Pages

Monday 13 June 2016

கரைந்த நிழல்கள் ஒரு வாசிப்பனுபவம்

அசோகமித்திரனின்  கரைந்த நிழல்கள்  நாவலின்  கதை  அல்லது  “கரு” என்ன  என்று அந்த நாவலைப்  பற்றி  சொல்லப் போய் யாரும்  என்னிடம் கேட்டுவிடக்  கூடாது  என்பதற்காக  அந்நாவல் குறித்து  எழுதி  விடலாம்  என்று  முடிவு  செய்து  கொண்ட பின்  எழுதுகிறேன்.



விரைவாக  வாசிப்பவர்கள்  அரை நாளில்  வாசித்துவிடக்  கூடிய  அளவிற்கான  சிறிய  படைப்பு கரைந்த  நிழல்கள். “முக்கியத்துவம்” அற்றவர்களை  பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும்  களம். திரைத்துறையினர்  படும்  இன்னல்களை  எடுத்துரைக்கும்  உன்னதப் படைப்பு  என்று  ஒற்றை வரியில்  குறுக்கிக்  கொண்டு  கடந்து சென்றுவிட  முடியாத  நாவல். ஒரு காட்சி  படமாக்கப்படுவதற்கான முன் தயாரிப்புகளை  விவரித்த  வண்ணம் உரையாடல்கள்  வழியாக  அறிமுகமாகிறது   முதல்  அத்தியாயம். தயாரிப்பு  பணியில் ஈடுபட்டிருக்கும்  ஊழியர்கள்  பேசிக்  கொண்டே  இருக்கிறார்கள். ஒரு சில  வார்த்தைகள் மட்டும் பாத்திரங்களுக்கு வெளியிலிருந்து  ஒலிக்கிறது.  உரையாடல்கள்  வழியாகவே  சூழலின்  அடர்வு  மெல்ல மெல்ல  ஏறி வருகிறது. நடனமாடும்  பெண்கள்  ஸ்டுடியோ மேலாளர்  வாகன ஓட்டுநர்  அரங்க மேலாளர் இயக்குநர்  இசையமைப்பாளர்  என ஒவ்வொருவரும்   ஒரு செயல் நடந்து  முடிவதற்காக ஒருங்குகிறார்கள். அதற்குள்ளாக  சம்பத் என்றொரு  தயாரிப்பு  உதவியாளரின்   பார்வையிலும்  தயாரிப்பாளர்   பார்வையிலுமாக காட்சிகள்  விரிகின்றன. காட்சியை  முடிப்பதில்  சிக்கல்  தயாரிப்பாளரான  ரெட்டியாரின் பிரச்சினைகள்  நாயகியை  அவர் சந்திக்கும்  காட்சி  என திடீரென   வேறொரு   தளத்தில்  கதை நகர்ந்து  அதிர்ச்சி  அளிக்கிறது. அந்த நாளுக்குப்பின்  அந்நாளுடன் தொடர்புடையவர்கள் பின்னர்   தொடர்பு   கொள்ளப்  போகிறவர்கள்  என ஒவ்வொருவரையும்   தொட்டுத் தொட்டு நகர்கிறது. ஒவ்வொரு  இடத்திலும்   உருவாகியிருக்கும்  இடைவெளிகளை இட்டு நிரப்பாமல்  முன்னகரவே இப்படைப்பு  அனுமதிக்கவில்லை.  ஒரு காட்சி  கைவிடப்பட்டதோடு அப்படமும்  கைவிடப்படுகிறது.  அதற்கு  பிறகு  நடைபெறுபவற்றை ஒரு சில உரையாடல்கள்   வழியாக   வாசகர்   ஊகத்துக்கே  விட்டு   விடுகிறது   இப்படைப்பு. உதவி  இயக்குநரான  ராஜகோபால் வேலை இழந்து அல்லல்படுகிறான். சம்பத்  கிடைத்த வாய்ப்பினைக் கொண்டு மேலேறுகிறான்.

ராம ஐயங்கார்  நின்ற படத்தை  தொடங்க நினைக்கிறார். பாதியில்  விட்டுப்  போன காட்சியின்  மிச்சங்களை  சிமெண்ட்  அடுக்குவதற்காக  எடுத்தெறிகிறார்கள். விடப்பட்ட காட்சியின்  கிளாப்  போர்டையும் சில காகிதங்களையும் முனுசாமி  எடுத்துக்  கொள்கிறான். ராம ஐயங்காருக்கு  சில சிக்கல்கள்  எழுகின்றன. அவர் மகனுடன்  ஒரு சம்பாஷணை  நடத்துகிறார். கதையாக  தொகுக்க  நினைத்து சுருக்கிக்  கூறினாலும்  இப்படித்தான்  கரைந்த  நிழல்கள்  குறித்து  கூற முடியும். பாட்டிக்கதை போல் அல்லது “சுபம்” போட்டு முடிக்கும்  திரைப்படம்  போல வாழ்க்கை  இல்லாதது  போலவே  இந்தப்  படைப்பும்  தெரிகிறது. செல்லும்  இடங்கள்  சந்திக்கும்  மனிதர்கள்  என எதிலும்  நான் பார்க்கையில்  அல்லது  சந்திக்கையில் எது கிடைக்கிறதோ அதை வைத்து நமக்கான  முழுமையை  (அல்லது  அப்படி  நம்பப்படுவதை) நாம்  வகுத்துக்  கொள்வதைப் போலவே  இந்நாவலும் வாசகனிடம் செய்யச்  சொல்கிறது. முப்பது  கடந்து நரை தென்படும்  ஒரு உதவி இயக்குநரும்  “பஞ்சர்” ஆகு‌ம்  அவன் சைக்கிளும் நாற்றமடிக்கும் நடனப்  பெண்களும்  அப்பாவின்  தோல்விகளை குத்திக்  காட்டாத  மகனும்  குடித்து நியாயம்  சொல்லி அப்பாவை  வெறுக்கும்  இன்னொரு மகனும்  என ஒவ்வொருவரும்   அவர்களாகவே  அறிமுகமாகி  தொலைந்து போகின்றனர்.

ராம ஐயங்கார்  அவர் மகனிடம்  நிகழ்த்துவது  நீண்ட சம்பாஷணை  ஆயினும்  அது ஒரு தலைமுறை  வரும் தலைமுறைக்கு விடுக்கும்  எச்சரிக்கையாக  எடுத்துக்  கொள்ளக்  கூடியது  என்பதைத்  தாண்டி  “எதுவும் திடீரென  மடிவதில்லை. எதுவும்  திடீரென  பிறந்து  விடுவதுமில்லை” என்பது  ஒரு சுய பரிசோதனைக்கான அறைகூவலாகவே எனக்குப் படுகிறது.

பரபரப்புடன்  தொடங்கி  சில சிக்கல்கள்  ஏற்பட்டு  “வேஸ்ட்  பிலிம்” ஆக ஒருவர்  கையில்  ஒரு திரைப்படம் கிடைக்கும்  வரை பயணிக்கிறது  எனச்  சொல்லலாம் இந்நாவலை.ஆனால்  அது மட்டுமில்லை  என்பதே  மீண்டும்  அந்த நாவலை கையிலெடுக்கச் செய்கிறது. 

No comments:

Post a Comment