Wednesday 16 May 2018

அபி - கடிதங்கள்

அபி - சிறுகதை

அபி நவீன கற்பு உடைந்த சீதை!அவள் ஒரு தொடர்கதை கவிதாவின் நீட்சி!அபி ஶ்ரீராமை மணமுறிவு செய்து விட்டு,சரணுடன் பழகி சரணுடனும் அவள் பிரிவு கொண்டு அவன் திருமணத்துக்கு சென்று வாழ்த்தி விட்டு அர்ச்சானாவிடம் வேலையை விட முடியாது சேஃப்டிக்கு இருக்கட்டும் என கூறுவதில் சேஃப்டி என்பது ஒரு பெண்ணுக்கு வேலையா,இல்லை தன்னை உடல் தாண்டி உண்மையாக நேசிக்கும் நேர்மையான ஆண்மையா எது என்பது அபியின் பார்வை கொண்டு பார்த்தால் தான் நாம் உணர முடியும்.ஒரு பெண்ணுக்கு சுகமும்,சுதந்திரமும் வெறுமனே வியர்வை வெளியேற்றும் அவள் குறியும்,அவன் குறியும் உரசி உராய்வு கொள்வதில் இல்லை.அது நம் எதிரில் உறவாடுபவர்களின் புனிதமான புரிதலில் இருக்கிறது.இந்த சமூகம் பெண்கள் மீது படிய வைத்திருக்கும்,படிய வைக்க முயற்சிக்கும் நூற்றாண்டு கடந்த அழுக்கு படிமங்களின் பிம்பங்களை உடைத்து வாழ நினைக்கும் தனித்துவமான நவீன அழகியாக இந்த அபியை நான் பார்க்கிறேன்.அபி அருமையான கதை பதிவு சுரேஷ் பிரதீப் சார்.உங்கள் கதையை என்னளவில் இப்படி தான் உள்வாங்கி உள்ளேன்.நான் மேற்சொன்ன பதிவு உங்கள் கதை உணர்த்தும் உள்ளார்ந்த அர்த்தத்திற்க்கு சம்பந்தமில்லாமல் போனால் அது என் இலக்கிய அறிவு போதாமையாக கூட இருக்கலாம்.பொறுத்துக் கொள்ளுங்கள்.ஒரு சேஃப்டிக்கு தான்.வாஞ்சையுடனும், வாழ்த்துகளுடனும் நான்.

வேலு மலையன்

சுரேஷ் பிரதீப், உங்கள் 'அபி' கதையை படித்தேன்.. எனக்கு நீங்கள் சொல்ல வந்தது சரியாக இந்த கதையில் வெளிப்படவில்லை என்று தோன்றுகிறது.

இன்றைய 'நவீன' பெண்களில் ஒரு கும்பலே நிஜ முட்டாள்கள், ஆண்களுக்கு நிகராக. ஒரு வேளை அதை தான் சொல்கிறீர்களா என்று தோன்றுகிறது.

என்றாலும் உங்கள் கதையில் சிறந்தது என்று எனக்கு தோன்றவில்லை.

அபிநயநாதன் யார் என்று யோசித்தேன் - பின் அது  'அபிநயா தான்' என்று புரிந்து கொண்டேன்.

தவிர, வார்த்தைகளில் கொஞ்சம் பால் குழப்பம் தட்டச்சினால் உள்ளதோ என்றும் தோன்றியது.. அது பிழைகள் அல்ல.. narration தாண்டி குதித்து போகும் போது எனக்கு வரும் குழப்பம்...  2ம் முறை படிக்கும் போது அவை இல்லை... அச்சு, சரண், அபி, அச்சு, அபி என்று கதையை சொல்கிறார்கள்.

கண்விண்ஸ் convince என்கிற வார்த்தை கன்வேயன்ஸ் conveyance என்று பதிந்து இருக்கிறதா?

-----

இன்னும் ஒன்றும் தோன்றியது.. சரியா என்று தெரியவில்லை

விடுதியில் தங்கி வேலை பார்க்கும் சக பெண் நண்பர்களின் நட்பு என்று ஒரு விஷயம் உண்டு.. அந்த இடைவேளை பெண்களுக்கு ஒரு சுதந்திரம்... அப்பா கட்டுப்பாடும் கிடையாது  கணவன் மாமியார் தொல்லையும் இல்லை..  குழந்தையில் சரியான அன்பு கிடைக்காத பெண்ணுக்கு அந்த வாழ்க்கை ரொம்ப பிடித்தும் போக வாய்ப்பு உண்டு.  அது ஒரு அளவு நன்றாக வந்துள்ளது.

அந்த நட்பு சில எல்லைகையும் மீறும் நட்பாக ஆகலாம் என்று எக்கு தப்பாக யோசிக்க தோன்றுகிறது.. பணத்துக்கு ஒரு பேக்கப் போல,  அச்சு ஏன் அபியின் ஒரு பேக்கப்-ஆக இருக்க கூடாது ?

ராகவ்

அன்புள்ள ராகவ்

கடைசி வரியில் நீங்கள் சொல்லியிருக்கும் சாத்தியத்தை மற்றொரு நண்பரும் சொன்னார். ஆனால் அது அவ்வகையிலானதாக எனக்குத் தோன்றவில்லை.

மேலும் இது பரஸ்பர முட்டாள்தனங்களின் அன்பிற்கான ஏக்கத்தின் கதைதான். எதுவரை சென்று பார்க்க முடிகிறது ஒருவர் மற்றொருவரின் அந்தரங்கத்துக்குள் என்ற வகையில் தான் எழுதியிருந்தேன்.

மேலும் இந்த narration இயல்பாக அமைந்தது. சவால் அளிக்கக்கூடிய வடிவம் என்று மெனக்கெடுவதில்லை. எளிமையான கதைகூறல்களில் இருந்து "தப்பிச் செல்லவதற்கான" ஒரு விருப்பம் என்ற வகையில் தாவித்தாவி போகிறேன்.

சுரேஷ் பிரதீப்

No comments:

Post a Comment