Thursday 17 May 2018

அபி - கடிதங்கள் 2

அபி-சிறுகதை

அன்பு சுரேஷ் பிரதீப்பிற்கு,

நலமா? அபி சிறுகதை வாசித்தேன். நன்றாக இருந்தது. அக சிக்கல்களை அழகியலோடு சொல்லியிருக்கிறீர்கள். உரையாடல்களும் சம்பவங்களும்

யாருக்கிடையே இடம் பெறுகின்றன என்பதை விளக்காதிருந்ததே கதையை மேலும் உன்னிப்பாக வாசிக்க தூண்டியது.

அபி என்னும் கதை என்ற ரீதியில் பார்க்கையில் சிறப்பாகவே இருந்தது ஆயினும் ஏற்கனவே உங்கள் கதைகளின் சாயல் இதிலும் தொடர்வதாக தோன்றியது. வடிவத்தில் ஆழத்தில் மிதப்பதை ஒத்ததாகவும் அபியின் கதாபாத்திரம் ஒளிர்நிழலின் அருணாவை ஞாபகப்படுத்துவதாகவும் இருந்தது. 

அன்புடன்,

அனு

அன்புள்ள அனு 

நான் நலம். நீங்கள் நலமா?

இது  நான் எண்ணிக் கொண்டிருந்ததும் கூட. ஆழத்தில் மிதப்பது இக்கதைக்கு பிறகுதான் எழுதினேன். உடனடியாக எழுதியதால் வடிவச்சாயல் தென்படலாம் என்று தோன்றுகிறது. மேலும் அருணாவிற்கும் அபிக்கும் ஒரு வகையில் ஒற்றுமை உண்டு. இரண்டு பெண்களையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது மற்றொரு ஒற்றுமை. 

நீங்கள் என் புனைவுகளை தொடர்ந்து வாசிப்பது மகிழ்வளிக்கிறது. இக்கதை குறித்து இத்தகைய ஒப்பீடு இதுவரை வரவில்லை. அவ்வகையில் இது மிக முக்கியமான அவதானிப்பாக எனக்குப்படுகிறது.

அன்புடன் 

சுரேஷ் பிரதீப் 

பாஸ் எப்படி பாஸ் உங்களால் இப்படி எல்லாம் எழுத முடியுது. இதை இரண்டு தரப்பினரும் மறுக்க வாய்ப்புண்டு. ஆண் இந்த கதையில் ஊறுகாய் போன்றே வருகிறான். அதனால் என்னை போன்ற ஆணாதிக்கவாதிகளின் மனம் பதிக்கப்படும் அபாயங்கள் உண்டு. பெண்ணின் அக உலகத்தில் குரூரத்தை காட்டியதால் பெண்ணியவாதிகளும் இதை கடுமையாக சாடுவார்கள். இரண்டு பேருமே எதிர்க்கும்  எழுத்து இது. பெண்ணுக்கு பாதுகாப்பாக வேலையும் வலிமையாக கல்வியும் இருக்கும் பட்சத்தில் ஆண் வெறும் இனவிருத்தி காரணி என  செவுளில் அறைகிறது இக்கதை.அக்கால குரங்கு மனிதனின் இயல்பில் இருந்து பிய்த்துக் கொண்டு வெளியேறுகிறது கதை.

ஜெயவேல்

அன்புள்ள   சுரேஷ் அவர்களுக்கு

திருச்சியில் இருந்து daisy. நான் தங்களின் அபி கதையை படிப்பதற்கு முன்னால் லோகமாதேவி அவர்கள் எழுதிய கடிதம் படித்தேன். அதில் இருந்து கதை ஒரு நடுத்தர வயதில் வரும் ஒரு சலனத்தைப் பற்றி பேசும் என்று நினைத்து கதையை படித்தேன். சற்று ஏமாற்றம்.

அபி புதிதாய் கல்யாணம் முடித்த இளம்பெண்தான். கணவனோடு 
வெளிநாட்டிற்கு போகததற்குக் காரணமே வேறு ஒரு தோழமை தான்.

மனைவியின் நடத்தை தெரிந்தும் கோபப்படாமல் விசாரிக்கிற ஒரு கணவன். ஆனால் அபி விரும்புவது சற்று முரட்டுத்தனமான  ஆண்பிள்ளையையோ என்று தோன்றுகிறது.

 அபிக்கும் அர்ச்சனாவுக்கும் இடையில் இருப்பது வேறு மாதிரியான உறவு என்றுதான் நான் புரிந்துக் கொண்டேன். எவ்வளவு நெருக்கமான தோழிகளாய் 
இருந்தாலும் மார்போடு கட்டி அணைத்துக் கொண்டு தூங்குவது கொஞ்சம் அதிகம்தான். இதில் 
இருந்துதான் நான் அவர்கள் உறவைப் பார்க்கிறேன். அபியை அனுமானிக்கவே முடியவில்லை. 

அரசனை நம்பி பழமொழிபோல். திருமண வாழ்வின் தொடக்கத்தில் எல்லோருக்கும் சரீரத்திலும், மனதிலும் சிற்சில பிரச்சினை எழுவது சகஜம். 

அதை மேற்கொண்டு நின்றால் நிறைய பெரிய குழப்பங்களைத் தவிர்க்கலாம். தேவி அவர்கள் சொன்னதுபோல் கணவனின் குரல் வெளிப்படவே இல்லை.

 வாழ்த்துகளுடன்.

-- 

With Regards,

T.Daisy,

Trichy. 

No comments:

Post a Comment