் எனக்கும் சேர்த்து இடைவெளிவிட்டு நிதானமாக உரையாடுபவர். சாதி குறித்து சிறிய கிராமங்களின் உருவாக்கம் குறித்து விஷ்ணுபுரம் விருது விழாவில் நிறைய பகிர்ந்து கொண்டார். என் கட்டுரை குறித்து சொல்லவே அழைத்திருக்கிறார். நான் அனைத்தையும் தொகுத்து சிந்திப்பதாக சொன்னார்.

தற்போது நான் வாசித்துக் கொண்டிருக்கும் ஆரோக்கிய நிகேதனம் குறித்து பேச்சு நகர்ந்தது. பிரகாஷ் முன்னரே ஆரோக்கிய நிகேதனத்தை வாசித்திருக்கிறார். என்னுடைய தோழியும் சக வாசகருமான கிறிஸ்டி ஆரோக்கிய நிகேதனம் படித்த பின் அவர் எழுதிய பதிவு jeyamohan.in-ல் வெளியாகியது. நான் படித்து முடிக்கும் வரை அவர் பதிவினை வாசிக்கக் கூடாது என ஒரு கட்டளை. இருந்தும் ஆர்வக் கோளாறில் அவர் எழுதியதன் முதல் வரியை வாசித்துவிட்டேன்.
"ஆரோக்கிய நிகேதனம் வாசித்தவர்கள் மகிழ்ச்சியாக மரணிக்கலாம்."

மாமங்கலையின் மலை என்ற நீண்ட பயணக் கட்டுரையின் தொடக்கமாக ஜெவும் மரணத்தைப் பற்றி சொல்லி இருந்தார். பிரகாஷும் ஆரோக்கிய நிகேதனம் மரணம் குறித்த ஒரு நாவல் என்பதை நாவலில் வரும் ஒரு தொன்மத்தின் வழி சொன்னார். கடவுள் பிறப்பு மற்றும் இறப்பிற்கான தேவதைகளைப் படைத்தார். இறப்பின் தேவதைப் பெயர் ரிபு. அவளுக்கு வருத்தம். பிறப்பு எல்லா இல்லங்களிலும் மகிழ்ச்சியைக் கொண்டு வரும். ஆகவே அவளை அனைவரும் விரும்பி ஏற்பார்கள். இறப்பை யாரும் கோரிப் பெற விரும்பமாட்டார்கள். ஆகவே நான் வெறுக்கப்படுவேன் என்கிறாள் ரிபு. கடவுள் சொல்கிறார் மரணத்தை விடுதலையென மனிதர்கள் கோரிப் பெரும் நிலை மண்ணில் உருவாகும். நீ விரும்பப்படுவாய் என. மரணத்தை ஒரு விடுதலையாகக் காண்பதை பிரகாஷ் பல வழிகளில் வார்த்தைகளில் சொன்னார். அதில் என்னை மிகவும் ஈர்த்த சொல் "மரணிக்க தயார்படுத்திக் கொள்ளல்" என்பது.

மேலை மருத்துவம் மரணத்தை ஒத்திப் போட தவிர்க்க மரணத்தை அறைகூவுவதையே திரும்பத் திரும்ப முயல்கிறது. மரணத்தில் இருந்து மீள்வதை ஒரு பெரிய வெற்றியாகவே கொள்கிறது. எதுவரை? என்ற கேள்வியின் முன் அஞ்சித் தயங்குகிறது. ஆனால் நம் மரபு ஆற்றுவதை மட்டுமல்ல அமைந்து இறப்பதையும் அறமென்றே வகுக்கிறது. இறப்பை எண்ணிப் பார்க்கச் சொல்கிறது. வெண்முரசு வாசிப்பவர்களுக்குத் தெரியும் அதில் தொடர்ச்சியாக பல கானேகல்கள் இடம்பெற்றிருக்கும். தேவாபி , சத்யவதி , அம்பிகை , அம்பாலிகை , பாண்டு , குந்தி என நீளும் கானேகல் விதுரர் , திருதராஷ்டிரர் , பாண்டவர்கள் என தொடரப் போகிறது. இவர்களில் சிலர் தவிர பிற அனைவரும் எதையும் ஆற்றாமல் வாழ்விலிருந்து தப்பிக்க காடமைந்தவர்கள் அல்ல. கடமைகள் முடிந்தபின் ஒவ்வொன்றாக உதிர்த்துக் கடந்து செல்பவர்கள்.

இச்சிந்தனை என்னை பெரும் ஆசுவாசத்திற்கு உள்ளாக்கியது. இன்னும் சில வருடங்களிலோ சில மாதங்களிலோ என் பெற்றோரின் முதுமையை எதிர் கொள்ளப் போகிறேன். அவர்களுடைய தேவையை நான் முழுதுணர்ந்தவன் அல்ல. ஆனால் இயல்பாகவே அவர்கள் மனம் அமைய விரும்புவதை என்னால் காண முடிகிறது. கிராமங்களில் இயல்பாக ஒரு சொலவடையைக் கேட்க முடியும்.
"கட்டைக்கு கால் நீட்டப் போற வயசுல உனக்கு எதுக்கு இந்த ஆட்டம்" என்பார்கள். சொல்பவருக்கோ சொல்லப்படுபவருக்கோ அறுபது வயது கூட ஆகி இருக்கிறது. மிக வயதானவர்களிடம் பெரும்பாலும் இறப்பைப் பற்றியே பேசுவார்கள். அவர்களும் அவ்வுரையாடலில் ஒரு உள்ளார்ந்த மகிழ்ச்சியுடன் பங்கேற்பதை நான் பார்த்திருக்கிறேன். முதுமையை ஒரு விடுபடலாக கொண்டாட்டமாக மாற்றிக் கொண்ட பலரை என்னால் இப்போது நினைவு கூர முடிகிறது. புரையேறி சிரிக்க வைக்கும் பல கெட்ட வார்த்தைகளை வசவுகளை அவர்களிடமிருந்து கேட்க முடியும். ஆனால் அவர்களை விட பத்து பதினைந்து வயது இளையவர்கள் அவர்களிடம் ஒரு அமைதி இன்மையை உருவாக்குவார்கள். காரணம் எங்களைப் போன்ற சிறுவர்களை அவர்கள் "கெடுத்து" விடுவார்களாம். ஆனால் கிராமத்தில் இருந்தாலும் தனித்தே வாழும் என் பெற்றோரின் முதுமை என்னை சற்றே பதற்றத்துக்கு உள்ளாக்குகிறது. நகரத்தினர் முதுமை எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பது மேலும் குழப்பத்தை அளிக்கிறது. உடல் வலு இல்லாத முதியவர்களிடம் பரிவுடன் நடந்து கொள்ள எல்லோராலும் முடியாது. மேலும் தனிமையே அவர்களை மேலும் சோர்ந்து போனவர்களாக உற்சாகம் குன்றியவர்களாக மாற்றி விடாதா?
முதியவர்களிடம் ஒரு குணத்தை அவதானித்திருக்கிறேன். தங்கள் பங்களிப்பென ஏதேனும் தன் பிள்ளைகளின் வாழ்வில் இருக்க வேண்டுமென விழைவார்கள். மேலும் மேலும் வெறியுடன் அவர்களை வாழ்வுடன் பிணைக்க வைக்க நினைப்பது அவர்கள் மீதான புறக்கணிப்பே. மெல்ல மெல்ல வாழ்க்கைப்பாடுகளில் இருந்து அவர்களை விலக்கி வாழ்வின் கொண்டாட்டத்தை மட்டுமே அவர்களுக்கு கொடுப்பதே முதுமைக்குச் செய்யும் மிகப் பெரிய மரியாதையாக இருக்க இயலும். இருந்தும் அதுவும் கத்தியின் மேல் நடக்கும் பயணமே. ஏனெனில் நம்மைத் தூக்கி வளர்த்த ஆணவம் அவர்களிடம் உண்டு. அதனை உடைத்தால் வாழ்வென அவர்களிடம் எதுவுமே எஞ்சாது. மெல்ல அதனைக் கரைப்பதே சரி.

சிறிய விஷயங்களில் இருக்கும் அழகை ரசிப்பவர்களாக மெல்லியவற்றை மட்டுமே ரசிப்பவர்களாக மரணத்தைக் கூட சலிப்போடு அல்லாமல் நிறைவோடு ஏற்றுக் கொள்பவர்களாக நாம் யார் கையில் தவழ்ந்தோமோ யார் முலையை உறிஞ்சி வளர்ந்தோமோ யார் மடியில் படுத்து கதை கேட்டேமோ யார் தோளில் அமர்ந்து உலகைக் கண்டோமோ அவர்களை மாற்றவது நம் கடன். முதுமையில் இருந்து யாரும் தப்பப் போவதில்லை. இப்படி ஒரு கலாச்சாரத்தை நம்மால் கடைபிடிக்க முடியுமெனில் அடைந்தவற்றை உதிர்க்க முடியுமெனில் மால்தூஸையும் மக்கள் தொகை பெருக்கத்தையும் கூட வெற்றிகரமாக எதிர்கொண்டு விட முடியும் என்றே தோன்றுகிறது.

வாழ்வை முடிவற்று அனுபவிக்க வேண்டிய ஒரு நுகர்வுப் பண்டமாக உருவகிப்பதே வளங்கள் சுரண்டப்பட்ட இன்றைய உலகின் மிகப்பெரிய அற மீறல். காலணிய நாடுகளில் மேற்கத்திய சிந்தனைகள் வலுவாக ஊன்றி அச்சிந்தனைகள் தம் சுவடுகளை இந்த நூற்றாண்டில் இழக்கத் தொடங்கி இருக்கின்றன. நுகர்வுக்கு எதிரான குரலும் மேற்கில் ஒலிக்கவே செய்கிறது. ஆனால் நாம் அதைக் காதில் வாங்குவதில்லை. வெறியுடன் நுகர்வதை ஒரு கலச்சாரமாகவே மாற்றிக் கொண்டுள்ளோம். நகர்புற இந்தியாவின் மத்தியத் தர குடும்பங்களில் முதுமையைக் கையாள்வதில் உருவாகி இருக்கும் சிக்கலுக்கு இந்த நுகர்வு மனநிலையும் ஒரு காரணம். நுகர்ந்து நுகர்ந்து அடையப் போவது ஏதுமில்லை என்ற உண்மையை உணர்ந்து கொள்வது நல்லது. ஏனெனில் நுகர்வில் ஊறிய ஒரு தலைமுறை முதுமை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அதீத நுகர்வை தீங்கென்று கூட எண்ணத் தெரியாத தலைமுறையாக இருக்கிறது என் தலைமுறை.
வாழ்வை முடிவற்றதாக காணும் அபத்தத்தை குறைத்து அர்த்தமுடையதாக அடைவதோடு அதை விட வேண்டியதையும் எண்ணிக் கொள்வதாக அமைத்துக் கொள்வதே சரி. குறளுரையில் ஜெயமோகன் வானவன் மாதவி குறித்துச் சொல்லி இருந்தார். நாட்கள் எண்ணி வழங்கப்பட்ட ஒரு வாழ்வை வாழ்ந்தவர். அவருக்குத் தெரிந்தே இருந்தது தனக்கு காலம் குறைவென. அதனாலேயே நம்முடைய விரிந்த வாழ்வைக் கொண்டும் செய்ய முடியாத பணிகளைச் செய்து விட்டு முப்பத்தெட்டு வயதில் நிறைவுடன் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளார் அந்த சகோதரி. முழுமையான வாழ்வு நிச்சயம் வாழும் நாட்களில் இல்லை. வாழ்விடம் இருந்து பெற்றதிலும் திருப்பி அளிப்பதிலுமே இருக்கிறது என்பதே வானவன் மாதவி போன்ற மகத்தானவர்கள் நம்மிடம் சொல்லி விட்டுச் செல்லும் செய்தி போலும்.

No comments:

Post a Comment